பிதா: சினிமா விமர்சனம்

பிதா: சினிமா விமர்சனம்

ஊர் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்துகொண்டு இருக்கிறது; இரவு நேரம். அதீதமான கூட்டம். அதில், இளம்பெண் பிதாலெஷ்மி காணாமல்போன தன் தம்பியைத் தேடிச் செல்கிறாள்.

மறுபுறம், கோடீஸ்வரர்களைக் கடத்தி – மிரட்டி – பணம் பறிக்கும் ஒரு கும்பல் பணக்காரர் ஒருவரை கடத்திவைத்து உள்ளது. அவரது மனைவியிடம், ர. 25 கோடி ரூபாயை கேட்டு மிரட்டுகிறது.

அந்தக் கொள்ளைக் கும்பலிடம் பிதாலெஷ்மி சிக்கிக் கொள்கிறாள்.
அதன் பிறகு என்ன ஆனது.. பிதாலஸ்மி தப்பித்தாளா என்பதுதான் கதை.

பிதாலெஷ்மியாக வரும் அனுகிருஷ்ணா சிறப்பாக நடித்து உள்ளார். காணாமல் போன
தம்பியைத் தேடும் பதற்றம், அபாய சூழலில் சிக்கி தடுமாறுவது, காதலனிடம் காட்டும் நேசம் என பலவித உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

முக்கிய வில்லனாக ஆதேஷ்பாலா வருகிறார். கோடீஸ்வரரை வழி மறித்து கடத்துவது, பணம் கேட்டு அவரது மனைவியிடம் மிரட்டுவது என அசத்தி இருக்கிறார்.

காமெடி வில்லனாக வருகிறார் சாம்ஸ். கொஞ்சம் சுவாரஸ்யம் ஏற்படுத்துகிறார்.
நாயகியின் தம்பியாக சிறுவன் தர்ஷித். காது கேட்காத, வாய்பேச முடியாத சிறுவனாக வந்து கவனத்தை ஈர்க்கிறான்.

தொழிலதிபரின் மனைவியாக வருகிற ரெஹானா அசத்தலாக நடித்து உள்ளார். அவரது உண்மை முகம் வெளிப்படும்போது அதிர்ச்சி!

தொழிலதிபருக்கு கார் ஒட்டுநராக வரும் சிவாஞ்சியும் சிறப்பாக நடித்து உள்ளார்.

பிதா லெஷ்மியின் காதலனாக ஸ்ரீராம் சந்திரசேகர், தொழிலதிபராக அருள் மணி, வில்லனின் உதவியாளராக மாரிஸ் ராஜா என அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

திரில்லர் படத்துக்கேற்ற அதிரடி இசையை அளித்துள்ளார் இசையமைப்பாளர் நரேஷ். ஒளிப்பதிவாளர் இளையராஜாவும் சிறப்பான பங்களிப்பை அளித்து இருக்கிறார். திருவிழாக் கூட்டம், இரவு நேர சாலை, வில்லனின் வீடு பல லொகேசன்களை கண்முன் நிறுத்துகிறார். எடிட்டிங்கும் படத்துக்கு பலம்.

இந்தப் படத்தை 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்து முடித்து சாதனை படைத்துள்ளது படக்குழு. புதிய முயற்சி என்பதோடு ரசிக்க வைக்கும் திரைப்படத்தை அளித்த இயக்குநர் சுகனை பாராட்டலாம்.

 

Related Posts