விமர்சனம் : தமிழ்க்குடிமகன்

விமர்சனம் : தமிழ்க்குடிமகன்

‘ஆதிக்க சாதி’களுக்கு அடிமை வேலை செய்ய மாட்டேன்’ எனஉறுதியுடன் நிற்கும்  பட்டியல் இன இளைஞனின் போராட்டமே, தமிழ்க்குடிமகன் கதை.

சாதி அடக்கு முறைக்கு ஆளாகும் இளைஞனாக சேரன்.

சாதி இழிவைத் துடைத்தெறியும் ஆவேசத்துடன் வாழ்கிறார். ஆகவே,  கிராம அதிகாரி தேர்வு எழுதப் புறப்படுகிறார்.  தேர்வுக்கு புறப்படும் நேரம், ஊர் பெரிய மனிதர் வீட்டில் ஒரு சாவு. அதன் சடங்குகளைச் செய்ய(வழக்கம்போல) இவரை அழைக்கிறார்கள். இவர் மறுக்கிறார்.  பிரச்சினை ஆகிறது. இதனால் தர்வை எழுத முடியாமல் போகிறது.

தேர்வு எழுதும் வயது முடிந்து போகவே, மனம் குமொந்தாலும் சோர்ந்து போய்விட்டவில்லை அவர்.  சொந்த தொழில் செய்ய திட்டமிடுகிறார். மாடுகளை வாங்கிப் பால் வியாபாரம் ஆரம்பிக்கிறார். ஆனால் அவரிடம் பால் வாங்கவும் மறுக்கிறார்கள். இதனாலும் பாதிப்பு.

இதற்கிடையே தன் தங்கையை மருத்துவராக்கிவிட முயற்சிக்கிறார் சேரன். மிகுந்த பிரயாசைப்பட்டு படிக்க வைக்கிறார்.

இந்நிலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த லால் மகனுக்கும் சேரனின் தங்கை தீப்ஷிகாவுக்கும் காதல் அரும்புகிறது. இதனால் லால் மருமகன் அருள்தாஸ்,  தீப்ஷிகாவை பொது இடத்தில் வைத்து அடித்து உதைக்கிறார்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

சாதி இழிவில் இருந்து எப்படியாவது மீண்டுவிட மாட்டோமா என முயற்சி செய்யும் தவிப்பும் ஆக்ரோசத்தையும் அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் சேரன்.  தன்னிடம் ஊரார் பால் வாங்க மறுக்க, அந்த பாலை கையறு நிறையில் கடவுள் சிலையின் மீது ஊற்றிவிட்டு வெற்றுப் பா ர்வையுடன் நிற்பது, தன் தங்கையை சாதி வெறியில் ஒருவன் அடித்து உதைத்தும் எதிர்த்து நின்று கேட்க முடியாத நிலையில் தவிப்பது, என்னதான் அவமானப்படுத்தினாலும் தன் பூமியிலேயே தலை நிமிர்ந்து வாழ முயற்சிப்பேன் என உறுதிகாட்டுவது என அற்புதமான நடிப்பு.

ஆதிக்க சாதி வெறியறார லால் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால் மலையாள வாடை வீசும் அவரது பேச்சுத்துத்தான் சகிக்கவில்லை.  மலையாள கதாபாத்திரம் என்றால் சரிதான். பக்கா தமிழ் கிராம கதாபாத்திரம். டப்பிங்காவது போடக்கூடாதா..

அவரது மருமகனாக வரும் அருள்தாஸும் சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.  சாதி வெறியை வார்த்தைக்கு வார்த்தை வெளிப்படுத்தும் தொணி,  ஊரார் முன் அப்பவிப்பெண்ணை அடித்துத் துவைப்பது என அதிரவைக்கிறார்.

சேரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வேல ராமமூர்த்தியின் கதாபாத்திரம் சிறப்புதான். ஆனால் அவரது வழக்கமான செயற்கை நடிப்பு பாத்திரத்துடன் ஒன்றவைக்க விடவில்லை.

