கே.பி.க்கு சிலை வைப்பதைவிட…. : நடிகர் நாசர்
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் ரசிகர்கள் இணைந்து, ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கத்தை’ உருவாக்கி உள்ளனர். இதன் துவக்க விழாவில்,
நடிகர் நாசர் பேசியதாவது,
எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் மரணம் மரணம் தான். ஆனால், சில மனிதர்கள் தான் தங்கள் வாழ்ந்துகாட்டிய விதத்தில் மரணமில்லாமல் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய முதல் படம் ‘கல்யாண அகதிகள்’ அவருடைய இயக்கத்தில் தான் உருவானது. அப்படத்தில் எனக்கு ஏற்பட்ட முக்கிய நிகழ்வால் இன்னும் அந்த பழக்கத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். இதுவரை ஒருநாள் கூட நான் காலதாமதமாக படப்பிடிப்பிற்கு சென்றதில்லை. என்னால், ஒரு படப்பிடிப்பு கூட தடைபட்டதுமில்லை. இதற்கு காரணம் இயக்குநர் கே.பாலசந்தர் தான். நேரத்தை தன்னைவிட அதிகமாக மதிக்கக்கூடியவர். என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயக்குநர் கே.பாலசந்தர்.
கே.பாலசந்தருக்கு சிலை வைப்பதைவிட அவருடைய பழக்க வழக்கங்களையும், படமெடுக்கும் பாணியையும் நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் இன்றைய காலகட்டத்திற்கு தேவை. ஏனென்றால், அவர் சைலன்ஸ் என்று கூறிவிட்டால் யாரும் பேசமாட்டார்கள். ஒரே இடத்தில் செட்டை மாற்றிவிட்டு செலவையும் குறைப்பார். நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். இவையெல்லாம் இன்றைய சினிமாவில் இல்லை என்பதை நான் எங்கு வேண்டுமானாலும் கூறுவேன்.
கே.பாலசந்தர் என்று கூறியவுடன் நினைவிற்கு வருவது அறிவு சார்ந்த சினிமா என்பது தான். அவர் பெயரில் ஒரு நூலகம் அமைய வேண்டும்.