சசி தரூரின் பா.ஜ.க. பாசமும், சுனந்தா மரண வழக்கும்! : டி.வி.சோமு
“கேரள தலைநகரான, திருவனந்தபுரம் மாகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் வெற்றி

மக்களின் தெளிவான ஆணை! இதன் மூலம், மாநிலத்தின் ஜனநாயக உணர்வு பிரகாசமாகத் தெரிகிறது”: இப்படி மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, உற்சாகத்துடன் துள்ளிக் குதித்திருப்பது மோடியோ, அமித்சாவோ அல்ல.. காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசி தரூர்!
இதில் இன்னும் ஆச்சரியம், திருவனந்தபுரம் மாநகராட்சியை உள்ளடக்கிய திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் இவர்தான்.
இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதத்தில், பாஜ மூத்த தலைவர் அத்வானியின் பிறந்த நாளில், அவரை புகழ்ந்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் அறிக்கை வெளியிட்டார். அதுமட்டுல்ல.. “நேரு, இந்திரா ஆகியோர் செய்த தவறுகளை சரி செய்தவர் அத்வானி” என்றும் பாராட்டி அதிர்ச்சி அளித்தார்.
அதற்கும் முன்னதாக, பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த போர் குறித்து விளக்க, உலகம் முழுதும் சென்ற குழுக்களில் சசிதரூரும் இடம் பெற்றார். அமெரிக்காவில் அமர்ந்துகொண்டு, “அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னதால் இந்தியா தாக்குதலை நிறுத்தவில்லை.. தானாகவே நிறுத்தியது” என்றார்.
டிரம்ப், தானே போரை நிறுத்தியதாக சொல்லிவந்தார். இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி மவுனம் காத்தார். இதை காங்கிஸின் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். அது மட்டுமல்ல, “தாக்குவது பற்றி முன்கூட்டியே நம் நாடு அந்த நாட்டுக்கு தகவல் அளித்துவிட்டது” என்றும் குற்றம்சாட்டி வந்தார்.
இந்த நிலையில் பாஜகவின் மோடிக்கு ஆதரவாக சசிதரூர் பேசவே, பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‛‛ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஒன்றாக இருந்தோம். நாடு தான் முதலில் என்று கூறினோம். ஆனால் சிலர் மோடி தான் முதலில் என்றும் அதன் பிறகு தான் நாடு என்றும் கூறுகின்றனர்” என்று சசிதரூரை சாடினார்.
ஆனால் தனது பேச்சைத் திரும்பப் பெறவில்லை.
அதே போல கடந்த ஜூலை மாதம், சசிதரூர், எமெர்ஜென்சி குறித்து மலையாள நாளிதழ் தீபிகாவில் கட்டுரை எழுதினார். “நம் நாட்டு வரலாற்றில் எமெர்ஜென்சி ஒரு இருண்டகாலம்” என்று இந்திராகாந்தி, சஞ்சய்காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்து எழுதினார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தரவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அக்கட்சியைச் சாராதவர்களும், “எமர்ஜென்சி கொடுமையான காலகட்டம்தான். ஆனால் எமர்ஜென்சி அறிவிக்கப்படாமலேயே, தற்போதைய பாஜக ஒன்றிய அரசு அடக்குமுறையை கையாள்கிறது. அதைப் பற்றி பேசாமல், 1975ம் ஆண்டைய எமர்ஜென்சியை பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன” என்ற கேள்வியையும் எழுப்பினர்.
கடந்த ஜூன் மாதம், தி இந்து நாளிதழில், “பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு, ஈடுபாடு, விருப்பம் ஆகியவை உலக அரங்கில் இந்தியாவிற்கு முக்கிய சொத்தாக உள்ளன” என புகழ்ந்தார் சசி தரூர்.
இதற்கும் முன்பாக, 2023ல், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “இஸ்லாமிய நாடுகளுடன் மோடி கொண்டிருக்கும் உறவு சிறந்த முன்னுதாரணம். இதற்கு முன்பு முஸ்லிம் நாடுகளுடன் நமது உறவு சிறப்பானதாக அமைந்தது இல்லை ” என புகழ்ந்தார்.
