silambattam: “சிம்புவுக்காக வாழ்க்கையையே விட்டுக் கொடுப்பேன்!”: உருகிய டி.ஆர்!
அடுக்கு மொழி வசனம், அதிரடிப் பேச்சு, அரசியலோ சினிமாவோ எதற்கும் அஞ்சாத குணம் – இதுதான் ‘லட்சிய நடிகர்’ டி.ராஜேந்தர். ஆனால், இந்த கர்ஜனைக்கெல்லாம் பின்னால் ஒரு பாசக்கார தந்தை ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் டி.ஆர். பிப்ரவரி 6-ம் தேதி தனது மகன் சிலம்பரசனின் ‘சிலம்பாட்டம்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆவதை ஒட்டி, அவர் பேசிய உருக்கமான வார்த்தைகள் இப்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு டி.ராஜேந்தரின் கல்ட் கிளாசிக் படமான ‘உயிருள்ள வரை உஷா’ பிப்ரவரி 6-ம் தேதி மீண்டும் திரைக்கு வரவிருந்தது. ஆனால், அதே தேதியில் சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால், தனது படத்தின் ரிலீஸையே தள்ளி வைத்திருக்கிறார் டி.ஆர். இதுகுறித்து அவர் பேசுகையில், “என் மகன் சிலம்பரசனுக்காக என் வாழ்க்கையையே விட்டுக் கொடுப்பேன். அவர் படத்திற்காக என் படத்தை தள்ளி வைப்பது எனக்கு ஒரு பொருட்டே அல்ல. 5 வருடம் இல்லை, 50 வருடம் கழித்து வந்தாலும் சிம்புக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த அன்பும், அங்கீகாரமும் தமிழ் சினிமாவில் வேறு யாருக்கு கிடைக்கும்?” என்று உணர்ச்சிப் பொங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கமான தனது பாணியில் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்ட டி.ஆர், இப்படத்தின் இயக்குநர் சரவணன், நாயகன் சிலம்பரசன், நகைச்சுவை மன்னன் சந்தானம், நாயகிகள் சினேகா, சானா கான் என அனைவரின் பெயருமே ஆங்கிலத்தில் “S” என்ற எழுத்தில் ஆரம்பிப்பதைப் சுட்டிக்காட்டி வியந்தார். “என்னையே கீழே தள்ளி யோசிக்க வைத்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. அதேபோல், ஆக்ஷன் படங்களில் ரீரிலீஸில் அஜித்தின் மங்காத்தா படைத்த சாதனையை இந்த சிலம்பாட்டமும் செய்ய வேண்டும்” என தந்தை பாசத்துடன் ஆசி வழங்கினார்.
தன் மகனுக்காக மட்டுமல்லாமல், சக கலைஞர்களுக்கும் மரியாதை கொடுப்பதில் தான் ஒரு சீனியர் என்பதை நிரூபிக்கும் வகையில், “தம்பி, என் நண்பர் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியானால் கூட, என் உயிருள்ள வரை உஷா படத்தை தள்ளி வைப்பேன். அது நான் அந்த கலைஞர்களுக்குத் தரும் மரியாதை” என பெருந்தன்மையுடன் பேசினார். இடையில் தன் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்குப் பதிலடி கொடுத்தவர், “டி.ஆரைப் பார்த்தால் மைக்குக்கே மயக்கம் வரும். நான் நன்றாகத் தான் இருக்கிறேன், என் முடி பற்றியெல்லாம் வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என அதிரடியாகக் கூறினார்.
2008-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சிலம்பாட்டம்’, இப்போது லேட்டஸ்ட் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புத்தம் புது பொலிவுடன் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகிறது. சிம்புவின் இரட்டை வேடம், யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசை, சரவணனின் துடிப்பான இயக்கம் என அனைத்தும் மீண்டும் திரையரங்குகளில் திருவிழா கோலத்தை உருவாக்கப் போகிறது. மகனின் வெற்றிக்காகத் தன் படத்தையே தள்ளி வைத்த ஒரு ‘ரியல்’ அப்பாவின் பாசப் போராட்டமாகவே இந்த ‘சிலம்பாட்டம்’ ரீ-ரிலீஸ் நிகழ்வு மாறியுள்ளது.

