விமர்சனம்: சைரன்:  அதிர + ரசிக்கவைக்கும் திரைப்படம்

விமர்சனம்: சைரன்:  அதிர + ரசிக்கவைக்கும் திரைப்படம்

நாயகன் ஜெயம் ரவி, ஆம்புலன்ஸ் ஓட்டுனர். வெறும் வேலை என்று மட்டும் நினைக்காமல்,  ஆத்மார்த்மாக அந்த பணியை செய்கிறார்.  ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த அவரது நண்ரகும்,   ஆதிக்க சாதி பெண்ணும் காதலிக்கின்றனர். இதற்கு அந்த பெண்ணின் அண்ணனும் காவல்துறை அதிகாரியுமான சமுத்திரகனி முட்டுக்கட்டை போடுகிறார்.

சமுத்திரகனியை எதிர்த்து நிற்கிறார் ஜெயம் ரவி. இனால் சமுத்திரகனி மற்றும் சாதி கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் இருவர், ஒரு கொடூரத்தைச் செய்கின்றனர். அதன் பழியை ஜெயம் ரவி மீது போடுகின்றனர்.

இதனால் சிறைக்குச் செல்கிறார் ஜெயம் ரவி. பதினான்கு ஆண்டு காலம் கழித்து பரோலில் வரும் அவர், தனது எதிரிகளை துவம்சம் செய்ய முயல்கிறார்.

அதில் அவர் வெற்றி பெற்றாரா என்பதுதான் கதை.

இதுவரை இல்லாத அளவில், சிறப்பான வேடம், ஜெயம் ரவிக்கு. நெகிழ வைக்கும் காதல், முரட்டுத்தனமான சண்டைக் காட்சிகள் என்பதெல்லாம் அவருக்கு பழகியவைதான். அவற்றை சிறப்பாகவே செய்திருக்கிறார். அதே நேரம்,  மகள் மீது வைக்கும் பாசம், அவள் தன்னைவிட்டு ஒதுங்கிப்போவைதை நினைத்து குமைவது.. அதே நேரம் ‘அது நல்லதுதான்’ என நினைப்பது..  என்று  அற்புதமாக நடித்து உள்ளார் ஜெயம் ரவி.

அந்த மொட்டைத் தலை, ஊடுருவிப் பார்க்கும் அந்த பார்வை, நிதான நடை என முற்றிலும் புதிய லுக்கில் மிரட்டுகிறார் ஜெயம் ரவி. காது காட்காத – வாய்பேச முடியாத நர்ஸ் என்பதை அறியாமல் அவரிடம் கோபப்படும் அவர், உண்மை அறிந்து, மன்னிப்பு கேட்கும் முறையில் காதலையும், காமெடியையும் கலந்து அளித்துள்ளார்.

எதிரிகளை தேடித் தேடி சென்று, அதே நேரம் எந்தவிதத்திலும் சிக்கிவிடாமல் பழி வாங்குவது, அந்த நேரத்தில் அவர்களிடம் நிதானமாக, அமைதியாக பேசுவது.. அசத்தல் ஜெயம் ரவி!

இந்தத் திரைப்படம் ஜெயம் ரவி திரை வாழ்க்கையில் முக்கியமானது! வாழ்த்துகள்!

அட…  அமைதியான அழகு முகமாக, டூயட் பாடிச் செல்லும் கீர்த்தி சுரேஷ்தானா இது?

விரைப்பான காவல் அதிகாரியாக வந்து அசத்துகிறார். முதல் காட்சியிலேயே, ‘லாக் அப்பில் ஒரு கைதியை அடித்துக் கொன்றுவிட்டார்’ என்றுதான் இவரை அறிமுகப்படுத்துகிறார்கள்.

அதற்கேற்ப கூர்மையான பார்வை, கம்பீர நடை, மிடுக்கான பேச்சு என நிஜ போலீஸையே கண்முன் நிறுத்துகிறார் கீர்த்தி சுரேஷ்.

தன் மீதான கொலைப் பழியை எதிர்த்து ஆதங்கத்துடன் பேசுவது, அடுத்தடுத்து கொலைகள் நடக்காமல் தடுக்க தவிப்பது என்று சிறப்பாக நடித்துள்ளார்.

