பெ.மகேந்திரனின் ‘நிறைகுளம்’: வியப்பும், எதார்த்தமும்!: நூல் விமர்சனம்: சீ.தீபக்

பெ.மகேந்திரனின் ‘நிறைகுளம்’: வியப்பும், எதார்த்தமும்!: நூல் விமர்சனம்: சீ.தீபக்

மகாகவி கம்பர் இயற்றிய கம்பராமாயணத்தின் பாலகாண்டம் – அகலிகைப் படலத்தில் பிரபலமான பாடல் ஒன்றுண்டு:

“இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்”
– கம்பராமாயணம்
பாலகாண்டம்
(பா.எண்.475)
அகலிகைப் படலம்

அகலிகைக்குச் சாப விமோசனம் வழங்குகிற இராமனைப் பார்த்து விசுவாமித்ர முனிவர் வியந்துப் பேசுவதாக இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. இங்கே இராமனை  “மழைவண்ணத்து அண்ணலே” என்று முனிவர் விளிக்கின்றார்; பெரும்பாலான உரையாசிரியர்கள் மழை வண்ணம் என்பதற்கு மழை தரும் மேகம் போன்ற கருமை நிற மேனி உடையவனாகிய இராமன் என்று உரை எழுதுவதுண்டு. ஆனால்,சிற்சில உரையாசிரியர்கள் வேறு பொருளில் இவ்வடியினை விளக்குகிறார்கள். மழையினால் பெறப்படக்கூடிய நீர் ஓர் உயிரை உருவாக்கவும் செய்கின்றது;உலக உயிர்களைக் காக்கவும் செய்கின்றது; அதே நீர் ஆழிப்பேரலையாய் விஸ்வரூபம் எடுத்து அந்த உயிர்களை அழிக்கவும் செய்கின்றது.

இப்படிப் படைத்து காத்து அழிக்கக்கூடிய இயல்புடையது மழை என்பதாலே அந்த இயல்பை உடையது பரம்பொருள் என்பதாலே இராமன் பரம்பொருள் என்கிற காரணத்தாலே இந்தப் பதத்தை இராமன் மீது கம்பர் ஏற்றி வைத்துச் சொல்கிறார் என்று உரை உரைப்பாரும் உளர்.
இது ஒருபுறம் இருக்கட்டும்.

இங்கே மழை(நீர்) என்பது படைத்து காத்து அழிக்கக்கூடிய இயல்புடையது என்கிற செய்தியை நம்மால் பெற முடிகின்றது. மழையின்(நீரின்) இந்த அடிப்படையான மூன்று தன்மைகளையும் நவீன இலக்கியத்தில் புனைவின் வழியே ஒரே கதைக்களத்தில் நம்மால் அவதானிக்க முடியும் என்று சொன்னால் வியப்பாகத்தானே உள்ளது.
அந்த ஆச்சர்யத்தை எழுத்தாளர் பெ.மகேந்திரன் அவர்களின் நிறைகுளம் என்கிற கரிசல் மண்ணின் மணம்மாறாத நாவல் மிகத் துல்லியமாக தரவல்லது.

முரண்பாடான மழையின் இம்மூன்று இயல்புகளையும் கரிசல் காட்டின் அப்பாவி மக்கள் அன்றாடம் சந்தித்த வண்ணமே இருக்கிறார்கள் என்கிற எதார்த்தத்தை பதிவு செய்வதோடு அதற்கான தீர்வினையும் எடுத்துரைப்பதுதான் “நிறைகுளம்” நாவலின் அடிப்படை நோக்கம்.

நாவலின் முன்னுரையில் “வரலாற்றுப் புத்தகங்களில் ஆற்றங்கரை நாகரிகங்களே பெரிதும் பேசப்படுகின்றன. உலக நாகரிகங்களெல்லாம் ஆற்றங்கரையில் தான் தோன்றின என்று சான்றுகள் தருகின்றன. ஆனால் இந்த மானாவாரி கரிசல் மண்ணின் மக்களுக்கு அவர்களின் நாகரிகத்தைப் பேணவும் வளர்க்கவும் வறண்ட ஒரு கண்மாய்க்கரையே போதுமானதாக இருக்கிறது.”
என்று கரிசல் மண்ணுக்கும் நீருக்குமான தொட்டும் தொடாத தொடர்பினை நுணுக்கமாக சொல்லுவது அவர் எழுத்தின் அபாரம்.

கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் தொடங்கி மிகப் பெரிய எழுத்துப்பட்டாளமே இம்மண்ணின் சுக துக்கங்களைத் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறது. இத்தனைப்பேர் எழுதியும் மாளாத அச்சோகத்தினை மறத்துப்போன அடிபோல வலிபோல அம்மக்கள் அவற்றை எளிதில் கடந்துப் போகக்கூடியவர்கள் என்கிற பெரும் நம்பிக்கையினை எழுத்தாளரின் முன்னுரை விதைக்கின்றது. அப்படிப்பட்ட கரிசல் சம்சாரிகளின் வாழ்வினை ஒரு வரியில் சொல்கிறார் பெ.மகேந்திரன்:

“கண்மாய்களில் தண்ணீர் ஏறுவதும் இறங்குவதும் தான் அவர்களின் வாழ்க்கை”.
இதுவே நீண்ட நாவலின் அச்சாணியாக விளங்குகின்றது.

பரந்துபட்ட படைப்புக்களம்:

“நிறைகுளம்” என்ற குறிப்பிட்ட கிராமத்தை நாவலின் களமாக அமைத்துக் கொண்ட படைப்பாளர் அதையே தன்னுடைய நூலுக்கான தலைப்பாகவும் கொடுத்துள்ளார்.

கரிசல் காட்டிற்கும் நீருக்குமான தொடர்பு இந்நாவலின் அடிப்படை அம்சமாக விளங்கினாலும் கரிசல் மக்களின் வாழ்வியலையும் அவர்தம் உளவியலோடு கலந்த எதார்த்த இயல்புகளையும் சேர்த்தே இப்படைப்பு இயம்புகிறது.
நிறைகுளம் கிராமம் குறித்தான அறிமுகத்தை தொடக்கத்தில் தருகிற எழுத்தாளர் தொடங்கிய சில பக்கங்களிலேயே சாத்தூரப்பன் என்கிற கதாபாத்திரம் மாடு மேய்த்துக் கொண்டு வருகிற போது அந்த மாடுகள் இடுகின்ற சாணத்தைத் திரட்டி வருகின்ற வழியில் பயிரிடுகின்ற யாரோ ஒருவரின் நிலத்தில் வீணாகாமல் வீசி வருவதைக் கட்சியாக படைத்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து இவ்வாறு எழுதுகிறார்:
“சம்சாரிகள் இப்படித்தான். மாடுகள் வழிப்பாதையில் சாணம் போட்டால், அது வீணாகி விடக்கூடாது என்று அதைத்திரட்டி பக்கத்தில் பயிர் வைக்கிற மண்ணில் எடுத்து வீசிவிட்டுத்தான் போவார்கள்.”
இப்படியாக தன் மாடுகள் இடுகின்ற சாணத்தைக் கூட யாரோ ஒருவரின் நிலத்திற்கு உரமாக வீசிச்செல்கிற ஈரம் நிறைந்த மக்களைத் தான் இயற்கை ஈரமே இல்லாமல் பரிசோதித்துப் பார்க்கிறது.

எதாரத்தமும் எளிமையும்:

நிறைகுளம் படைப்பு எதார்த்தத்தை எத்தனிக்கிறது என்பதற்கு ஒரு ஒப்பீட்டை இங்கே நாம் பார்க்கலாம்.
கரிசல் மக்களின் வாழ்வியலை நுணுக்கமாக எழுதிய முன்னோடி கி.ரா தன்னுடைய படைப்புகளில் கரிசல் காட்டில் வேலை செய்யும் சம்சாரிகள் கலயத்தில் கம்பங்கஞ்சியை கொண்டு வந்து குடிக்கின்ற காட்சியை நிறைய இடங்களில் பதிவு செய்திருப்பார்.
மேலும் அவரின் கிராமத்தில் டீ அறிமுகம் செய்து நுழைவதற்கு டீத்தூள் நிறுவனங்கள் எப்படிப்பட்ட விளம்பர யுத்திகளைக் கையாண்டது என்பதனையும் பல்வேறு கட்டுரைகளில் எழுதி இருப்பார். அதேபோல இந்த நாவலிலும்
பெ. மகேந்திரன், அம்மக்களின் உணவுப்பழக்கங்களை புனைவிற்காக கரிசல் கிராமத்து மக்கள் இன்றளவும் கம்பங்கஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிவு செய்திருக்கலாம். ஆனால்,அது எதார்த்தத்தை சுக்குநூறாக்கி விடும் என்கிற எண்ணத்தில் இவர் எழுதிய காலகட்டத்திலான கரிசல் கதாப்பாத்திரங்கள் சேவு பொட்டலங்களோடும் டீத்தண்ணியோடும் நாவலின் பல்வேறு இடங்களில் உலா வருவது கி.ராவின் அடுத்தத் தலைமுறை எழுத்து என்பதற்கான எதார்த்த எடுத்துக்காட்டாய் அமைகின்றது.