அதேபோல இன்னொரு சம்பவம்..
2022ல், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு கார்கேவுக்கு எதிராக போட்டியிட்டார். இது ஜனநாயகம்தான். வரவேற்கத்தக்கதுதான். ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் ” தேர்தல் நடந்ததே சரியில்லை..” என்கிற அளவுக்கு, ஆதாரமின்றி குற்றம் சாட்டினார். இதற்கும் காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.
மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதையும், பாஜக – மோடி அரசை புகழ்வதையும் சசிதரூர் தொடர்கிறார்.. இதோ தனது நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியதையும் புளகாங்கிதம் அடைந்து பேசி இருக்கிறார்.
ஆம்.. ஆரம்பத்தில் பாஜகவை, மோடியை கடுமையாக விமர்சித்தவர்தான் இவர்.
ஆனால், பாஜக ஒன்றியத்தில் ஆட்சி அமைத்ததுமே புகழ ஆரம்பித்துவிட்டார். 2014ம் வருடம், அமெரிக்க செய்தி இணைய தளம் ஒன்றில் கட்டுரை எழுதிய சசி தரூர், “ஒன்றிய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்பு வெறுக்கப்பட்ட நபராக திழ்ந்தார். தற்போது தன்னை நவீனமயத்தின், முன்னேற்றத்தின் சின்னமாக மாற்றி வருகிறார்” என எழுதினார்.
அதாவது மோடி பதவியேற்ற இரு மாதங்களிலேயே, இப்படி கணித்தார்!
அதே நேரம், 2018ல் அவர் எழுதிய ‘The Paradoxical Prime Minister: Narendra Modi and His India’ (முரண்பாடான பிரதமர்: நரேந்திர மோடி மற்றும் அவரது இந்தியா) என்கிற புத்தகத்தில், மோடியை விமர்சித்தார். 2014ல் மோடி பதவி ஏற்றதில் இருந்து நிகழ்ந்த சம்பவங்களை, துல்லியமான, அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களோடு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
புத்தகத்தின் அட்டைப்படமே அனைவரையும் ஈர்த்தது. லண்டன், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தனது மெழுகு சிலையை மோடியே சரிசெய்வது இருக்கும் படம்தான் அது. .நரேந்திர மோடி எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முயல்பவர் என்று புத்தகத்திற்குள் சொல்வதை, அட்டைப்படத்தில் சிறப்பாக உணர்த்தினார்.
அதே சசிதரூர், பிறகு எழுதிய ‘An Era of Darkness: The British Empire in India’ (இந்தியாவின் இருண்ட காலம்) என்ற புத்தகத்தை எழுதினார். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் ஏற்படுத்திய பேரழிவுகள், சுரண்டல் மற்றும் அதன் எதிர்மறை விளைவுகளைப் பற்றி கூறும் புத்தகம் இது. இப்புத்தகத்தை மோடியை நேரில் சந்தித்து அளித்து மகிழ்ந்தார் சசிதரூர். இது நடந்தது 2016 ம் ஆண்டு.
ஆனால் விமர்சிப்பதும், ஆதரிப்புதுமான அவரது தடுமாற்றங்கள், பாஜக ஆட்சி அமைத்த 2014ல் துவங்கின. மெல்ல மெல்ல.. அதி தீவிர மோடி – பாஜக ஆதரவுக்குச் சென்றார். அதில் இன்று வரை உறுதியாக இருக்கிறார். அவை குறித்த சம்பவங்களைத்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம்.
சசிதரூரின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்..
“சசிதரூர் காங்கிரஸ் தலைவராக விரும்பினார். ஆனால் சோனியா காந்தி, கார்கேவை நிறுத்தி வெற்றிபெற வைத்துவிட்டார். கேரளாவின் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க சசிதரூர் விரும்பினார். அது நடக்கவில்லை. இதனால்தான் காங்கிரஸில் இருந்துகொண்டே பாஜகவை வெளிப்படையாக தொடர்ந்து ஆதரிக்கிறார் சசிதரூர்” என்று ஒரு கருத்து நிலவுகிறது.
