மேக்ஸ்: திரைவிமர்சனம்: அதிரடி
போலீஸ் அதிகாரி அர்ஜுன் இரண்டு மாத சஸ்பென்ஷனுக்கு பிறகு புதிய ஸ்டேஷனில் பணியில் சேர்கிறார். இரவில், இருவர் குடித்துவிட்டு போலீசிடம் தகராறு செய்ய, அவர்களை அடித்து இழுத்துவந்து சிறையில் தள்ளுகிறார்.
அன்றைய இரவில் அந்த ஸ்டேஷனில் நடக்கும் ஒரு அதிரடி சம்பவம், மொத்த காலவர்களையும் பிரச்சினையில் சிக்கவைக்கிறது. அந்த சம்பவம் வெளியே தெரிந்தால் மொத்த பேரின் உயிருக்கும், இரு அமைச்சர்களால் ஆபத்து என்கிற நிலை.
இந்த பிரச்சனையில் இருந்து அத்தனை காலவர்களையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்கிறார் அர்ஜுன்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
அர்ஜூனாக சுதீப்… மிரட்டி இருக்கிறார். நிஜ போலீஸ் அதிகாரி போலவே மாஸ் காட்டி இருக்கிறார். அவரது உருவமும், பாடி லேங்குவேஜும் சண்டைக் காட்சிகளை நிஜம் போல் நம்ப வைக்கின்றன. படம் முழுக்க அவர்தான். மற்றவர்களும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.ஒரேநாள் இரவில் நடக்கும் கதையை சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் சேகர் சந்திரசேகர் ஒளிப்பதிவும், எஸ்.ஆர். கணேஷ் பாபுவின் படாதொகுப்பும் சிறப்பாக செயல்பட்டு உள்ளன.
அஜனீஷ் லோக்நாத் இசை படத்துக்கு பலம். அதே நேரம், உதய் குமார் ஒலிப்பதிவு சற்று இரைசல் அதிகம்.
திரைக்கதை, மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் இயக்குநர் விஜய் கார்த்திகேயா.
த்ரில்லர் கதைக் களத்தை வைத்து கதை சொல்லும் போது, அந்தப் படத்திற்குள் செட் செய்யப்பட்டிருக்கும் லாஜிக்கை தாண்டி பார்வையாளர்கள் சிந்திக்க வைக்கவே கூடாது. அதை சரியாக செய்து இருக்கிறார்.
உதாரணமாக… அந்த காவல் நிலையம் அமைந்திருக்கும் பகுதி,ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் காவல் நிலையமா என்கிற கேள்வியே எழவில்லை. அந்த அளவுக்கு அதிரடி திரைக்கதை.
அதே போல் திரைக்கதையில் அசத்தும் திருப்பங்கள். ஹீரோ என்னதான் திட்டமிட்டாலும், அதில் நடக்கும் தவறுகள், அதனால் உருவாகும் புதிய சவால்கள்.., அதை தீர்க்க புதிய திட்டமிடும் ஹீரோ என ஒவ்வொரு காட்சியையும் பரபரவென செல்கின்றன.
தவிர கதையே புதுசுதான். பொதுவாக போலீஸிடமிருந்து தப்பிக்க குற்றவாளிகள் நினைப்பார்கள். இதில் செல்வாக்கு மிக்கஅரசியல் ரவுடிகளிடமிருந்து தப்பி போலீஸ் திட்டம் போடுகிறது.
மொத்தத்தில் ரசிக்கவைக்கும் திரைப்படம்.