இரு விருதுகளைப் பெற்ற ‘தாய்நிலம்’! கோடையில் வெளியீடு!

இரு விருதுகளைப் பெற்ற ‘தாய்நிலம்’! கோடையில் வெளியீடு!

போர் என்பது வெறும் செய்தித்தாள்களில் வாசிக்கும் மரணங்களின் எண்ணிக்கை அல்ல; அது ஒரு குழந்தையின் எதிர்காலத்தைச் சிதைக்கும் பெருந்துயரம். இலங்கைப் போரின் கோரத்தாண்டவத்தையும், அதன் பின்னணியில் ஒரு தந்தைக்கும் மகளுக்குமான ஆழமான பாசத்தையும் நெஞ்சை உருக்கும் விதமாகச் சொல்ல வருகிறது ‘தாய்நிலம்’.

நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில், அபிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டது. மாஸ்கோ, டோராண்டோ என 12 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு சிறந்த திரைப்படம், சிறந்த புதுமுக இயக்குநர் உட்பட 9 விருதுகளைக் குவித்து தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

இப்படத்தின் ஆன்மாவாகத் திகழ்வது கவிஞர் தாமரை எழுதி, வர்ஷா ரஞ்சித் பாடியுள்ள ‘ஆகாயம் மேலே’ என்ற பாடல். அனாதையாகத் தவிக்கும் மக்களின் வலியையும், ஈழத் தமிழர்களின் இழப்பையும் இப்பாடல் அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறது. முதலில் சிறிய படம் என்று தயங்கிய கவிஞர் தாமரை, கதையின் ஆழத்தை உணர்ந்த பின், தன் உணர்வுகளை வார்த்தைகளாக்கித் தந்தார். அந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தார் அறிமுகப் பாடகி வர்ஷா ரஞ்சித். இந்த உழைப்பிற்கு மகுடம் சூட்டும் விதமாக, தமிழக அரசின் 2020-ம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த பின்னணிப் பாடகி ஆகிய இரண்டு முக்கிய விருதுகளையும் ‘தாய்நிலம்’ தட்டிச் சென்றுள்ளது.

தேசிய விருது பெற்ற மலையாள இசை மேதை அவுசப்பச்சன் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது இதன் மற்றொரு சிறப்பு. சர்வதேசத் தளங்களில் கொண்டாடப்பட்ட இந்தப் படம், இப்போது தமிழக அரசின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விருதுகளின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சில விநியோகஸ்தர்கள் படத்தைத் திரையிட ஆர்வம் காட்டி வருவதால், வரும் கோடை விடுமுறையில் இப்படம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களைத் தொடத் தயாராகி வருகிறது.

பிப்ரவரி 13 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைகளால் இந்த விருதுகளைப் பெறவிருப்பது படத்திற்கு மேலும் ஒரு கௌரவத்தைச் சேர்த்துள்ளது. ஈழத்தின் வலியையும், ஒரு மகளின் பாசத்தையும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Related Posts