தங்கலான்: விமர்சனம்: பளபளக்கிறதா, தடதடக்கிறதா?

தங்கலான்: விமர்சனம்: பளபளக்கிறதா, தடதடக்கிறதா?
விக்ரம் நடிப்பு.. மிரட்டல். அதே போல பார்வதியும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
பசுபதி நல்ல நடிகர்தான். ஆனால் செயற்கைத்தனமாக படைத்து இருக்கிறார்கள். மாளவிகா மோகனன் சூனியக்காரி – கற்பனை கதாபாத்திரம் – என்பதால் நடிப்பைப் பற்றி சொல்ல முடியவில்லை. அது இயக்குநரின் கற்பனை. ( ஆனால் அவர் அடிவயிற்றில் இருந்து கத்துவதும், புயல் வருவதும் சீரியஸான காட்சி என்றாலும் சிரிப்பு வருகிறது. காரணம், இதே போல கலகலப்பு படத்தில் கத்தி, கூப்பாடு போட்டு புயலை வரவைப்பார் அஞ்சலி. அந்த நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது.)
படத்தின் இன்னொரு கதாநாயகன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். பாடல்களும், பின்னணி இசையும் அபாரம்.
ஒளிப்பதிவும் சிறப்பு. பல காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. அதே நேரம் சில காட்சிகள், ரொம்ப சுமார். காரணம், ஒளிப்பதிவுக்கு ஈடாக கிராபிக்ஸ் காட்சிகள் இல்லை. படத்தில் வரும் பாம்புகளும், ஒரு கருஞ்சிறுத்தையும் வரும் காட்சிகள் உதாரணம்.
காலம் காலமாகச் சொல்லப்படும் மாயாஜால கதைதான், படத்தின் அடிப்படை. அதில் சூனியக்காரி வருவதில் வியப்பில்லை. ஆனால் அடுத்து வரும் ‘வரலாற்று’ கதையிலும் அவள் வருவதும், அதிரடி புரிவதும் கொஞ்சம் கூட ஏற்க முடியவில்லை.
தனது மனப்புனைவை மாயாஜால படமாக்கி, இறுதியில், “கோலார் தங்க வயலில் இப்படித்தான் ஒடுக்கப்பட்டோர் (மட்டும்) படாதபாடுபட்டார்கள்” என்று தனது பாணி வரலாற்றையும் சேர்த்து இருக்கிறார் பா.ரஞ்சித்.
அந்த வரலாறும் (முழு) உண்மையல்ல.
பட்டியலின சாதியினரில் குறிப்பிட்ட பிரிவையைச் சேர்ந்தவர்களை தங்கச் சுரங்கம் தோண்ட வெள்ளையர் அழைத்துச் செல்கிறார்கள். ( படத்தின் பெயர் அறிவிக்கப் பட்ட அன்றே, “பறையர் இன உட்பிரிவு பட்டியலில் ஒன்று தங்கலான்” என்று உலகுக்கு அறிவித்தவன் நான்! 🙂 )
அந்த மக்கள், “தங்கம் தோண்டித்தர்றோம்.. பங்கு வேணும்.. அதோட இழந்த எங்கள் நிலம் – உரிமை வேண்டும்” என கேட்பதும் காட்சிகளாக விரிகின்றன.
ஆனால், சமூகத்தில் வறிய நிலையில் உள்ளவர்கள் பிழைப்புக்காக தங்கச் சுரங்கம் தோண்டுவதற்குச் சென்றார்கள். காலம் காலமாகவே, பட்டியலின மக்கள் ஆகப்பெரும்பாலோர் வறிய நிலையில் இருந்ததால்… அப்படி வைக்கப்பட்டு இருந்ததால்… அவர்கள் அதிகமாக சென்றனர். அதே நேரம் பிற சாதியினரும் தங்கச் சுரங்க தொழிலாளர்களில் இருந்தனர். இதை(யும்) சாதியாக பார்த்து வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார் பா.ரஞ்சித்.
இதை நம்மை நம்ப வைக்க, உண்மையான வரலாற்று புகைப்படங்கள் சிலவற்றை, “கோலர் தங்கவயலில் இப்படித்தான் நடந்தது” என்று சொல்லி காண்பிப்பது வரலாற்றை திரிப்பதே. இது முற்றிலும் தவறு.
அதே நேரத்தில் சில வரலாற்று உண்மைகளையும் ஊறுகாய்போல் தொட்டுச் சென்றிருக்கிறார். முக்கியமானது..  வெள்ளையருக்கும் இங்கத்திய மக்களுக்கும் இடையில் நின்று அதிகாரத்தை கையில் “வாங்கிக்கொண்ட” பிராமணர்கள், அவர்களது திட்டமிடல்களை காண்பித்து இருக்கிறார் பா.ரஞ்சித்.
அதே நேரம்,  இந்தப் படத்திலும் புத்தர் சிலை.. அதன் தலையை உடைப்பது.. மீண்டும் சேர்ப்பது போன்ற காட்சிகள் என தெரியவில்லை.
அதே போல அத்துவான காட்டில், திடீரென ஒரு எருமை மாடு வருவதும், மக்கள் அதை வேட்டையாடி உண்பதும்… ” நல்லா மாட்டுக்கறி சாப்பிடுங்க.. அப்பத்தான் நல்லா வேலை பார்க்க முடியும்” என நாயகன் வசனம் பேசுவதும் இந்தக் கதைக்கு ஏன் என்று புரியவில்லை.
ஏலியன்களை வைத்து (!) பா.ரஞ்சித் படம் எடுத்தாலும் அதிலும் புத்தர் சிலை காட்சிகளும், மாட்டுக்கறி காட்சிகளும் இருக்கும் போல.
(முற்போக்காளர்கள் என் மீது பாய வேண்டாம்.. புத்தர் மீது எனக்கு எந்தவித பஞ்சாயத்தும் இல்லை.. தவிர, நானும் சில முறை மாட்டுக்கறி தின்றவன்தான்.)
ஒட்டுமொத்த படக்குழுவின் அர்ப்பணிப்பான கடும் உழைப்பு வியக்க வைக்கிறது. ஆனால் தவறான கதை – அதை சொன்ன முறை ஆகியவற்றால் விழலுக்கு இறைத்த நீராய் போனது.
ஆனாலும் விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பு, ஜி.வி.பிரகாஷ் இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்காக படத்தைப் பார்க்கலாம்.
– டி.வி.சோமு

Related Posts