மாவட்ட காவல் அதிகாரியாக சிறு பாத்திரத்தில் வந்தாலும் கவனத்தை ஈர்க்கிறார் சுரேஷ் காமாட்சி.

வழக்கறிஞராக வரும் எஸ்.ஏ.சி. வழக்கமான நடிப்பு.

ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு காட்சிகளைக் கடத்துகிறது.  (சாதி எதிர்ப்பு படத்தில் யாதவ்!)

சாம்.சிஎஸின் இசை படத்துக்கு பலம்.

சாதி இழிவுக்கு எதிராக ஒரு படைப்பைத் தர வேண்டும் என்கிற முயற்சிக்காக, இயக்குனர் இசக்கி கார்வண்ணனைப் பாராட்ட வேண்டும்.

ஆனால் சொல்ல வந்த விசயத்தைச் சரியாக சொல்லி இருக்கிறாரா என்றால், இல்லை என்பதுதான் உண்மை.

தன் வீட்டு சாவுக்கு, சடங்கு செய்ய பட்டியல் இனத்தவர் வர வேண்டும் என நினைக்கும் வில்லன்கள், லால் மற்றும் அருள்தாஸ்.  அவர்கள் மீது நமக்கு கோபம் வருவதற்கு பதிலாக, அய்யோ பாவம் என்கிற உணர்வே வருகிறது… பிணத்தை வைத்துக்கொண்டு அல்லாடுகிறார்களே என்று. இந்த விசயத்தில் இயக்குநர் இன்னும் நேர்த்தி காண்பித்து இருக்க வேண்டும்.

தவிர, இயக்குநர் இசக்கி கார்வண்ணனின்,  ‘கருத்து முத்துக்கள்’ பல  சிரிக்கவும் வைக்கவில்லை.. சிந்திக்கவும் வைக்கவில்லை. அதிர்ச்சியையும், அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

“பறையர் என்கிற வார்த்தையில இருந்து பறைய தூக்கிட்டா ஐயர்னு மட்டும் இருக்கும்.. பிரச்சினை தீர்ந்துடும்..” என்று ஒரு வசனம்.  சாதி என்பது வார்த்தையில் – வார்த்தையில் மட்டுமா – இருக்கிறது? ஒழிக்கப்பட வேண்டிய சாதி இழிவை எவ்வளவு எளிதாகக் கடக்கிறார்?

அதே போல,   “சாதிய ஒழிக்கணும்னு சொல்றாங்க.. அதை கவர்மெண்ட்ட பாத்து கேட்க மாட்டேங்கிறாங்க..” என்று ஒரு வசனம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக வேர் பிடித்து நிற்கும் சாதி என்கிற இழிவை ஒரு உத்தரவு போட்டு தடுத்திட முடியுமா..  இந்த இழிவை நீக்க பல பத்தாண்டுகளாய் பல தலைவர்கள், மக்களும் நடத்திய, நடத்தும் போராட்டங்கள் எத்தனை எத்தனை… இதையெல்லாம் இயக்குநர் உணரவில்லை.

இன்னொரு உதாரணம்..   “காந்தியும் பெரியாரும் மாதிரி இருந்திட்டா இந்தப் பிரச்சினைகளே இல்லை ” என்கிறவசனம். சாதி குறித்து இரு தலைவர்களின் பார்வை என்ன.. அதில் என்ன முரண்பாடு என்பதை இயக்குநர் அறியவில்லை.

“சாதி வேண்டாம்னு நினைக்கிறவங்க தமிழ்க்குடிமகன்னு பெயரை மாத்திக்கலாம்” என்கிறார். அய்யோ, இது தீர்வா அய்யா!

இயக்குநர் இசக்கி கார்வண்ணன் அவர்களே, ஆளாளுக்குப் பேசுவதை, வாட்ஸ் அப்பில் வரும் பார்வேர்டு கருத்துக்களை(!) மனதில் தேக்கி வைக்காதீர்கள்.

வரலாற்றைப் படியுங்கள்.. அரசியலைப் புரிந்துகொள்ளுங்கள்.. அதன் பிறகு படம் எடுங்கள்!

– டி.வி.சோமு

 

 

 

 

 

 

Related Posts