இது சரியல்லை.
மேற்கண்ட இரு காரணங்களுக்கான சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே, மோடியையும், பாஜகவையும் புகழந்து தள்ள ஆரம்பித்துவிட்டார் சசிதரூர்.
ஆக, காங்கிரஸ் தலைவர் ஆக முடியாமல் போனது, கேரள முதலமைச்சர் வேட்பாளர் ஆக முடியாமல் போனது எல்லாம் சசிதரூரின் மாற்றத்துக்குக் காரணம் அல்ல.
பிறகு என்ன காரணம்?
அவரது மூன்றாவது மனைவி புஷ்கர் மர்ம மரணத்துக்குப் பிறகே சசிதரூரிடம் மாற்றம்.
இதை கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டும்.
2010 ஆம் ஆண்டு தனது காதலி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார் சசிதரூர். இருவருக்குமே இது 3வது திருமணம்.
சில மாதங்களிலேயே ஒரு பிரச்சினை ஆரம்பித்தது. பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் என்பவருடன் சசிதரூருக்கு தொடர்பு இருப்பதாக சுனந்தா புஷ்கர் குற்றம் சாட்டினார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆதங்கத்தை வெளியிட்டார்.
“மெஹர் தரார், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்ட். அவர் என்னை னை பின்தொடர்கிறார்” என்றும் சுனந்தா குற்றம்சாட்டினார். ‘ இது அபத்தமானது’ என்று மெஹர் மறுத்தார். சில மணி நேரங்களில், சுனந்தாவின் சமூக ஊடக பக்கத்தில் இருந்து அந்த ட்வீட்கள் நீக்கப்பட்டன.
அதற்கு மறுநாளே 2014ம் வருடம் ஜனவரி 18ம் தேதி, டெல்லியில் சாணக்கியபுரி பகுதியில் உள்ள, லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலில் மூன்றாவது தளத்தில் உள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், சுனந்தா புஷ்கர்.
இந்த நிலையில்தான்.. இந்த தகவல் அறிந்த சசிதரூர், டெல்லி போலீசுக்கு புகார் தெரிவித்தார். டெல்லி போலீசார் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று உடலை கைப்பற்றினர்.
சுனந்தா புஷ்கர் ஓட்டலில் தங்கியிருந்தபோது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள், ஓட்டலின் ரகசிய காமிராக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, சுனந்தாவின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக டில்லி எம்ய்ஸ் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இவரது உடலை, உடற்கூறாய்வு செய்த, மருத்துவ குழு, “இயற்கைக்கு மாறான மரணம் என்று தோன்றுகிறது. அவரது உடலில் பதினைந்து இடங்களில் காயங்கள் இருந்தன. அவரது வயிற்றில், அதிக அளவு அல்பிரஸோலம் மருந்து இருந்தது. ஒரு ஊசி போட்ட அறிகுறி மற்றும் சில கடித்த அடையாளங்கள் சந்தேகத்தைத் தூண்டியது” என்றது.
இந்நிலையில், சுனந்தா உடலை பரிசோதனை செய்த டாக்டர் குழுவின் தலைவராக இருந்த சுதிர் குப்தா, ”சுனந்தா புஷ்கர் இயற்கையாக மரணம் அடைந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடுமாறு உயர் அதிகாரிகள் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அறிக்கையும் பெற்றனர்” என்று கூறி அதிரவைத்தார். ( இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை தடவியல் துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.)
இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி காவல்துறையின் அப்போதைய ஆணையராக இருந்த பி.எஸ்.பஸ்ஸி, “சுனந்தா தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டதாக தோன்றுகிறது” என்றார்.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும், ஊழல் கண்காணிப்பு கமிட்டிக்கும் புகார் மனுக்கள் அனுப்பினார்.
இதையடுத்து, டாக்டர் குப்தாவின் புகார் குறித்து அறிக்கை அளிக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. தவிர டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸ்சி, ”இந்த விவகாரத்தில் உண்மையை அறிய டாக்டர் சுதிர் குப்தாவிடம் விசாரணை நடத்தி, அவருடைய கருத்துக்கள் பெறப்படும்” என்றார்.
