” ’பேச்சி’ சக்ஸஸ்! விரைவில் இரண்டாம் பாகம்!”: தயாரிப்பாளர் அப்டேட்
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரிக்க,, அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி உருவாக்கத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியானது, பேச்சி.
இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன், “சினிமா வர்த்தகமே நிலையற்ற சூழலில் இருக்கும் போது பேச்சி என்ற சிறு படம் 10 வது நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. முதல் நாளில் எங்களுக்கு 18 காட்சிகள் ஒதுக்கப்பட்டது, இரண்டாவது நாளில் சென்னையில் மட்டும் 75 ஸ்கிரீன்ஸ் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இன்று 10 நாட்களை கடந்து 75 சதவீத தியேட்டர்களை நாங்கள் தக்க வைத்துக்கொண்டு உள்ளோம்” என்றார்.
படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின், “பேச்சி படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடகத்தினர், சிறப்பாக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. இந்த படத்தை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்த வெரூஸ் புரொடக்ஷன்ஸ் முஜிப் சார் மற்றும் சஞ்சய் சார், எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கோகுல் மற்றும் இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி.” என்றார்.
வெரூஸ் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் ஜெய்சங்கர், “பேச்சி படத்தை பொருத்தவரை ரியல் ஹீரோ பிரஸ் தான். படம் எடுத்தது ஒரு பக்கம் இருந்தாலும், பத்திரிகையாளர்களின் எழுத்து தான் மக்களை திரையரங்கிற்கு கொண்டு வந்தது, பத்திரிகையாளர்களுக்கு வெயிலோன் மற்றும் வெரூஸ் சார்பில் மிகப்பெரிய நன்றி” என்றார்.வெரூஸ் நிறுவனத்தை சேர்ந்த முஜிப், “பத்திரிகைத்துறையினரின் எழுத்தால் தான் மக்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விநியோக தலைமையாளர் குகன், “ஆடி அமாவாசை, பிரண்ட்ஸிப் டே இந்த தருணத்தில் தான் பேச்சி படம் வெளியானது. வியாபார ரீதியாக பேச்சி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தை கடந்து கர்நாடகாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கான வியாபாரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இயக்குநர் பி.ராமச்சந்திரன் “பத்திரிகையாளர்களுக்கு போடப்பட்ட காட்சி தான் எனக்கான முக்கியமான தருணம். படம் போட்ட பிறகு நான் பதற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்தேன், காரணம் நீங்கள் தான் முதல் நீதிபதி, அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு நீங்கள் தான் எப்படி இருக்கிறது என்று சொல்லப் போறீங்க.
என்னுடன் நண்பனாக பழகிவிட்டு, என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடன் தயாரிப்பாளராக பயணித்த கோகுல் பினாயின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும், அவருக்கு எனது இரண்டாவது நன்றி. பிறகு எனது தொழில்நுட்ப கலைஞர்கள், நான் என்ன சொல்வேன், என் சிந்தனை எப்படி இருக்கும் என்பதை புரிந்துக்கொண்டு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி. படத்தில் நடிகர், நடிகைகளும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
கடினமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தினாலும் எந்தவித கஷ்ட்டத்தையும் வெளிக்காட்டாமல் நான் என்ன சொன்னாலும் அதை செய்த பாலசரவணன், காயத்ரி ஆகியோருக்கு நன்றி. பேச்சியாக நடித்த சீனிபாட்டி இந்த வயதிலும் மலைமீது பயணித்து நடித்துக் கொடுத்தார், அவருக்கு பெரிய நன்றி. இன்று ரசிகர்கள் பேச்சி பாட்டி எங்கே என்று கேட்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு பேச்சி என்ற தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்தேன், அந்த படத்தை பார்த்துவிட்டு பாலுமகேந்திரா சார் என்னை பாராட்டியதோடு, அவருடன் என்னை சேர்த்துக்கொண்டு எனக்கு சினிமா சொல்லிக்கொடுத்தார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு நான் வந்தபோது எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும், என்னுடன் எப்போதும் துணை நின்ற என் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஜென, “பேச்சி என்ற சிறிய படத்தை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற மீடியாக்களுக்கு மிகப்பெரிய நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராமச்சந்திரன் சாருக்கும், கோகுல் பினாய்க்கும் நன்றி. எனக்கு இது தான் முதல் ஸ்கீரின் பிரசன்ஸ். இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் தேவ், “இது வெற்றி விழா என்பதை விட நன்றி தெரிவிக்கும் விழா என்றால் தான் சரியாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
பேச்சி கதாபாத்திரத்தில் நடித்த சீனிபாட்டி, “, எனக்கு 90 வயதாகிறது. நான் ஏற்காடு மலையில் சிரமப்பட்டு ஏறி நடித்தேன். என்னுடன் அனைவரும் கஷ்ட்டப்பட்டு நடித்தார்கள். இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நடிப்பேன். உங்களுடைய வாழ்த்துகள் எங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும்” என்றார்.
