சர்வதேச தரத்தில் ‘ஓ மை டாக்’!

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்களைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இயக்குனர் சரோவ் சண்முகம், இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், ” ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக்கும் குழந்தைகளுக்கான படம் போல் உருவாக்க வேண்டும் என நினைத்தேன். இந்தப்படத்தின் கருவை தயார் செய்துவிட்டு இதை யார் தயாரித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதன் பிறகு 2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களை சந்தித்தேன். கதையை கேட்டு உடனே சம்மதம் சொன்ன அந்த தருணம் மறக்க முடியாதது. அதன் பிறகு சூர்யா சாரை சந்தித்ததே ஆசீர்வாதமாக நினைக்கிறேன். அவரிடம் கதையை சொன்னபோது, அவர்தான் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார்.

இரண்டு நாள் கழித்து சமூக வலைதளப் பக்கமொன்றில் அருண் விஜய் மற்றும் ஆர்ணவ் விஜய்யுடன் இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்த சூர்யா சார் . ‘ஆர்ணவ் மற்றும் அருண் விஜய்யை சந்தித்து கதையைச் சொல்லுங்கள். அவர்கள் நடிக்க சம்மதம் என்றால் இந்த படத்தை தயாரிக்கலாம்’ என்றார். அருண் விஜய்யை சந்தித்து கதை சொன்னவுடன் அவரும் ஆர்ணவ்வை அறிமுகப்படுத்த சம்மதம் தெரிவித்தார். அதன்பிறகு அவரிடமே கெஞ்சி கூத்தாடி இந்த படத்தில் நீங்களும் உங்கள் அப்பாவும் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஒப்புதல் கொடுத்ததால்தான் இந்தப் படம் எவ்வளவு பிரமாண்டமாகவும், தரமாகவும் உருவானது.

இதனை ஒரு சர்வதேச தரத்திலான குழந்தைகளுக்கான படைப்பாகத்தான் உருவாக்கியிருக்கிறோம். இந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ஆர்ணவ்விற்கு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் வருகை தந்து படப்பிடிப்பிற்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்து அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

Related Posts