எம்.ஜி.ஆர். வாழ்வில் மர்மமான நாளில் வெளியாகும் ‘எம்.ஜி.ஆர்.’!
எம்.ஜி.ஆர். என்று சுருக்கமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள, மதகதராஜா ( MGR – Madha Gaja Raja ) திரைப்படம், எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் மறக்க முடியாத – மர்மமான – ஒரு நாளில் வெளியாகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில், விஷால்,சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்டோர்இப்படத்தில் நடித்துள்ளனர். அத்துடன் மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படத்தில், முதன் முறையாக நடிகர் விஷால் ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.
‘மதகதராஜா’ டிரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படம் வெளியாவது தாமதமானது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து வரும் ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
மதகதராஜா என்கிற பெயை சுருக்கி எம்.ஜி.ஆர். என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படம், எம்.ஜி.ஆர். வாழ்வில் மறக்க முடியாத நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
ஆம்…
1967ம் வருடம் இதே ஜனவரி 12ம் தேதிதான், நடிகர் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார்.
எம்.ஆர்.ராதா (படக்காட்சி) – எம்.ஜி.ஆர். (மருத்துவமனையில்..)
இருவருக்கும் அரசியல் ரீதியான விரோதம் இருந்தது என நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. இறுதியில் எம்.ஆர்.ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட, தண்டனை ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.
அதன் பிறகும்.. ஏன், இன்றுவரை, இருவருக்குள்ளும் என்ன பிரச்சினை என்று பல்வேறு யூகங்கள் தொடர்கின்றன
விடுதலை ஆன பிறகு, மலேசியவில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்தார் எம்.ஆர்.ராதா. ‘கூட்டத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்’ என விழா ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.
ஆனால் கூட்டத்தில் எம்.ஆர்.ராதா, “உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்’ என்று சர்வசாதாரமாக சொல்லிவிட்டுப்போனார்.
இது, துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணம் என்ன என்ற கேள்வியை இன்னும் அதிகமாக்கியது.
அப்படி இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளக்கிய – துப்பாக்கிச் சூடு நடந்த – ஜனவரி 12ம் தேதி, எம்.ஜி.ஆர். திரைப்படம் வெளியாகிறது!
எதார்த்தமாக இது நடந்ததா… இல்லை அரசியல் உள்குத்து இருக்கிறதா… படம் பார்த்தால்தான் தெரியும்!
– டி.வி.சோமு