பாலசரவணன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த பானு பிரியா, “பேச்சி படத்தில் என்னை நடிக்க வைத்த வெயிலோன் டீம் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன், நன்றி.” என்றார்.
வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜராஜன், “பத்திரிகையாளர்களுக்கு நன்றி, என் நண்பர்கள் சொன்னது போல் சிறிய கண்டெண்டாக இருந்தாலும் அதை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது பத்திரிகையாளர்கள் தான், அவர்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. எங்களுடைய முதல் படம் இது, எங்களுடன் இணைந்து விநியோக பணிகளை சிறப்பாக செய்த ட்ரீம் வாரியர்ஸ் குகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.எங்கள் பி.ஆர்.ஓ தர்மா சிறப்பாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொடுத்து வருகிறார், தொடர்ந்து இதை அவர் செய்ய வேண்டும், நன்றி.” என்றார்.
நடிகர் பாலசரவணன் பேசுகையில், “பேச்சி படத்தின் வெளியீட்டுக்காக காத்திருந்த போது நாங்கள் எதிர்பார்த்தது, படம் டீசண்டாக இருக்கிறது, என்று சொன்னால் போதும் என்பது தான். ஆனால், இன்று நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது, இதற்கு காரணம் பத்திரிகைகள் தான். உங்கள் எழுத்துக்கள் மூலமாகவும், உங்கள் விமர்சனங்கள் மூலமாகவும் படத்தை மக்களிடம் மிகப்பெரிய அளவில் கொண்டு சேத்து உங்களுக்கும், உங்கள் விமர்சனங்கள் மூலம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த மக்களுக்கும் நன்றி.
நாங்கள் பல தியேட்டர்களுக்கு சென்று பார்த்தோம், அப்போது அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புல்லாக இருந்தது நாங்கள் எதிர்பார்க்காதது. இரவுக் காட்சிகள் கூட அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்தது. குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்தார்கள், சிறியவர்கள், பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் படத்தை பார்த்தார்கள், இதற்கு காரணம் உங்களது தெளிவான விமர்சனம் தான், அதற்கு மிகப்பெரிய நன்றி” என்றார்.படத்தின் தயாரிப்பாளர் கோகுல் பினாய், “. படம் வெளியாகும் போது நிறைய தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், ட்ரீம் வாரியர்ஸ் குகன் சார், இந்த படத்திற்கு இப்படி தான் போக வேண்டும் என்று மதிப்பீடு வைத்திருக்கிறார்கள், அந்த மதிப்பீடு மிக சரியாக இருந்தது. தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் இழப்பு வரக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டமாக எங்களை அழைத்துச் சென்றார்கள், அவர்களுக்கு நன்றி.
படத்திற்கு பி.ஆர்.ஓவாக பணியாற்றிய சுரேஷ் மற்றும் தர்மா ஆகியோருக்கு நன்றி. பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள், வெரூஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் பண்ண போகிறோம், இதற்கு அனைத்துக்கும் நீங்கள் தான் காரணம், உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.