அஞ்சாமை: திரை விமர்சனம்

அஞ்சாமை: திரை விமர்சனம்

‘மக்கள் பிரச்சினையை மையமாக வைத்து திரைப்படங்கள் வருவதில்லை; வந்தாலும் அது மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதில்லை’ என்ற விமர்சனம் தமிழ்த் திரையுலகு மீது உண்டு.

இந்தப் பழியை, சொல்லி வைத்து அழித்திருக்கிறது ‘அஞ்சாமை’ திரைப்படம். மனித உயிர்க்கொல்லியான நீட் குறித்து, அதிகார வர்க்கத்தின் முன் ஆணித்தரமாக கேள்விகளை எடுத்து வைத்து இருக்கிறது. நீட் காரணமாகஏற்பட்டும் பாதிப்பை, உயிர்ப்பலியை கண்முன் நிறுத்தி கலங்க வைக்கிறது.ஆவணப்படத்தைப் போல அத்தனை தரவுகளை கொட்டுகிறது.. அதே நேரம் ஒரு முழு நீள திரைப்படத்துக்கான இலக்கணத்துடன் ரசிக்க, நெகிழ, கேள்வி கேட்க வைக்கிறது.

நடிப்பு தீவிரவாதியான விதார்த்துக்கு இப்படம் இன்னொரு மைல் கல். வாணி போஜனுக்கும் அற்புத பாத்திரம். இவர்களது மகனாக வரும் கிரித்திக் மோகன், சிறப்பாக நடித்து உள்ளார். ரகுமானும் அப்படியே.

கார்த்திக்கின் ஒளிப்பதிவு, ராகவ் பிரசாத்தின் இசை, படத்துக்கு பலம். ஒவ்வொரு காட்சியையும் அதி அற்புதமாக உருவாக்கி நெஞ்சில் பதிய வைக்கிறார் இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன்.சமூக அக்கறையுடன் ‘திருச்சித்ரம் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் படத்தைத் தயாரித்து இருக்கும்  திருநாவுக்கரசு,  படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் ஆகியோருக்கும் நன்றிகள்.

படத்தில் வரும் சில வசனங்களை குறிப்பிட்டாலே போதும்.. படத்தின் தரம் விளங்கும்.

“சிலம்பம் கத்துகிட்டு களத்துக்கு வந்தவன்கிட்ட, கத்தி சண்டை போடச்சொன்னா எப்படி சார்?”
“மகனே.. நல்லாத்தான் படிக்கிறே.. இருந்தாலும் இந்த கம்ப்யூட்டர் படிக்கக்கூடாதா.. டாக்டருக்குத்தான் படிக்கணுமா?”

”ரெட் கலர் சட்டை போட்டா, எக்ஸாம் எழுத முடியாது!”

“இது ஆண்டவன் சதியா.. ஆண்ட, அவன் சதியா”

“நான் நல்லா படிச்சதுதான் சார் தப்பு!”
“கஷ்டப்பட்டுத்தான் படிக்கணுமா, இஷ்டப்பட்டு படிக்கிற மாதிரி மாத்த முடியாதா”

”போட்டோவை ஸ்கேன் பண்ணனுமா.. ஆஸ்பத்திரி போவணுமா?”

“முக்கியமான செய்தின்னா, பத்திரிகையில சின்னதாத்தான் போடுவாங்க!”

“ரயில்ல டிக்கெட் எடுக்காம போனா அபராதம் போடறீங்க.. தொன்னூறு பேர் போக வேண்டிய கோச்ல நானூறு பேருக்கு டிக்கெட் கொடுக்கிறீங்களே.. அதுக்கு அபராதம் என்ன”

“மற்ற எல்லா மாநில மாணவர்களும் அவங்கவங்க மாநிலத்திலேயே எக்ஸாம் எழுதறாங்க.. தமிழ் நாட்டு மாணவர்களுக்கு மட்டும் ஏன் ஜெய்ப்பூர்ல எக்ஸாம்”

“ஓட்டுச்சாவடி மட்டும் பக்கத்துல வக்கறீங்களே.. அடுத்த முறை டில்லியில வைங்க.. நாங்க போயி ஓட்டுப்போடுறோம்”

@@@@@@@@@@@@@@

அதே போல காட்சி அமைப்புகளும் அருமை.

நாயகனுக்கு சர்க்கார் என்று பெயர் வைத்து, கேள்வி கேட்க வைத்தது.
“சர்க்கார் மரணம்” என்கிற போஸ்டர்.

நீட் என்கிற வார்த்தைக்குப் பதிலாக, புதிய தகுதி தேர்வு என சொல்கிறார்கள். அதே நேரம், ஒரு காட்சியில், “பாரத் நீட் தேர்வு பயிற்சி மையம்” என்கிற போர்டு, இன்னொரு காட்சியில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதா போஸ்டர் என தில்லாக காட்சிகளை வைத்து உள்ளனர்.

தொன்னூறு பேர் பயணிக்க வேண்டிய ரயில் பெட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி (ஏற்றி) திண்டாட… ரயிலின் பக்கவாட்டில் தேசிய கொடி… நீட் தேர்வு நடக்கும் மையத்தில் “ஸ்விச் பாரத்” குப்பைத் தொட்டி என குறியீடுகளில் அசத்தி இருக்கிறார்கள்..

நீட் மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை பரிசோதிப்பது, “ஜெய்ப்பூர்னு நாங்க போடலை… கம்ப்யூட்டர் தானா போட்டுருச்சு” என திமிராக அதிகாரி பதில் சொல்ல.. “அப்படினா கம்ப்யூட்டருக்கு சம்பளம் கொடுத்திரலாமா” என வழக்கறிஞர் அதிரடியாக கேட்பது..

நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மகன் தற்கொலை செய்து கொள்வானோ என பயந்து சீலிங் பேனை கழற்றி, டேபிள் பேன் வைப்பது..

அறிமுகம் இல்லாத ஜெய்ப்பூர் நகரில் அப்பாவை காணவில்லை.. அவரது செருப்பு மட்டும் சாலையில் கிடக்க.. மகன் அப்பா என கதறுவது.. அவன் சத்தம் கேட்காமல் அதை இசை நிரப்புவது.. அற்புதம்..

“போராட்டம் போராட்டம் என்றால் நாடு நாசமாயிடும்” என்று வில்லன் (வழக்கறிஞர்) பேசுவது..

“கிரிக்கெட்டுக்கு தனி ட்ரெய்ன் விடறீங்க.. நீட் தேர்வுக்கு விட முடியாதா” என்ற கேள்வி..

@@@@@@@@@@@@@@@

அஞ்சாமை: அற்புதம்!

 

 

 

Related Posts