ஆறடி உயர ஜெயம் ரவியை, சட்டையைப் பிடித்து இழுத்து வரும் காட்சியில், ‘கம்பீரத்துக்கு தேவை உயரமோ.. ஆஜானுபாகுவான உடலோ தேவையில்லை..’ என்பதை உணர்த்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதே காட்சியில், ‘இந்தக் கோலத்தில் மகள் என்னைப் பார்க்கிறாளே…’ என பார்வையிலேயே ஆற்றாமையை வெளிப்படுத்தி.. ‘மக பார்க்கிறா.. விட்டுடுங்க…’ என்று பதைதைக்கும் ஜெயம் ரவியும் கைதட்டல் பெறுகிறார்.

காவல் உயர் அதிகாரியாக சமுத்திரகனி, அரசியல்வாதிகள் அழகம் பெருமாள், அஜய் ஆகியோர் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சிறப்பாக வில்லனத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஜெயம் ரவியுடன் கூடவே வரும்  ஷேடோ போலீசாக யோகி பாபு. ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்கவைக்கிறார்.

ஜெயம் ரவியின் மகளாக வரும் சிருமி யுவினா பர்வதி சிறப்பாக நடித்து உள்ளார். அப்பா மீது காட்டும் வெறுப்பை அத்தனை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.ஜெயம் ரவியின் ஜோடியாக வரும் அனுபமாவையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.  மகனை அவனது மகள் பார்க்க விரும்பவில்லையே என்கிற பரிதவிப்பு,  மகனுக்காக போலீஸ்காரரிடம் ஜாலியாக பேசி திசை மாற்றுவது  என ரசிக்கவைக்கிறார்.

ஃப்ளாஷ் பேக்கில் ஜெயம் ரவியின் ஜோடியாக வரும் அனுபமா, காது காட்காத – வாய் பேசமுடியாத கேரக்டரில் வருகிறார். ஆனால் கண்களாலேயே காதல், குறும்பு, பயம் என அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெறுகிறார்.

மொத்தத்தில் அனைவருமே தங்களது பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்துள்ளனர்.

 

ஜி.வி. பிரகாஷின் இசையில் வழக்கம் போலவே பாடல்கள் அருமை.  ‘அடி ஆத்தி..’, ஆட வைக்கிறது என்றால், ‘கண்ணம்மா..’ கண் கலங்க வைக்கிறது.

சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.  காதல் காட்சிகள், பழி வாங்கும் காட்சிகள், பாசக் காட்சிகள்.. என ஒவ்வொன்றின் தன்மையை அறிந்து பின்னணி இசையும் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை.  அதிலும் தேர்த்திருவிழா காட்சியில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் செல்வகுமார். அதே போல சிறை காட்சிகளும் கூடுதல் சிறப்பு.

ரூபனின் படத் தொகுப்பு கச்சிதம்.

டத்தொகுப்பில் படத்திற்கு கூடுமானவரை பலம் சேர்க்க முயற்சித்துள்ளார் ரூபன்.

சிறை, கோயில் என ஒவ்வொரு காட்சியிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் கலை இயக்குநர் சக்தி வெங்கடராஜ்.

வசனங்கள் சிறப்பு. ‘ என் மகளுக்கு பிடிச்சுதுனா, ஆயுள் முழுக்க சிறையிலேயே இருக்க தயாரா இருக்கேன்..’, ‘ சாதி இல்லேனு சொல்றவன்கிட்ட சாதி கேட்காதீங்கடா..’ போன்றவை சில உதாரணங்கள்.

காதல், சாதிவெறி, பாசம், அடிதடி, கொலை, சிறை… என பல்வேறு விசயங்களையும் தனது நேர்த்தியான திரைக்கதையால் ஒருங்கிணைத்து, ரசிக்க வைக்கும் படமாக உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர்  அந்தோனி.

லட்டு மாதிரி கீர்த்தி இருந்தும் அவரை நாயகியாக்கி டூயட் பாட வைக்காதது, அதிரடி காட்சிகளுக்கு இணையாக நெகிழ்ச்சியான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இருப்பது என்  அனைத்து விதத்திலும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் அந்தோனி.

அனைத்து தரப்பு மக்களையும் கவரும் படம், ‘சைரன்.’

Related Posts