“சினிமாக்கார சீமானுக்கு இது தெரியலையா?”: தயாரிப்பாளர் சங்கம் ஆதங்கம்!

“சினிமாக்கார சீமானுக்கு இது தெரியலையா?”: தயாரிப்பாளர் சங்கம் ஆதங்கம்!

பிரபல நடிகர்களின்  திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை,  நாளொன்றுக்கு 6 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து,  நாம் தமிழர் கட்சியின் அதிகாலைக் காட்சிகள் ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும் செயல் என  அரசுக்கு எதிராக  கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) சார்பில் டி. சிவா மற்றும் ஜி. தனஞ்ஜெயன் ஆகியோர் சீமானுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அதில், “சீமான் அவர்களே.. பிரபல நட்சத்திரங்களின் புதிய திரைப்படங்கள் வெளிமாநிலங்கள், நாடுகளில் காலை 6 மணிக்கே திரையிடப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் காட்சிகள் தொடங்குகின்றன. அதற்குள்ளாகத் தவறான விமர்சனங்களும் திட்டமிட்ட எதிர்மறையான கருத்துகளும் பரப்பப்படுகின்றன. இதனால், படம் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வம் குறைகிறது. இந்த சூழல் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நிலவுகிறது.

இப்பிரச்சினைக்குச் சரியான தீர்வாக, உலகெங்கும் ஒரே நேரத்தில் படங்கள் வெளியாக வேண்டும் என்ற நோக்கிலேயே நாங்கள் முதலமைச்சரிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்து இந்த அதிகாலை சிறப்புக் காட்சி அனுமதியைப் பெற்றுள்ளோம்.

ஆனால் தமிழ்த் திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் இருக்கும் நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை.

தமிழ்த் திரையுலகின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழும் தாங்களும், தமிழ்த் திரையுலகின் நலன் கருதி வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியை வரவேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என அந்தக் கடிதத்தில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பொதுச் செயலாலர் டி.சிவா, பொருளாளர் ஜி.தனஞ்செயன் ஆகியோர் எழுதி உள்ளனர்.