ரோமியோ:  விமர்சனம்: ஐயையோ!

ரோமியோ:  விமர்சனம்: ஐயையோ!

மலேசியாவில் வேலை பார்த்து சம்பாதித்து சொந்த ஊரான தென்காசிக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரது ஓகோ லட்சியம்.

இந்த நிலையில்,மிர்ணாளினி ரவியை.. அட, ஆமாங்க.. கண்டதும் காதல். இரு குடும்பத்தாரும் பேசி, திருமணத்தை நிச்சயிக்கிறார்கள்.

ஆனால்,  மிர்ணாளினிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமே இல்லை. அவருக்கு, சினிமாவில் பெரிய ஹீரோயினாக வர வேண்டும் என்பதே லட்சியம்.

வருங்கால கணவர் விஜய் ஆண்டனிக்கு கண்டிஷன் போட்டு சென்னையிலேயே வந்து செட்டிலாகிறார். தவிர, சில மாதங்களிலேயே விவகாரத்து கேட்கிறார் மிர்ணாளினி.

ஆனாலும் மனைவியை அப்படி நேசிக்கும்  விஜய் ஆண்டனி தானே படம் தயாரித்து மனைவியை ஹீரோயின் ஆக்க திட்டமிடுகிறார்.

இதன்பின் என்ன என்பதுதான் சொச்ச கதை.

வழக்கமான அதே விஜய் ஆண்டனி. எல்லாவித காட்சிக்கும் அதே உறைபனி முகம்… வாய்க்குள்ளேயே முணுமுணுக்கும் வசன உச்சரிப்பு,  உடல் மொழியே இல்லாத பாடி.

க்ரைம் த்ரில்லர் என்றாலே நடிப்பு எத்தனை கிலோ என்பார். இதில் காதல், நெகிழ்ச்சி என காட்சிகளை வைத்து கஸ்டப்பட்டுத்தி இருக்கிறார்கள்.. நம்மை!

அதிலும் கையில் இல்லாத வயலினை வாசிக்கும் காட்சி எல்லாம் விஜய் ஆண்டனிக்கு ரொம்பவே ஓவர். எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறது?

மிர்ணாளினி ரவிக்கு நடிப்புப் பயிற்சி கலைராணி என டைட்டிலில் வருகிறது. அம்மா கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளவர், தனியாக நடிப்புப் பயிற்சியும் சொல்லித் தருகிறார். அவர் நடிக்கும் படங்களில் எப்போதுமே கொஞ்சம் ஓவராகவே நடிப்பார். அவர் சொல்லிக் கொடுத்ததில் புள்ளி ஒரு பிரசண்ட் நடித்திருந்தாலே  மிர்ணாளினி நடிப்பில் பேசப்பட்டு இருப்பார்.  ஊஹூம்!

தற்போதைய சினிமா இலக்கணப்படி, யோகிபாபுவிடம் இரண்டு நாட்கள் கால்ஷீட் வாங்கி ஏதோ எடுத்து இருக்கிறார்கள்.  அவருடைய கதாபாத்திரம் எதற்காக என்றே தெரியவில்லை.

தவிர விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி என  ஒரு பட்டாளமே, சிரிக்க வைக்கிறோம் என்கிற பெயரில் எரிச்சலூட்டுகிறது.

பரத் தனசேகர் இசையமைத்திருக்கிறார். பலவீனமான படத்துக்கு மேலும் பலவீனம்.

வெறுக்கும் மனைவிக்காக வேறொரு பெயரில் உருக்கமாய் ஆறுதல் சொல்கிறார் நாயகன்;  நிஜத்தில் மனைவிக்காக சொந்தமாகவே படம் தயாரிக்கிறார். இப்படி ஒரு ஹீரோ இருக்கும் போது படம் எப்படி முடியும் என சின்ன குழந்தையும் சொல்லிவிடும் என்பது இயக்குநர் வினாயக் வைத்யநாதனுக்குத் தெரியாதா? சரி, தெரிந்த கதைதான் என்றாலும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கலாமே…!

ரோமியோ – ஐயையோ!