இந்திய ஆயுதத்துக்கு ‘தர்மத்துக்கு’ எதிராக பெயர் வைத்த மத்திய அரசு!
சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய – பாகிஸ்தான் மோதலில் பெரிய அளவில் அடிபட்ட பெயர், ட்ரோன்கள்.
ஆளில்லா சிறிய விமானம் என்று இதைச் சொல்லலாம். மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு விரைவாக செல்லும் என்பதால், இது விவசாயம், மீட்புப் பணிகள், மருத்துவம் என, பல விதங்களில் உதவுகிறது.
அதே நேரத்தில், சமீபகாலமாக ட்ரோன் போரிலும் பயன்படுகிறது. அதாவது வெடிபொருளை அதில் இணைத்து ஏவினால், இலக்கை நோக்கி பறந்து சென்று, மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும்.
ரஷ்யாவுக்கும், உக்ரைன் நாட்டுக்கும் இடையே நடக்கும் போரில், ட்ரோன்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. தற்போது நடந்து முடிந்த இந்திய – பாகிஸ்தான் போரில் ஆசியாவிலேயே முதன் முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ட்ரோன்களை இந்தியா வழியிலேயே தாக்கி அழித்தது. இதற்கு அதிக செலவு படிக்கும் ஏவுகணைகளே உள்ளன. இது அதிக செலவு பிடிக்கும்.
இந்த நிலையைப் போக்க, ட்ரோன்களை அழிக்க குறைந்த செலவிலான ஆயுதத்தை இந்தியா உருவாக்கி உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள எஸ்.டி.ஏ.எல்., எனப்படும் ‘சோலார் டிபன்ஸ் அண்டு ஏரோஸ்பேஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம், இந்த ஆயுதத்தை நீண்டகால ஆராய்ச்சிக்குப் பிறகு வடிவமைத்து உள்ளது.
முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படும் என்பதால் நமக்கு மகிழ்ச்சியே.
அதே நேரம், இதற்கு மத்திய அரசு சூட்டியுள்ள பெயர்தான் வழக்கம்போல் கேள்விகளை எழுப்புகிறது.
அதாவது, இந்த புதிய தடுப்பாயுதத்துக்கு, ‘பார்கவ அஸ்திரா’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
மகாபாரத புராணத்தில் கர்ணனுக்கு, பரசுராமன் வழங்கிய அஸ்திரமே பார்கவ அஸ்திரம். அந்த பெயரே, இந்த ஆயுதத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.
“தர்மத்தை பாதுகாக்க பயன்படுத்தப்படும் நீதியின் ஆயுதமாக இது சித்தரிக்கப்படுகிறது” என்று தினமலர் நாளிதழ் குறிப்பிட்டு உள்ளது.
நமது கேள்விகள்…
புராணம் என்பது உண்மையல்ல… அதாவது வரலாறு அல்ல.. ஆகவே அதை அடிப்படையாக வைத்து பெயர் வைப்பது… அதுவும் மதச்சார்பற்ற நாட்டில் மத சார்புள்ள புரணாத்தில் இருந்து பெயர் வைப்பது சரியா…
அடுத்து…
பார்கவ அஸ்திரத்தை கர்ணன் ஏவி, பாண்டவ படையில் ஒரு அணியை துவம்சம் செய்தான் என்று மகாபாரம் சொல்கிறது.
அதாவது, ” அநீதியான கவுரவர்கள் பக்கம் இருந்தான் கர்ணன்; அவன், நீதியின் பக்கம் இருந்த தர்மரின் பாண்டவர் அணியின் ஒரு படை அணியை, பார்கவ அஸ்திரத்தைக் கொண்டு அழித்தான்” என்கிறது மகாபாரதம்.
ஆக நீதிக்கு எதிரான விசயத்தை, நமது நாட்டு அரசின் பணத்தில் – நமது நாட்டு விஞ்ஞானிகளின் உழைப்பில் உருவான ஆயுதத்துக்கு வைக்கலாமா. தவிர கர்ணனின் கவுரவர் அணி அந்தப் போரில் தோல்வியைத்தானே தழுவியது..!
புராணப் பெயர்களே வேண்டாம் என்பது ஒரு பக்கம்.. அதிலும் எதிர்மறை பெயர் வைக்கலாமா..
இந்தக் கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் சொல்லுமா?
பல்வேறு இன மத மொழி பேசும் மக்களின் கூட்டுத்தொகுப்பாக இந்தியா விளங்குகிறது. இங்கு மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்தும்படியான செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. நிலவுக்கு நாம் சந்திராயன் என்கிற விண்களத்தை அனுப்பியது நமக்கெல்லாம் பெருமை. ஆனால் அந்த விண்கலம் இறங்கிய இடத்துக்கு சிவ சக்தி என இந்துத்துவ பெயர் வைத்தது மத்திய அரசு.
அதே போல சமீபத்தில் காஸ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்கி, நம் நாட்டவர் பலியானதை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் இடங்கள் மீது நம் நாடு தாக்குதல் நடத்தியது. அதற்கு, ஆபரேசன் செந்தூர் என பெயர் வைத்துத மத்திய அரசு.
“ஆண்களைக் கொன்றதன் மூலம், அவர்களது மனைவியின் பொட்டை (செந்தூர்) அழித்தனர் பயங்ரவாதிகள்” என பழமைவாத காரணம் சொல்லப்பட்டது.
இவற்றைஎல்லாம் மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என நாம் சொல்லி வருகிறோம். ஆனால் தொடர்ந்து பழமைவாத பெயர்களையே அரசு சார்ந்த விசயங்களுக்கு மத்திய அரசு சூட்டி வருகிறது.
குறிப்பாக தற்போது பார்கவ அஸ்திரம் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. பின்னாட்களில், “பரசுராமர் – கர்ணன் ஆகியோரின் வழி வழியாக வந்த அஸ்திரம்தான் இது” என்றும் சிலர் நிறுவ முற்படுவர். வட நாட்டில் கடவுள் சிலைகளுக்கு உடல் நலம் சரியாக இருக்கிறதா என ஸ்டெத்தஸ்கோப் வைத்துப் பார்க்கும் வீடியோக்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன அது போல இதுவும்ஆகிவிடும்.
அறிவியலுக்குப் புறம்பான – புராண இதிகாசங்களின் பின் செல்வது நாட்டின் முன்னேற்றத்துக்கு எதிரானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
– பத்திரிகையாளர் டி.வி.சோமு.

