தி ஸ்மைல் மேன்: விமர்சனம்: அசத்தல் த்ரில்லர்!

தி ஸ்மைல் மேன்: விமர்சனம்: அசத்தல் த்ரில்லர்!

ஒவ்வொருத்தராக கொன்று, அவர்களது உதடுகளை வெட்டி எறிந்துவிட்டு அவர்களது பல்வரிசை தெரியும்படி முகத்தைச் சிதைத்து, பொது இடத்தில் வீசி விட்டுச் செல்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன். அவனால் விபத்துக்கு உள்ளாகும் காவல்துறை அதிகாரியான சிதம்பரம் நெடுமாறன், ஐந்து வருடங்களுக்குப் பிறகு, ‘தி ஸ்மைல் மேன்’ எனும் கொலைகாரனைப் பிடிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறார்.

அந்த கொலைகாரன் யார்… ஏன் இப்படி தொடர் கொலைகளில் ஈடுபடுகிறான் என்பதை திக் திக் திரைக்கதையில் சொல்லி இருக்கிறது, ஸ்மைல் மேன்.காவல்துறை அதிகாரியார சரத் குமார். இளமையும் கம்பீரமும்தான் அவரது ஸ்பெசல். அதுவும் காவல் அதிகாரி வேடமென்றால் கேட்க வேண்டுமா.. பின்னிப் பெடலெடுத்துவிட்டார் சரத். காரசாரமான போலீஸ்காரராக மட்டுமல்ல… குழந்தையிடம் பாசத்தைக் காட்டும் அன்பான மனிதராகவும் நடிப்பில் ஜொலித்து இருக்கிறார். அதோடு, கொலைகாரனுடன் மோதும் சண்டைக் காட்சிகளிலும் மிரட்டுகிறார். அதுவும் மறதி நோயால் பாதிக்கப்படும் காட்சிகளில் முத்திரை பதிக்கிறார்.

புலனாய்வு செய்யும் அதிகாரி கீர்த்தனாவாக வருகிறார் ஷிஜா ரோஸ். கதைக்குள் அவர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.. ஆனாலும் அழகால் வசீகரிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் வரும் ராஜ்குமார் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.

நல்ல பெயருடன் ஓய்வு பெறும் என்று திட்டமிட்டு, சிக்கலில் சிக்கும் அதிகாரியாக சுரேஷ்மேனன் வருகிறார். பாந்தமான நடிப்பு. அவரது மகன் அரவிந்தாக நடித்துள்ள ஸ்ரீ குமார், காவல் அதிகாரியாக சிறப்பாக நடித்து உள்ளார்.

வில்லன் குறித்து சொல்ல வேண்டாம். படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் அந்த வில்லன் சிறப்பாக நடித்து உள்ளார் என்பதை மட்டும் இப்போது சொல்லலாம்.

ஒளிப்பதிவும் இசையும் படத்துக்கு பலம். எடிட்டிங் கச்சிதம்.

கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்தது, இறுவரை பரபரவென அமைத்த திரைக்கதை என்று அருமையான சைக்கோ த்ரில்லரை அளித்து இருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான ஷ்யாம் – ப்ரவீன்.

க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு முத்தான படம் இது. சரத்குமாரின் 150வது படம் என்பது கூடுதல் சிறப்பு.