“இதுவரை யாரும் சொல்லாத கதை!”: ‘சீசா’ விழாவில் நட்டி!

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக்கேல், தயாரிப்பாளர் கே.ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், “இந்த படத்திற்காக நான் இயக்குநர் குணாவை சந்தித்த போது, அவர் ஒன்றரை மணி நேரம் கதை சொன்னார். கதையில் அவர் மருத்துவம் சார்ந்த பல விசயங்களை மிக சரியாக கையாண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இந்த கதையை புடிச்சீங்க, என்று கேட்டேன். அப்போது தான் அவர் தயாரிப்பாளர் தான் கதை எழுதியதாக சொன்னார். அந்த கதையை அவ்வளவு சாதாரணமாக சொல்ல முடியாது, யோசிக்க முடியாது.
பைபோல் டிசாடர் என்பது எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதை மிக சரியாக கதையில் கையாண்டிருக்கிறார்கள். இயக்குநர் குணா உடல்நிலை பாதிக்கப்படும் போது கூட மன சிதைவு எத்தகைய நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதை நான் உணர்ந்தேன். இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை இதுவரை யாரும் கையாண்டதில்லை. சில படங்களில் லேசாக சொல்லியிருந்தாலும், இந்த படத்தில் அதை மிக சிறப்பாக முழுமையாக செய்திருக்கிறார்கள். செந்தில் வேலன் சார் வைத்திருக்கும் ஆறு கதைகளிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன்.
நான் பல படங்களில் போலீஸாக நடித்திருக்கிறேன், ஆனால் இந்த படத்தின் போலீஸ் வேடத்தை வித்தியாசமாக கையாண்டிருக்கிறார்கள், அதற்கு கதை எழுதியிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் குணா பல திறமைகள் கொண்டவர். அவர் ஒரு ஓவியர், கவிதை எழுதுவார், நடனம் ஆடுகிறார், அவர் நிச்சயம் நல்ல நிலைக்கு வருவார்.
என்னுடன் இணைந்து நடித்த ரூசோ சிறந்த நடிகர். அவர் நடித்த வேடம் எனக்கு கொடுத்திருந்தால் தெறித்து ஓடியிருப்பேன். அந்த அளவுக்கு கஷ்ட்டமான வேடம் அது, அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். நடிகை பாடினியுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை, ஆனால் அவரது காட்சிகளை பார்த்து மிரண்டு விட்டேன், ஒரே ஷாட்டில் அந்த காட்சிகளில் நடித்ததாக சொன்னார்கள், சிறப்பாக இருந்தது.
இந்த படத்தை வாழ்த்த வந்த கஸ்தூரி ராஜா சார், கே.ராஜன் சார், இயக்குநர் மைக்கேல், பேரரசு சார் ஆகியோருக்கு நன்றி. இசையமைப்பாளர் சிறப்பான பாடல்கள் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் பேசும் போது, தீபாவளி ஃபேண்ட் கேட்டால் பொங்கலுக்கு கொடுப்பதாக சொன்னார். ஆனால், இந்த கதையை புரிந்துக்கொண்டு இசையமைப்பது ரொம்ப கஷ்ட்டம், அதற்கு காலதாமதம் நிச்சயம் ஆகும்.
சுகுணா மேடமுக்கு சினிமா புதிது என்றாலும் ஒரு வாரத்தில் அதை கற்றுக்கொண்டார். இங்கு என்ன நடக்கிறது, எப்படி கையாள வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றினார் அவருக்கு நன்றி. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் குணா படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது, நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.