தமிழ்ப் புத்தாண்டை பந்தாடும் கட்சிகள்! பல்டி அடித்த தி.மு.க. அரசு!

தமிழ்ப் புத்தாண்டை பந்தாடும் கட்சிகள்! பல்டி அடித்த தி.மு.க. அரசு!

டி.வி.சோமு சிறப்புப் பக்கம்:

“தமிழ்ப் புத்தாண்டினை தை 1 -சித்திரை 1…   எந்த நாளில் கொண்டாட வேண்டும்” என்பதில் தமிழக அரசியல் கட்சிகள் பெரும்பாலானாவை தொடர்ந்து குழப்பத்தை விளைவிக்கின்றன.

தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.கல்யாண சுந்தரனார்,  கா.சுப்பிரமணியம் பிள்ளை,  சச்சிதானந்தம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி, சோமசுந்தர பாரதியார்,  கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்டோர், ” திருவள்ளுவர் காலம் கி.மு.31  ஆகும்.  அதுமுதல் திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டாக பின்பற்ற வேண்டும்” என்று தீர்மானித்தனர். அதாவது  வழக்கத்திலுள்ள ஆங்கில ஆண்டுடன் 31 ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டுவரும்.

பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், சுரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.போ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி.ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக்கவிஞர்  உள்ளிட்டோர் நடத்திய தமிழர் மாநாட்டில், “தை முதல் நாளே பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு ” என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி, 1971-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நாட்குறிப்பிலும், 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசு அரசிதழிலும்  இதை வெளியிட்டு நடைமுறைப்படுத்தினார்.

அடுத்து இது குறித்த மசோதாவை1-2-2008 அன்று சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றினார். அது முதல்  தை 1 அன்று பொங்கல் திருவிழாவோடு தமிழ்ப்புத்தாண்டும் அரசு ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வந்தது.  ஆனால் 2011ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ( அதிமுக) ” மீண்டும் சித்திரை 1தான் தமிழ்ப்புத்தாண்டு” என்ற சட்ட மசோதாவை கொண்டு வந்தார். அதை திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடுமையாக எதிர்த்தார்.  தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் தை 1 தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்படும் என்றார்.  அவரது மறைவுக்குப் பிறகு திமுக தலைவரான மு.க.ஸ்டாலினும் இதே கருத்தை தெரிவித்தார்.  ஆனால் அவரது தலைமையில் ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளாகியும் இப்போதும் சித்திரை 1 என்பதுதான் தமிழ்ப்புத்தாண்டு என அரசு ரீதியில் இருக்கிறது. மாற்றம் ஏதுமில்லை. ஆக, தனது முடிவில் திமுக – திராவிட மாடல் அரசு – பல்டி அடித்துவிட்டது.

அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசுகின்றன.

2008ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, தை 1தான் தமிழ்ப் த்தாண்டு என்ற சட்ட முன்வரைவை சட்டமன்றத்தில் கொண்டு வந்தது அல்லவா…

அப்போது, காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் சிவபுண்ணியமும், மதிமுக சார்பில் மு.கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வப்பெருந்தகையும் (அப்போது விசிகவில் இருந்தார்) அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி ஆதரித்தனர்.

ஆக..  காங்கிரஸ், பா.ம.க., சி.பி.எம்., சி.பி.ஐ, ம.தி.முக. , விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஆதரித்தன.

இந்நிலையில் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது.  முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் பேசிய போது, “தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன” என்றார். சித்திரை 1தான் தமிழ்ப்புத்தாண்டு என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

முன்பு, தை 1 தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதை – என்கிற தீர்மானத்தை – ஆதரித்த சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. கட்சிகள் இப்போது வேறு நிலை எடுத்தன. ” இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டாம். இதில் குழப்பம் இருப்பதால்,  நிலைக் குழுவுக்கு அனுப்பி முடிவு செய்ய வேண்டும்” என்றன.

முன்பு  இந்தத் தீர்மானத்தை ஆதரித்த பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மவுனம் சாதித்தனர்.

அதே போல முன்பு இந்தத் தீர்மானத்தை ஆதரித்த காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் செல்வபெருந்தகை, தற்போது, சித்திரை 1 தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் என்று நேற்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

பா.ம.க.வைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதும், “சித்திரை திருநாள் வாழ்த்துகள்” என்றே தெரிவிப்பார்கள். இந்த முறையும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் அதே வார்த்தைகளைத்தான் சொல்லி இருக்கிறார்கள். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் சித்திரை வாழ்த்துகள் என்றே தெரிவித்து உள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆகியோர் இது குறித்து அறிக்கை வெளியிடவில்லை.

இப்படி பல கட்சிகள் தமிழப்புத்தாண்டை வைத்து விளையாடுவது வருத்தத்துக்கு உரியது.

பாஜக, அதிமுக, அதன் சார்பு கட்சிகள் சித்திரை 1தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதில் உறுதியாக இருக்கின்றன.  இதை நாம் ஏற்கவில்லை. காரணம்,  வரலாறு அறிந்த தமிழப் பெரியோர்கள், தை 1தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதை ஆதாரத்துடன் பல காலமாக சொல்லி வருகின்றனர்.

ஆனால் இதை ஏற்றுக்கொண்ட திமுக – திமுக அரசு – இன்றளவும் சித்திர 1தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதை மவுனமாக ஏற்று, அன்று “தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை” என கடந்த நான்கு வருடங்களாக அறிவித்து வருவதை என்னவென்று சொல்வது?

இது குறித்து கடந்த 2022ம் ஆண்டிலேய, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் தமிழ் இணைய செய்தித் தளமான சமயம் இதழில் கட்டுரை எழுதினேன். பலனில்லை.

தமிழர்க்கு நாங்களே தலைமை ஏற்கிறோம்… திராவிட மாடல் அரசு என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர்களுக்கு, தை 1தான் தமிழ்ப்புத்தாண்டு என்கிற உண்மையை சட்டமாக்குவதில் என்ன தயக்கம்?

– டி.வி.சோமு

 

 

Related Posts