விமர்சனம்: தண்டட்டி

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ராம் சங்கையா உருவாக்கத்தில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, செம்மலர் அன்னம், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம், தண்டட்டி.
தண்டட்டி என்பது பெண்கள் காதுகலை அலங்கரித்த தங்க அணிகலன். காலப்போக்கில் இந்த வழக்கம் அருகிவிட்டது.
கதைக்கு வருவோம்..
இன்னும் சில நாட்களில் ஒய்வு பெற இருக்கும் காவலர், பசுபதி. குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால் விசாரணைக்கு ஆளாகி வேறு ஊருக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார்.
அந்தப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்குள் போலீஸ் போகாது. அந்த ஊர்க்காரர்களே பிரச்சினையை தீர்த்துக்கொள்வார்கள். தவிர, போலீஸையும் மதிக்க மாட்டார்கள்.
இந்த நிலையில் குறிப்பிட்ட ஊரில் இருந்து ஒரு சிறுவன் தன் பாட்டியை காணவில்லை என்று புகார் தர வருகிறான். மேலும் சில பெண்களும் தங்கள் அம்மாவைக் காணவில்லை என்று வருகிறார்கள் . காணமல் போனது ஒரே பெண்தான் .
சக காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி விசாரணையில் இறங்குகிறார் காவலர் பசுபதி. காணாமல் போன, அந்தப் பெண்மணியை (ரோகினி ) கண்டு பிடிக்கிறார். அவர் இறந்து போக, சிறுவனின் வேண்டுகோள்படி இறந்து போன உடலோடு ஊருக்கும் வருகிறார்.
இந்த நிலையில் பிணமாக இருக்கும் முதிய பெண்மணியின் காதில் இருக்கும் – லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தண்டட்டி காணாமல் போகிறது.
அப்பத்தாவின் மகன்”தண்டட்டியைக் கண்டுபிடித்துக் கொடுக்காவிட்டால் கொன்று விடுவேன்” என்று காவலரை மிரட்ட, மற்றவர்களும் கிண்டல் கேலி செய்ய , இந்த எதிர்பார்ப்புக்கும் ஒரே ரணகளம்.
இறுதியில் எதிராபாராத ஒரு நெகிழ்வான சம்பவ ங்களோடு நிறைவடைகிறது படம்.மாசு மருவற்ற தங்கம்போல் படம் கொடுத்த இயக்குநரை பாராட்ட வேண்டும். குறிப்பாக எதிர்பாராத அந்த கிளைமாக்ஸ்… அற்புதம்.
சட்டென ஆத்திரப்படும் காவலர் பசுபதி, அந்த ஊரில் மட்டும் ஏன் எல்லோரிடமும் மென்மையாக நடந்து கொள்கிறார் என்பதை எல்லாம் பின்னால் யோசிக்கும் போது அடடே என்று ஆச்சர்யப்பட முடிகிறது.
பசுபதியின் நடிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சி… பசுபதி தவிர வேறு எவராவது நடித்திருந்தால் காமெடி ஆகி இருக்கும். அந்த அளவுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார் பசுபதி.
ரோஹினி கொஞ்ச நேரமே வந்தாலும் அற்புத நடிப்பு.
பெண்கள் சண்டை போடுவது, கட்டி உருளுவது, கருநாக்கு கதாபாத்திரம் என நாடகத்தனமாக தோன்றினாலும் ரசிக்கவைக்கின்றன.
மகேஷ் முத்து சாமியின் ஒளிப்பதிவு கிராமத்து சூழலை அழகாகக் காட்டுகிறது . சாவு வீட்டின் சந்தடி நெரிசல்களையும் உணர வைக்கிறது . சுந்தர மூர்த்தியின் இசையும் சிறப்பு.
வீரமணியின் கலை இயக்கம், சிவா நந்தீஸ்வரனின் படத்தொகுப்பு ஆகியவையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
மொத்தத்தில் ரசிக்க.. நெகிழ வைக்கிறது படம்.