கோயில்களை சுற்றியுள்ள லாட்ஜ்களில் அக்கிரமம்!: திருப்பதி விவகாரத்தில் சிவகுமாருக்கு ஆதரவு அளிக்கும் நடிகர்!
திருப்பதி கோவிலை தரக்குறைவாக பேசியதாக, நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இந்நிலையில், சிவகுமாருக்கு பிரபல நடிகர் சேஷூ ஆதரவு அளித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் நடிகர் சிவகுமார் ஒரு கூட்டத்தில் பேசும்போது, “ஒரு பணக்காரன் திருப்பதிக்குச் சென்று விடுதி அறையில் தங்குகிறான்.
அன்றிரவு மது போதையில் இருந்துவிட்டு காலையில் குளிக்காமல் கோயிலுக்குள் செல்கிறான். அவனுக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. கால்நடையாக நடந்துசெல்லும் பக்தர்களை தேவஸ்தானம் மதிப்பதில்லை!” என்று பேசினார்.
சிவகுமார் பேசியது, கோயிலை அவமதிக்கிறது என திருப்பதி தேவஸ்தானம் சார்பில், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “லொள்ளு சபா” என்ற டி.வி. காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவரும், சந்தானத்துடன் ஏ.ஒன், திரவுபதி உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவருமான சேஷூ, சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிவகுமார் விவகாரம் குறித்து பத்திரிகையாளர் டி.வி.எஸ்.சோமு எழுதிய முகநூல் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ள சேஷூ, “அநியாயம் நடக்காத இடமேது? பணக்காரர்கள் செய்யும் தவறை சிவகுமார் சுட்டிக் காட்டியிருப்பார். மற்றபடி, கடவுளை பழி சொல்லிருந்தாலோ, தரக்குறைவா பேசிருந்தாலோ ததவறு
கோவில்களை சுற்றிய லாட்ஜ் விடுதிகளில் நடக்காத அக்கிரமமேது?
இரவில் குடி சீட்டு எல்லாமே நடக்கும்!
தவறு செய்பவனை கடவுள் தண்டித்துமிருக்கிறார்
திருப்பதி என்பது, ஸ்ரீனிவாசர் கோட்டை , நன்மை தீமையை அவர் வழங்குவார்!” என சேஷூ தெரிவித்திருக்கிறார்.