பழங்குடியின மக்களின் வாழ்வியலை இசையாக சொல்லும் தங்கலான்!: ஜி.வி.பிரகாஷ்
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில், விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி பல ஊர்களில் நடந்துத. இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ், ” எல்லா படத்தையும் போல் இந்த திரைப்படத்திலும் கடினமான உழைப்பு இருக்கிறது. அனைவரும் 100 சதவீத உழைப்பை கடந்து அதற்கும் மேலாக உழைத்திருக்கிறார்கள். அனைவரின் கடின உழைப்பும் திரையில் பளிச்சிடுகிறது. எல்லையே இல்லாத அளவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள். அதனால் தங்கலான் படத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது.நான் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் இதனை நான் ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். சில படங்களில்தான் நமக்கான வாய்ப்பு கிடைக்கும். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சூரரை போற்று ‘ என அந்த வரிசையில் தங்கலானும் இடம் பிடித்திருக்கிறது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இசை கொண்டாடப்பட வேண்டியது என்று சிலர் தற்போது சொல்கிறார்கள். அதனை அந்த நேரத்தில் நாங்கள் தவற விட்டோம் எனக் குறிப்பிடுகிறார்கள். தற்போது தங்கலான் படத்தை கொண்டாட தயாராகி விட்டார்கள். ஏனெனில் சினிமாவை அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லும் அனைத்து விசயங்களும் இந்த படத்தில் இருக்கிறது. அதனால் இந்த படத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
பழங்குடியின மக்களின் வாழ்வியலை இசையாக சொல்ல முயற்சித்து இருக்கிறோம். தமிழ் சினிமாவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பெரிதாக காண்பிக்கப்படவில்லை. ஏராளமான புதிய ஒலிகளை உண்டாக்கி அதில் பழங்குடியின மக்களின் வாழ்வியலோடு தமிழ் மணத்துடன் இரண்டற கலக்கச் செய்திருக்கிறோம். இதுவரை கேட்காத புல்லாங்குழல் ஓசை என தேடித்தேடி பல ஒலி மற்றும் ஓசைகளை சேகரித்து இணைத்து இருக்கிறோம். நிச்சயம் ரசிகர்களுக்கு இது புதிய அனுபவத்தை வழங்கும்.’: என்றார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருவதும், டீசரிலும் பின்னணி இசை மிரட்டலாய் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.