ஓஹோ எந்தன் பேபி: திரை விமர்சனம்

ஓஹோ எந்தன் பேபி: திரை விமர்சனம்

கதை, கதைக்குள் கதை என சுவாரஸ்யமான முடிச்சுகளை ரசிக்கும்படி அளித்து இருக்கிறது, ஓஹோ எந்தன் பேபி திரைப்படம்.

திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார் நாயகன் ருத்ரா. இதைத் தொடர்ந்து,  நடிகர் விஷ்ணு விஷாலுக்கு  கதை சொல்கிறார். இரண்டு கதைகள் சொல்லியும் விஷ்ணுவுக்குப் பிடிக்கவில்லை.

“வேறு ஏதாவது காதல் கதை இருந்தால் சொல்லுங்கள்” என்கிறார்.  அப்போது இன்னொரு கதையைச் சொல்கிறார் ருத்ரா. அது விஷ்ணுவுக்குப் பிடித்துவிடுகிறது. ஆனால் கதை பாதியில் நிற்கிறது. “முடித்துவிட்டு வாருங்கள்” என்கிறார் விஷ்ணு. ஆனால் அதில் பெரிய பிரச்சினை இருக்கிறது.

அது என்ன பிரச்சினை… அதை ருத்ரா கடந்து வெற்றி பெற்றாரா என்பதே கதை.படத்தில்  விஷ்ணு விஷால், மிஷ்கின் போன்ற சிலரைத் தவிர ஆகப்பெரும்பாலோர் புது முகங்கள்தான். இது பெரிய ப்ளஸ்.

அதிலும் நாயகன் ருத்ரா, விஷ்ணு விஷாலின் சொந்தத் தம்பி. முதல் படம் என்கிற தடுமாற்றம் இன்றி இயல்பாக நடித்து இருக்கிறார்.  தொடர்ந்து ஏற்படும் காதல் தோல்வியால் மனம் நொந்து நிற்பது, அடிக்கடி டென்சன் ஆவது என்று சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார்.  நல்ல அறிமுகம். பாராட்டுகள்.

படத்தின் நாயகி மித்திலாவும் சிறப்பாக நடித்து உள்ளார்.  . சோகம், சந்தோஷம், எமோஷ்னல் அதிலும் தன் மாமாவைப்போலவே மூர்க்கனாக காதலன் இருப்பதை நினைத்து வருந்துவது… மொத்தத்தில் சிறப்பான நடிப்பு. ஆனால் நாயகனைவிட முதிர்ச்சியாக தெரிகிறார். ( அதனால்தான் வயது மூத்தவர் என்பதை வசனத்தில் வைத்துவிட்டார்களோ…) ஆனாலும் அவர்  தமிழ் திரையுலகுக்கு சிறப்பான புதுவரவு.படத்தில் ஒரு நடிகராகவே விஷ்ணு விஷால் தோன்றுகிறார்.  எப்போதும்போல கலகல நடிப்பு. அதே போல இயக்குநர்  மிஸ்கின் இயக்குநராகவே வருகிறார்.

நாயகனின் நண்பராக வரும் நிர்மல் பிள்ளை, சித்தப்பாவாக வரும் கருணாகரன் ஆகியோரும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை அளித்து ரசிக்க வைக்கின்றனர்.ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்.

தற்கால தலைமுறையின் காதலில் உள்ள பிரச்சனைகளை – எதிலும் அவசரப்படுவதைப் பற்றி பேசும் படமாக ரசிக்கத்தக்க வகையிலும் இருக்கிறது.  அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் பாராட்டுக்களைப் பெறுகிறார்.

அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படம்.

ரேட்டிங்: 3.4/5