ரத்னம் விமர்சனம்

தமிழ்நாடு – ஆந்திரா எல்லைப் பகுதியில் நடக்கும் மிகப்பெரும் கொள்ளைச் சம்பவத்துடன் படம் ஆரம்பிக்கிறது. அதைத் தொடர்ந்து காட்சிகள் வேலூர் பக்கம் திரும்புகின்றன. அங்கு, எம் எல் ஏ சமுத்திரக்கனி அடியாளான விஷால், தனியார் காவல்துறை போல செயல்படுகிறார். அதாவது நல்ல ரவுடி!
பக்கத்து ஊரைச் சேர்ந்த ப்ரியா பவானி ஷங்கர், நீட் தேர்வு எழுத வேலூர் வருகிறார். அவரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொலை செய்ய முயல்கிறது. அதைத் தடுத்து, ப்ரியாவை காப்பாற்றுகிறார் விஷால்.
ஒரு நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் துடிப்பதை அறிகிறார் விஷால்.நிலத்தை மீட்டு ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தை விஷால் காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.
ஹரி படத்திற்கு ஏற்ற, ஹீரோ விஷால்தான். விஷால். ஆறடி உயரம், அட் எ டைமில் ஆயிரம் பேர் வந்தாலும் பேரை தூக்கி போட்டு அடித்தால் நம்பும்படி உள்ளது… படம் முழுவதும் ஆக்ஷன் அதகளம் செய்துள்ளார் விஷால்.
ப்ரியா பவானி ஷங்கருக்கு கனமான கதாபாத்திரம். இரட்டை வேடத்தில் வருகிறார். இரண்டிலும் முத்திரை பதித்து உள்ளார்.
விஜயகுமார், ஜெகதீஸ் என அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர். யோகிபாபு வந்து வழக்கம்போல் கலாய்த்து சிரிப்பூட்டுகிறார்.டி.எஸ்.பி.யின் இசையில் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசையும் கவர்கிறது. ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
தனது அம்மாவைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் ப்ரியாவை காப்பாற்றத் துடிக்கிறார் விஷால். ஆனாலும் அதில் பல பேஸ் ஸ்டோரிகளை வைத்து தனக்கே உரிய முத்திரையைப் பதித்து உள்ளார் ஹரி.
விஷாலுக்கு என்று வைத்த பேக் ஸ்டோரி, விஷாலுக்கும் வில்லனுக்கும் என்ன சம்மந்தம் என ஒவ்வொன்றாக காட்டிய விதம், இயக்குநர் ஹரி மிரட்டி இருக்கிறார்.குறிப்பாக, இடைவேளை சேஸிங் காட்சி மிரட்டல்.
மொத்தத்தில் குடும்பத்தினர் அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.