சசி தரூரின் வேலைக்காரர் நாராயண் அளித்த வாக்குமூலமும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர், “சசி தரூரும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹரும் நெருங்கிப் பழகியதால் சுனந்தா மனமுடைந்து காணப்பட்டார்” என்றார்.
மேலும், “சசிதரூருக்கும் சுனந்தாவுக்கு அடிக்கடி சண்டை நடக்கும். துபாயில் ஒருநாள், மதியம் துவங்கிய சண்டை, மறுநாள் அதிகாலை வரை தொடர்ந்தது. அப்போது, சுனந்தா தாக்கியதில், சசி தரூரின் காலில் காயம் ஏற்பட்டது” என்றார்.
சுனந்தா இறந்ததாக கூறப்படும், 2014 ஜனவரி மாதம் 17ம் தேதி நடந்ததையும் தெரிவித்தார். அவர், “அதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக, டெல்லி லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் சுனந்தா தங்கியிருந்தார். அப்போது, சசி தரூர் டெல்லியில் தான் இருந்தார். எனினும், ஓட்டலுக்கு வரவில்லை. ஆனால் இருவரும் அடிக்கடி போனில் சண்டையிட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், சுனந்தாவை சுனில் என்ற நபர் வந்து சந்தித்தார். அப்போது சுனந்தா, சசிதருக்கு போன் செய்து, , ‘சுனில் எல்லாவற்றையும் முடித்து விட்டார்’ என, எக்காளமாக கூறினார். சசி தரூரின் மொபைல் போனில் இருந்த தகவல்களை ஹேக் செய்து சுனந்தாவுக்கு அளித்து இருக்கலாம்.
ஜனவரி 17 காலை, சசி தரூர் எனக்கு போன் செய்தார். ‘சுனந்தாவுக்கு உடல் நலம் சரியில்லை; சரியாக சாப்பிடவில்லை. அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறாள்; அவளை எழுப்பு’ என கூறினார். அதன்படி, படுக்கையறை சென்றேன். அங்கு சுனந்தாவை எழுப்பினேன்; அவர் எழுந்திருக்கவில்லை. டாக்டரை அழைத்து வந்து பார்த்த போது, இறந்து விட்டதாக கூறினார்” என்றார் சசிதரூரின் வேலைக்காரர் நாராயணன்.
டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸி, ”சுனந்தா கொலை விவகாரத்தில், இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியும்,” எனக்கூறி பரபரப்பை அதிகரித்தார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, “மத்திய அமைச்சராக இருந்த சசிதரூர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு வைத்துள்ள, பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருடன் துபாயில் 3 இரவுகள் தங்கியுள்ளார். இது குறித்து ஒருவர் சாட்சியம் அளித்து இருக்கிறார்” என்று ட்வீட் செய்தார்.
இப்போது, பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது.
சுனந்தாவின் உள்ளுறுப்பு மாதிரிகள் பரிசோதனைக்காக வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்டன. “சுனந்தா மரணம் கொலையாக இருக்க வாய்ப்பில்லை” என அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃபிஐயின் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
2018ம் வருடம், பாட்டியாலா நீதிமன்றத்தில் மெட்ரோபாலிடன் மேஜஸ்டிரேட் தர்மேந்தர் சிங்கிடம், டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில் “சுனந்தா புஷ்கரின் மரணம் கொலை அல்ல. ஆனால், அவரது கணவர், சசிதரூர் கொடுமைப் படுத்தி இருக்கிறார்.. தற்கொலைக்குத் தூண்டி இருக்கிறார்” என்று குற்றம் சாட்டி, இந்திய தண்டனைச் சட்டம் 306 மற்றும் 498ஏ கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தான் கைது செய்யப்படுவோம் என்கிற அச்சத்தில்முன் ஜாமீன் பெற, மனுத் தாக்கல் செய்தார் சசிதரூர்.
இப்படி வழக்கு ஓடிக்கொண்டிருந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் 2021 ஆகஸ்ட் மாதம் சசிதரூரை விடுவித்தது.
