டிசி: விமர்சனம்: தேவதாஸின் ரத்தம் தெறிக்கும் பயணம்!
கதைக்களம்
சரத்சந்திர சட்டர்ஜியின் ‘தேவதாஸ்’ நாவல் பாத்திரங்களான தேவதாஸ், பார்வதி, சந்திரா ஆகியோரைத் தற்கால ரத்தமும் சதையுமான கேங்ஸ்டர் உலகுக்குக் கடத்தி வந்திருக்கிறார் இயக்குநர். சிறைப்பறவையான தேவதாஸ், தலைவாசல் விஜய்யின் கேங்ஸ்டர் அணியில் இணைந்து ஆயுதக் கொள்ளையில் ஈடுபடுகிறார். அதிகார அத்துமீறலால் பாதிக்கப்பட்ட சாமானியனுக்காகப் போராடி, ஒரு காவல் அதிகாரியைப் போட்டுத் தள்ளுகிறார். வேலூர் – ஈரோடு நெடுஞ்சாலையில், காவல் அதிகாரி போஜ்ராஜின் பட்டாளத்துக்கும் தேவதாஸ் டீமுக்கும் நடக்கும் துரத்தல் ஆட்டமே மீதிக்கதை.
நடிப்புத் திறன்
-
லோகேஷ் கனகராஜ்: ரக்கட் அசுரனாக, உடல்மொழியில் மிரட்டுகிறார். கோபத்தைக் குறைத்து, ஆழமான உணர்வுகளைக் கடத்தும் இடங்களிலும், துயரப் பெருக்கிலும் தடம் பதிக்கிறார். தாயை பலி கொடுத்த சோகம், ஆதங்கம், ஆத்திரத்தை எப்போதும் முகத்தில் தேக்கி வைத்து ரஃப் அண்ட் டஃப்பாக நடித்து இருக்கிறார். காதலைக்கூட, அதே ஸ்டைலில் சொல்லி கவர்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகளில், அட போட வைக்கிறார். மொத்தத்தில், செம ஹீரோ ஒருவர் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்து இருக்கிறார்.
-
வாமிகா கபி: சந்திராவாக வந்து திரையை ஆக்கிரமிக்கிறார். நடுக்கமும் கம்பீரமும் கலந்த நடை, ஆத்திரத்தை அடக்கி வெளிப்படுத்தும் விதம் என அழுத்தமான நடிப்பு.
-
பிற கலைஞர்கள்: சஞ்சனா மென்மையான நடிப்பால் கவனிக்க வைக்கிறார். அவினாஷ், ஜவஹர், பாலாஜி தேவிபிரசாத் ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறார்கள். ஓட்டுநராக வரும் சரத் ரவி கச்சிதம்; ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்ட இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

தொழில்நுட்ப பலம்
-
ஒளிப்பதிவு (முகேஷ் ஜி): நிதானமற்ற க்ளோஸ்-அப் ஷாட்டுகள், லைட்டிங் மூலமே மூட் உருவாக்கும் விதம், மிரட்டலான சண்டைக் கோணங்கள் என ஒளிப்பதிவு அற்புதம்.
-
படத்தொகுப்பு (பிரசன்னா ஜி.கே): பிசிறில்லாத கட்கள் மூலம் துரத்தல் காட்சிகளின் விறுவிறுப்பைக் கூட்டுகிறார்.
-
இசை (அனிருத்): ‘பூம் பா டிகா’, ‘ஹேங்கோவா’ எனப் பாட்டுகளில் அதிரடி காட்டியவர், ‘விழிகளே’ மெலடியிலும், கிளாசிக்கல் பின்னணி இசையிலும் பிளடி ஸ்வீட் மேஜிக் நிகழ்த்தியுள்ளார்.
-
சண்டைப்பயிற்சி (பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு): இடைவேளைக் காட்சியில் வெடி வெடிக்க வைத்திருக்கிறார்.
இயக்கமும் திரைக்கதையும்
அருண் மாதேஸ்வரன் மற்றும் அருண் ரஞ்சனின் கூர்மையான திரைக்கதை, வழக்கமான போலீஸ் – கேங்ஸ்டர் கதையைப் பரபரப்பான ‘டாம் & ஜெர்ரி’ ரேஸாக மாற்றுகிறது. சந்திரா கதாபாத்திரத்தைக் வெறும் கதாநாயகியாக நிறுத்தாமல், கதையின் திருப்புமுனையாக மாற்றியது சிறப்பு. “என்னை மாதிரி இந்த ரோஸும் பிளாஸ்டிக்”, “இங்க போலீஸே தப்பு பண்ணா என்ன பண்றது?” போன்ற வசனங்கள் சிஸ்டத்தின் மீது கூர்மையான கேள்விகளை முன்வைக்கின்றன.
நிறை, குறைகள்
நிறை:
-
லோகேஷ் – வாமிகா கூட்டணி நடிப்பு
-
அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசை
-
தொய்வில்லாத முதல் பாதித் திரைக்கதை
குறை:
-
கேங்ஸ்டர்களின் இருப்பிடத்தை போலீஸ் மிகச் சுலபமாகக் கண்டுபிடிக்கும் லாஜிக் மீறல்கள்
-
க்ளைமாக்ஸ் வரை நீளும் தொடர் சேஸிங் உருவாக்கும் லேசான சலிப்பு
-
அவசியமற்ற இரட்டை அர்த்த உரையாடல்கள்
மொத்தத்தில், லாஜிக் கேள்விகளை ஓரங்கட்டிவிட்டுப் பார்த்தால், இந்த ‘டிசி’ – ஆக்ஷன் பிரியர்களுக்கு ஒரு அட்டகாசமான விருந்து.
ரேட்டிங்: 3.7/5
