உலகில் முதன் முறையாக…. சாதனை படைத்த ‘சீசா’ திரைப்படம்!

ஓர் அதிசயத்தை, சீசா என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கண்டேன்.
பட இயக்குநர் குணா சுப்பிரமணியம் பேசுகையில், “ நான் இயக்குநர் ஆவதற்கு காரணமான கடவுள் சிவபெருமானாக பட தயாரிப்பாளரையும், பார்வதியாக அவரது மனைவியாரையும் பார்க்கிறேன்” என்றார்.
முதல் வாய்ப்பு அளித்த தயாரிப்பாளரை, பல இயக்குநர்கள் இப்படி புகழ்வதை கேட்டிருப்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அடுத்து அவர் சொன்னதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவர், “அத்தனை கெட்ட பழக்கங்களும் என்னிடம் இருந்தன. தயாரிப்பாளரிடம் ஒரு நோயாளியாக தான் நான் அறிமுகம் ஆனேன். என்னை குணப்படுத்தினார். அதோடு என் மீது நம்பிக்கை வைத்து படத்தைத் தயாரித்தார்” என்றார்.
கொஞ்சம் புரிந்தது… தயாரிப்பாளர் டாக்டர் ஜே.செந்தில் வேலன் பேசும்போது தெளிவாக புரிந்தது.
அவர், “இந்தப் படத்தின் இயக்குநர் குணா சினிமா ஆசையால் அவர் பல தோல்விகளை சந்தித்து, விரக்தியில் மதுப் பழக்கத்துக்கு அடிமையாக குடிநோயாளியாக என்னிடம் வந்தார். எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு நிலையில் இருந்தார். யார் சொல்வதையும் கேட்கும் மன நிலையிலும் அவர் இல்லை.
அவருக்கு சிகிச்சை ஆரம்பித்தேன். மெல்ல நான் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், ‘உங்களிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது, நீங்க சொல்வதை நான் கேட்கிறேன’ என்றார்.
அதோடு, மது ஆபத்தை வெளிப்படுத்தும்படி ஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்றார். அதன்படி, என்னை வைத்து ஒரு வீடியோ எடுத்தார். அந்த வீடியோவுக்காக லொக்கேஷன், எனக்கு மேக்கப் என்று என்ன என்னவோ செய்து எடுத்தார். அந்த வீடியோவை பார்த்து நான் பிரமித்து விட்டேன், அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. அந்த வீடியோ தான் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் பிறகு ஒரு குறும்படம் எடுத்தோம். அதுவும் சிறப்பாக வந்தது. இதோ… நான் தயாரிக்க, அவர் இயக்கிய படம் நிறைவடைந்துவிட்டது” என்றார்.
மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விடுபட நினைத்தாலும் கடினம். மிகுந்த மனவலிமை வேண்டும். அப்படியோர் வலிமையால், இன்று இயல்பான மனிதராக உருவாகி, பட இயக்குநராகவும் ஆகி இருக்கிறார் குணா.
‘மதுவில் இருந்து மீள வந்தவர்’ என்று நினைத்து சிகிச்சை மட்டும் அளிக்காமல், அவரது திறமையை உணர்ந்து பட வாய்ப்பு அளித்து இருக்கிறார் டாக்டர் செந்தில்.
அது மட்டுமல்ல…இருவரும் கதை குறித்து விவாதித்தபோது, “பிறருக்கு நல்ல கருத்தைச் சொல்வதாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் இயக்குநர் குணா. அதே எண்ணம்தான் மருத்துவர் செந்திலுக்கும்.
செந்தில் ஒரு மருத்துவர் மட்டுமல்ல… கதை, கவிதை எழுதக்கூடியவர். அவரே ஒரு கதை சொல்ல.. அதை இயக்கி முடித்திருக்கிறார் குணா.
மருத்துவர் தாயாரிக்க… சிகிச்சை பெற வந்தவர் படம் இயக்கியது இதுவாகத்தான் இருக்கும்!
தயாரிப்பாளர் மருத்துவர் செந்தில் கூறிய இன்னொரு விசயமும் நெகிழ வைத்தது:
“படம் தொடங்கலாம் என்று நான் சொன்னவுடன், இயக்குநர் குணா பதற்றமடைந்து விட்டார்; அதனாலேயே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது.
உடனே அவரை அழைத்து, ‘உங்கள் நேர்மை மீதும், திறமை மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எந்தக் காலத்திலும் என்னை ங்கள் ஏமாற்றி விட்டதாக சொல்ல மாட்டேன். படம் தோல்வி அடைந்தால் பரவாயில்லை. தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை, அதனால் எந்தவித பதற்றமும் இன்றி இந்த படத்தை இயக்குங்கள்’ என்றேன்” என தெரிவித்தார் தயாரிப்பாளர் மருத்துவர் செந்தில்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையான பலர் மிகுந்த திறமைசாலிகள், நேர்மையாளர்கள். அப்பழக்கத்தில் இருந்து மீண்டால் அவர்களைச் சுற்றி இருப்போருக்கு சொர்க்கம்தான். அத்தனை இனிமையானவர்கள்.
அப்படியான ஒருவரை மீட்டதுடன், பட வாய்ப்பும் அளித்த தயாரிப்பாளர் மருத்துவர் செந்தில் அவர்களுக்கு நன்றிகள்!
– டி.வி.சோமு