‘மண்டாடி’: விமர்சனம்: சிலிர்ப்பூட்டும் பாய்மரப் பயணம்!
தமிழ் சினிமா இதுவரை பெரிதாகத் தொடாத ராமநாதபுரம் பகுதியின் பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டி பின்னணியில், நட்பு, துரோகம், காதல் மற்றும் பழிவாங்கல் ஆகிய உணர்வுகளைக் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு விறுவிறுப்பான ‘ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா’தான் இந்த ‘மண்டாடி’.
கடல் அலையின் சீற்றத்திற்கு நடுவே ‘முகவை மைந்தன்ஸ்’ அணியின் நாயகனாக (மண்டாடியாக) வலம் வரும் முத்துக்காளி (சூரி), தன் நண்பன் சட்டாப்புலியுடன் (சுஹாஸ்) ஏற்படும் மோதலால் ஊரைவிட்டுச் செல்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இளைஞன் மாரிக்கு (மிதுன்) ஏற்படும் ஆபத்தால் மீண்டும் தன் சொந்த மண்ணுக்கும், பாய்மரப் போட்டிக்கும் திரும்ப வேண்டிய சூழல் முத்துகாளிக்கு உருவாகிறது. கடந்த காலக் காயங்களை மறந்து, தன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றாரா, துரோகங்களை எப்படி வீழ்த்தினார் என்பதே படத்தின் சுவாரஸ்யமான கதைக்களம்.
கதாநாயகனாக மட்டுமின்றி, ஒரு அழுத்தமான நடிகராகவும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார், சூரி. களத்தில் நங்கூரம் பாய்ச்சுவது போன்ற கம்பீரமான உடலமைப்பு, பந்தயக் காட்சிகளில் காட்டியிருக்கும் கடுமையான உழைப்பு, கடந்த கால குற்றவுணர்ச்சியால் தவிக்கும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் எனப் படம் முழுக்கத் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியிருக்கிறார்.
மடித்துக் கட்டிய லுங்கியும், முறைக்கும் முகமுமாக வில்லத்தனத்தில் பயமுறுத்துகிறார், சுஹாஸ். இருப்பினும், அவருக்கு வழங்கப்பட்ட டப்பிங் குரல் கதாபாத்திரத்துடன் முழுமையாக ஒன்றாமல் சற்றுத் துருத்திக்கொண்டு நிற்பது பலவீனம்.
கோபத்தையும் உணர்ச்சிகளையும் கனலாகக் கொப்பளிக்கும் பாத்திரத்தில் மஹிமா நம்பியார் மிளிர்கிறார். மூத்த வீரராக, வழிகாட்டியாகத் தன் அனுபவமிக்க நடிப்பால் சத்யராஜ் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்.
துடிப்பான இளைஞனாக மிதுன் ஜெய் சங்கர், நகைச்சுவையில் துடுப்பு போடும் பாலசரவணன், நிதானம் காட்டும் ரவீந்திர விஜய், கிருத்திகா மற்றும் ஸ்டன் சிவா ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘மண்டாடி மண்டாடி’, ‘கைவளவி குலுங்க’ போன்ற பாடல்கள் படத்தின் கொண்டாட்டத்திற்கு உத்வேகம் தருகின்றன. குறிப்பாக, நடுக்கடலில் நடக்கும் பந்தயக் காட்சிகளில் இவரது பின்னணி இசை பார்வையாளர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இருப்பினும், சில இடங்களில் வசனங்களின் ‘லிப்-சின்க்’ சரியாக அமையாதது சிறிய குறை.
படத்தின் உண்மையான கதாநாயகன் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதீர்தான். கொந்தளிக்கும் அலைகளுக்கு நடுவே பாய்மரப் படகுகள் நிகழ்த்தும் சாகசங்கள், நடுக்கடல் விபத்துகள், ராமநாதபுரத்தின் இயற்கை அழகை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்து, திரையரங்கில் நம்மை நடுக்கடலுக்கே அழைத்துச் சென்று பிரமிக்க வைக்கிறார்.
அறிமுகமில்லாத ஒரு விளையாட்டை, பார்வையாளர்களுக்குப் பாடம் எடுக்காமல் கதையோடு இயல்பாகப் பின்னியதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.
பாட்ஷா’ பாணி இடைவேளைக் காட்சி, க்ளைமாக்ஸ் பந்தயத்தில் பிரதீப் ஈ.ராகவின் விறுவிறுப்பான படத்தொகுப்பு, பீட்டர் ஹெயின் – திலீப் சுப்புராயனின் திகைப்பூட்டும் ஸ்டன்ட் காட்சிகள் ஆகியவை திரையரங்கில் ‘சீட் எட்ஜ்’ அனுபவத்தைத் தருகின்றன. வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் செல்லும் மனிதர்களின் பிரிவை நகைச்சுவை வழியாக உணர்த்திய விதம் இயக்குநரின் சுவாரஸ்யமான முத்திரை.
வழக்கமான ஃப்ளாஷ்பேக் டெம்ப்ளேட், சில முக்கியக் கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் பிணைப்பை வசனங்கள் மூலமாக மட்டுமே கடத்த முயன்றது மற்றும் இறுதிக்காட்சியில் தீர்க்கப்படாத சில கேள்விகள் திரைக்கதையின் வேகத்தைச் சற்று தளர்த்துகின்றன.
சில பல முன்கணிக்கக்கூடிய கமர்ஷியல் சமரசங்கள் இருந்தாலும், புதுமையான கடல்சார் களம், சூரியன் அசாத்திய உழைப்பு, மிரட்டலான தொழில்நுட்பக் கூட்டு முயற்சியால் இந்த ‘மண்டாடி’ தியேட்டரில் அமர்ந்து ரசிக்கத்தக்க ஒரு கம்பீரமான பாய்மரப் பயணமே!

