ராஜாகிளி: திரை விமர்சனம்: ஃபேமிலி த்ரில்லர்!

ராஜாகிளி: திரை விமர்சனம்: ஃபேமிலி த்ரில்லர்!

தமிழ்நாட்டையே அதிரவைத்த பிரபல வழக்கை “புனைகதையாக” எடுத்து அதிரவைத்து இருக்கிறார்கள்!

தொழிலதிபர் முருகப்பா, முருகக்கடவுளுக்கு அடுத்து மதிப்பது தனது மனைவியைத்தான். ஆனால், மனைவிக்கோ கணவன் மீது சந்தேகம். நொந்து நூலாகிக் கிடக்கும் அவருக்கு எதேச்சையாக ஒரு அழகியின் அன்பு கிடைக்க.. அவளை திருமணம் செய்து கொள்கிறார். அதே போல இன்னொரு இடத்தில் அன்பு கிடைக்க.. அவளையும் திருமணம் செய்துகொள்கிறார்.இடையில் சில விவகாரங்கள் ஏற்பட்டு கொலை வழக்கில் சிக்குகிறார். அதன் பிறகு என்ன ஆகிறது என்பதை பேமிலி மற்றும் த்ரில்லராக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்.

தம்பி ராமையாதான் ஹீரோ! “அட இவரா..” என்று நினைக்கவைக்காமல் சிறப்பாக நடித்து உள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில பரிதாபத்தை ஏற்படுத்தும் அவர், முதலாளியாக வரும்போது கம்பீரத்தை வெளிப்படுத்துகிறார். மொத்தத்தில் சிறப்பான நடிப்பு.அன்பகம் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை நடத்துபவராக சமுத்திரகனி. வழக்கம்போல அன்பான மனிதராக வருகிறார்.

தம்பி ராமையாவின் மனைவியாக வரும் தீபா எப்போதும்போல், அதிரடி + காமெடி நடிப்பை அளித்து ரசிக்க வைக்கிறார். அதே நேரம் கடைசி காட்சியில் கணவனை மடியில் கிடத்தி புலம்பி, நம்மை கலங்கவைக்கிறார்.

தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் சுபா, இளம் காதலியாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீம்ப்டான், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், சாமியாராக வரும் பழ கருப்பையா, கையாட்களாக வரும் டேனியல் அனி போப், பிரவீன் குமார்.ங் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்து உள்ளனர்.

நீதிபதியாக நாம் தமிழர் சாட்டை துரைமுருகன், வழக்கறிஞராக தயாரிப்பாளர் & இயக்குநர் சுரேஷ் காமாட்சி, ஒரு சிறிய வேடத்தில் ஹூமாயுன் என்று நாதக பிரமுகர்கள் நடித்து உள்ளனர்.

இன்னொரு பக்கம், நாதகவை – சீமானை கடுமையாக விமர்சிக்கும் பழ. கருப்பையாவுக்கும் சிறிய ஆனால் முக்கிய வேடம்.இந்த காம்பினேசன் ரசிக்கவைக்கிறது.நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்ட தம்பிராமையா இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக புதிய முகம் காண்பித்து இருக்கிறார். பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. காட்சிகளுக்கு ஏற்ற பொருத்தமான வரிகள். அதுவும் இவரே. பாராட்டுகள்.

சாய் தினேஷின் பின்னணி இசையும் சிறப்பு.

ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத் – கோபிநாத் ஆகியோரது கேமரா படத்துக்கு பலம்.நல்ல மனிதனையும், மனைவியின் வீண் சந்தேகம் திசை திருப்பிவிடும் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சுவாரஸ்யமாக அளித்து இருக்கிறார் இயக்குநர் உமாபதி ராமையா.

பேமிலி + த்ரில்லராக படத்தை அளித்து ரசிக்கவைக்கிறார். பாராட்டுகள்.

நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு வழக்கை, குற்றம் சாட்டப்பட்டவரின் பார்வையில் திரைக்கதையாக்கி படமாக அளிப்பது வித்தியாசமான ஒன்றுதான். அதற்காகவும் பாராட்டலாம்.