இதை எதிர்த்து, டெல்லி காவல்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
மொத்தத்தில், சசிதரூர் மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் அவரது மனைவி மர்ம மரணம் அடைகிறார். இருவருக்கும் தொடர்ந்து சண்டை நடந்ததாக வீட்டு வேலைக்காரர் தெரிவிக்கிறார். “இது தற்கொலைதான் என உடற்கூறு சான்றிதழ் தரும்படி நிர்ப்பந்திக்கப்பட்டேன்” என்கிறார் எய்ம்ஸ் மருத்துவர். பிறகு அவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
அதே நேரம், சிறப்பு நீதிமன்றத்தால் சசி தரூர் விடுவிக்கப்பட்டாலும், தற்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
ஆக…
சுனந்தா மரண வழக்கின் பெரும்பகுதி, 2014ல் பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு நடக்கிறது. கொஞ்ச காலம் பாஜகவையும், மோடியையும் கடுமையாக பேசுகிறார் சசிதரூர்.
இதே சுனந்தா விவகாரத்தில், மோடியும், சசிதரூரும் தனிப்பட்ட முறையில் கடுமையாக தாக்கிக்கொண்டதும் உண்டு.
மோடி, சசிதரூரின் மனைவியை வைத்து, தனிப்பட்ட முறையில் சசிசரூரை கிண்டல் செய்துள்ளார். “ரூ.50 கோடி கேர்ள்ப்ரெண்ட்” என்று சுனந்தாவைப் பற்றி கூறி சசிதரூரை சீண்டினார்.
பதிலுக்கு சசி தரூர், “காதலித்தால்தான் அதன் அருமை தெரியும்” என பதிலுக்கு தனிப்பட்ட முறையில் மோடியை சாடினார்.
இதில் கவனிக்க வேண்டிய விசயம்… ஒன்றிய ஆட்சியை பாஜக பிடிக்கும் முன்பு – 2012-ல் நடந்த சம்பவம் இது. அதன் பிறகு மோடி – பாஜக புகழ் பாட ஆரம்பித்துவிட்டார் சசிதரூர்.
தவிர…
2010ல் சசி தரூர், காங்கிரஸ் அமைச்சரவையில் அயலுறவுத் துறை இணை அமைச்சராக இருந்தார். அப்போது தனது மனைவி சுனந்தாவுக்காக, ஐ.பி.எல். கொச்சி கிரிக்கெட் அணி ஏலத்தில் தலையிட்டார் என்ற புகார் எழுந்தது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்திய லலித் மோடி இந்த புகாரை உறுதிப்படுத்தினார்.
“கொச்சி டஸ்கர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சுனந்தா புஷ்கரை உள்ளே கொண்டு வர சசி தரூர் தன்னை அச்சுறுத்தினார்” என்றார்.
சசிதரூர், தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. சசிதரூர் மறுத்தார். ஆ்னால், நிர்ப்பந்தம் காரணமக, பதவி விலகினார்.
ஆக, லலித்மோடி – சசிதரூர் விவகாரம் நீடிக்கவே செய்கிறது.
சசிதரூரின் அதீத பாஜக பாசம், இதையெல்லாம் குறித்து சிந்திக்க வைக்கிறது.
ஒருமுறை, சசிதரூரின் நடவடிக்கையை விமர்சித்தார் காங்கிரஸ் தலைவர் கார்கே. அதற்கு உடனடியாக எதிர்வினை புரிந்தார் சசிதரூர். தனது எக்ஸ் பக்கத்தில் சிட்டுக்குருவியின் படத்தை வெளியிட்டு, ‛‛பறக்க யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. சிறகுகள் உங்களுடையது. வானம் யாருக்கும் சொந்தமானது இல்லை” என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு இருந்தார்.
ஆனால், சுனந்தா வழக்கு தொடரும் வரை அல்லது பாஜக அரசு முடிவுக்கு வரும் வரை, சசிதரூர் தன் விருப்பத்துக்கு பறக்க முடியுமா என்பது பெரும் கேள்வியே.
– டி.வி.சோமு

