“பணக்காரன்- செல்வந்தன்!”: ‘கார்மேனி செல்வம்’ விழாவில் சமுத்திரக்கனி சொன்ன ரகசியம்!

“பணக்காரன்-  செல்வந்தன்!”: ‘கார்மேனி செல்வம்’ விழாவில் சமுத்திரக்கனி சொன்ன ரகசியம்!

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

 தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு: மீண்டும் ஒரு ஃபேமிலி டிராமா!

 “இது ஒரு அழகான ஃபேமிலி டிராமா. தியேட்டருக்கு வரும் அனைத்து தரப்பு மக்களையும் இந்தப் படம் எளிதாகத் தொடும்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்குப் பின்னால் உழைத்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தனது நன்றியை உரித்தாக்கினார்.


இசையமைப்பாளர் ராமானுஜம்: ஆன்மா நிறைந்த நேரடி இசை!

இந்தக் காலத்தில் ஏஐ (AI) தொழில்நுட்பம் இசையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், “எங்கள் படத்தில் ஒரு இடத்தில்கூட ஏஐ பயன்படுத்தவில்லை” என்று பெருமிதத்துடன் கூறினார். கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை போன்ற நகரங்களுக்குச் சென்று நேரடி இசைக் கலைஞர்களைக் கொண்டு பாடல்களையும் பின்னணி இசையையும் பதிவு செய்துள்ளனர். மியூசிக்லௌட் ஸ்டுடியோ மூலம் இந்தப் படத்தின் இசைப் பயணத்தை ஒரு கூட்டு முயற்சியாக மாற்றியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நடிகர் கோதண்டம்: அப்பாக்களின் அழியாத வலி!

மேடையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய கோதண்டம், “ஒரு தாய் அனுபவிக்கும் பிரசவ வலிக்கு இணையான மற்றொரு வலி உலகத்தில் உண்டென்றால், அது தன் பிள்ளையோ அல்லது மனைவியோ கேட்கும் ஒரு பொருளை வாங்கித் தர முடியாத கணவனின்/தகப்பனின் மனவலிதான்” என்றார். அந்த வலியை இந்தப் படம் அணு அணுவாகப் பேசுகிறது என்றும், சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடிக்கவில்லை, ஒரு தகப்பனாக வாழ்ந்திருக்கிறார் என்றும் புகழ்ந்து தள்ளினார். மேலும், அரசு திரையரங்குகளைக் கட்டி எளிய விலையில் தின்பண்டங்கள் மற்றும் பார்க்கிங் வசதிகளைச் செய்து கொடுத்தால் பல இயக்குநர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.


 நடிகைகள் அபிநயா & லட்சுமி பிரியா: அன்பான படப்பிடிப்புத் தளம்!

சைகை மொழி மூலம் பேசிய அபிநயா, “உதவி இயக்குநர்கள் இன்றி இயக்குநரே நேரடியாகக் கதையை விளக்கியது தனக்கு வசதியாக இருந்தது” என்றும், சமுத்திரக்கனியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் நெகிழ்ந்தார். நடிகை லட்சுமி பிரியா பேசுகையில், “படப்பிடிப்பு தளத்தில் இருந்த அந்த அன்பும் எளிமையும்தான் படத்திலும் எதிரொலிக்கிறது. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு தூய்மையான படைப்பு,” என்று குறிப்பிட்டார்.எழுத்தாளர் செந்தமிழன்: வளைகுடா வாழ்க்கையும் வாழ்வாதாரத் தேடலும்!

சிறப்பு விருந்தினராக வந்த செந்தமிழன், “7000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கடலோடிகள் தான். ஆனால், எங்கு இருந்தால் உங்கள் உடலும் மனமும் நலமாக இருக்கிறதோ, அதுதான் உங்கள் ஊர்” என்ற தத்துவார்த்தமான கருத்தை முன்வைத்தார். வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்களின் சமூக உளவியல் போராட்டத்தை இந்தப் படம் நேர்மையாகப் பதிவு செய்திருப்பதாகப் பாராட்டினார்.


 இயக்குநர் ராம் சக்ரி: சமரசமில்லாத படைப்பு!

தனது பெயரை கார்த்திக் என்பதிலிருந்து ராம் சக்ரி என மாற்றிக்கொண்ட இயக்குநர், “முதல் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை எந்த இடத்திலும் சமரசமே செய்துகொள்ளாமல் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்” என்றார். சமுத்திரக்கனியிடம் கதையைச் சொன்னபோது அவர் கேட்ட ஒரே கேள்வி “நிம்மதியா வாழணுமா? செல்வத்தோட வாழணுமா?” என்பதுதான். அந்த நிம்மதியைத் தேடும் பயணமே இந்தப் படம் என்று விளக்கிய அவர், புதுமுகங்களை வைத்துப் படம் எடுப்பதில் இருக்கும் சவால்களையும், இசை கலைஞர்களுக்குப் பயன் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் இசையமைப்பாளரின் பெயரை நிறுவனமாக மாற்றிய புதுமையையும் பகிர்ந்துகொண்டார்.

நடிகர் சமுத்திரக்கனி: EMI இல்லாத சுதந்திர வாழ்வு!

“கதையைப் படிக்கும்போதே இயக்குநரின் மனசு எனக்குத் தெரிந்துவிட்டது. ராம் சக்ரியைப் போன்ற மனிதர்கள் அரிதானவர்கள்,” என்று அவரைப் புகழ்ந்த சமுத்திரக்கனி, தற்சார்பு வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப் பேசினார். “அடுத்தவர் உதவியை எதிர்பார்க்காமல் வாழ்வதே பெரிய செல்வம். EMI என்ற பெயரில் சுமைகளைத் தூக்கிக் கொண்டு திரியாதீர்கள். அந்தச் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு கைவீசி நடந்து பாருங்கள், மகிழ்ச்சி தானாக வரும்” என்று வாழ்வியல் தத்துவத்தோடு தனது உரையை நிறைவு செய்தார்.

Related Posts