தந்த்ரா: திரை விமர்சனம்
எஸ் ஸ்கிரீன் சார்பில் சுஷ்மா சந்திரா தயாரித்து, ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிட, வேதமணி இயக்கத்தில், அன்பு மயில்சாமி, பிருந்தா, சுவாமிநாதன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தந்த்ரா. கணேஷ் சந்திரசேகரன் இசை அமைக்க, ஹாபிஸ் எம்.இஸ்மாயில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மாந்த்ரீிகம், காதல், சென்டிமெண்ட் ஆகிய மூன்றையும் சரி விகிதத்தில் கொடுத்து கவர்ந்திருக்கிறார்கள்.
தீய சக்திகளை வழிபடும் பெண் மந்திரவாதி, பெரும் புதையலை அடைய நாயகி அபிராமியை நரபலி கொடுக்க திட்டமிடுகிறார். நாயகியை காப்பாற்ற நாயகன் உள்ளிட்டோர் நல்ல சக்திகளை நம்பி களமாடுகின்றனர்.
நல்லவர்கள் வென்றார்களா என்பதே சுவாரஸ்யமான திகில் கதை.
நாயகன் அன்பு மயில்சாமிக்கு இது முதல் படம் என்பதையே நம்ப முடியவில்லை. அதிரடி மட்டுமின்றி ஆரவாரமில்லா நடிப்பிலும் ஜொலிக்கிறார். ஜாலியான இளைஞனாக வலம் வருவது, பிறகு காதலியை நினைத்து உருகுவது, அவரை காப்பாற்ற பதட்டத்துடன் துடிப்பது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மாய வில்லியாக மிரட்டி இருக்கிறார் நிகாரிகா. தான் நினைத்ததை அடைய – நரபலி உட்பட – எதையும் செய்ய தயாராக இருப்பது.. தனது இச்சையை தீர்க்க வழி தேடுவது என அச்சத்தை ஏற்படுத்துகிறார்.
நாயகி பிருந்தா அழகாக இருக்கிறார். அளவோடு நடிக்கிறார். பாடல் காட்சிகளில் கண் இமைக்கும் நேரத்தில் கவர்ச்சி காட்டி விளையாடுகிறார்.
பெண் மந்திரவாதியின் ஆண் உருவமாக வரும் ஜாக்கும் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நிழல்கள் ரவி, லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
கணேஷ் சந்திரசேகரன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. மாந்த்ரீக படத்துக்கு ஏற்ற பின்னணி இசையை அளித்து இருக்கிறார்.
ஹாபிஸ் எம்.இஸ்மாயில் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
இயல்பான காதல் கதையாக துவங்கி, அதிரடி மாந்த்ரீகத்தை புகுத்தி ரசிக்க வைக்கிறார் இயக்குநர் வேதமணி. சின்ன பட்ஜெட் படம் என்பதால் சில குறைகள் இருந்தாலும், அவற்றை தாண்டி, ரசிக்கவைக்கிறார்.
அந்த வகையில், திகில் பட ரசிகர்களுக்கு தந்த்ரா, சிறப்பான விருந்து.
ரேட்டிங்: 3.6/5