வியக்க வைக்கும் எழுத்து யுக்தி:

கரிசல் நில வட்டார மொழியும் எதார்த்தப் பேச்சும் மொழியும் இணைந்து எழுதப்படுகிற புனைவு இலக்கியத்தில் செவ்வியல் இலக்கியத்தை ஒப்பீட்டுக்காகவும் உவமைக்காகவும் பயன்படுத்துகிற எழுத்து யுக்தி அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்க்காது.
குறிப்பிட்ட அளவிற்கு மீறி அந்த ஒப்பீடுகள் அமைந்தாலும் அது எழுத்து நடையின் செயற்கைத் தன்மையைக் காட்டி விடும்.
ஆனால், இந்நாவலில் எழுத்தாளர் செவ்வியல் இலக்கிய ஒப்பீட்டுகளை அனாயசமாக பயன்படுத்தி இருக்கிற எழுத்து யுக்தி நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.

“அற்றகுளத்து அறுநீர்ப்பறவை”
(பக்.22)
என்ற மூதுரையின் தொடரையும்
குகன் இராமன் நட்பு குறித்து கம்பராமாயண குறிப்பும் (பக்.40)
பாரதத்தில் வரும் துர்வாச முனி குறித்தும்(பக்.51)
“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்…” எனத் தொடங்குமி தமிழ் மூதாட்டியின் பிள்ளையார் ஸ்துதி பாடலும்(பக்.64)
“கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா” எனத் தொடங்கும் திருப்பாவை பாசுரக் குறிப்பு(பக்.94,95)
“கூரணிந்த வேல்வளவன் குகனோடு கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்’
என்ற ஆழ்வாரின் பாசுரக் குறிப்பும்(பக்.95)
இராமன் காட்டுக்குச் சென்றதை எண்ணி வருந்திய கோசலை பற்றிய கம்பராமாயண குறிப்பு(பக்.215)

இவற்றோடு இணைந்து ஓர் இடத்தில் “சிந்து நதியின் மிசை நிலவினிலே” பாடல் வழியாக பாரதியும் வருகிறான்.

நகைச்சுவை :

காட்சி ஊடகத்தில் நகைச்சுவையை ரசிகர்களுக்கு எடுத்துரைப்பது ஓரளவு எளிது என்றாலும் எழுத்தில் நகைச்சுவையை விதைத்து அதில் வெற்றி காண்பது மிகக் கடினமான பணி.
அவ்வகையில் நிறைகுளத்தை அலசுகிற போது எதார்த்தமான நகைச்சுவை குறிப்புகளைத் தந்து ஒருகணம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

ஒரு காட்சி:
நிறைகுளம் கிராமத்தில் ஒரு சமயம் அதிகமான மழை பெய்து விடுகிறது; ஆகையால், ஒரு பெரிய ஓடையைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இருந்த போதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. இந்தக் காட்சியை எழுதுகிற எழுத்தாளர் நிறைவாக பின்வருமாறு எழுதுகிறார்:

“இப்படி பெருமழை கணக்கில்லாமல் பொழிகிற நாட்களில் ‘லீவு’ விடுவதற்கு அப்போதெல்லாம் ‘ரமணன்கள்’ கிடையாது. பள்ளிக்கூட வாத்தியார்கள் அவர்களாகவே சூழ்நிலை பார்த்து ‘லீவு’ விடுவார்கள்.”(பக்.72)

மேலும் ஒரு காட்சி:

சாத்தூரப்பன் என்கிற கதாபாத்திரமும் மேலும் சிலரும் கரிசல் வட்டார கிராமத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்கிறார்கள். அப்பொழுது நெல்லை வட்டார பாஷை அவர்களுக்கு பெரும் வித்தியாசமாக தென்படுகிறது. அதில் குறிப்பாக “சக்கரம்” என்கிற வார்த்தைக்கு நெல்லை வட்டார மொழியில் “பைதா” என்கிற சொல் பயன்படுத்துவது சாத்தூரப்பனுக்கு பெரும் வியப்பாக இருக்கிறது.
இந்த குழப்பமான சூழலிலே நகைச்சுவை யுத்தியை எழுத்தாளர் கையாண்டு இருக்கிறார்.
பைதா என்கிற சொல்லை நினைத்துக் கொண்டே இருக்கிற சாத்தூரப்பன் சக்கரம் என்ற சொல்லுக்கு பைதா என்று நாம் சொன்னோமேயானால் “சக்கரத்தாழ்வார்” என்கிற பெயரினை “பைதாழ்வார்” என்று சொல்வது தானே சரியாக இருக்கும் என்று போகிற போக்கில் நம்மை சிரிக்கவும் வைப்பது அவரின் எழுத்து நடையின் புதிய முயற்சி.

கரிசல் நிலப் பெண்கள்:

கரிசல் இலக்கிய முன்னோடி கி.ரா வின் படைப்புகளில் பெண்களுக்கென்று எப்போதும் தனி இடம் உண்டு.
அவர்களின் உள்ளுறை உணர்வுகளையும் சிக்கல்களையும் பெருமைகளையும் எடுத்துச் சொல்வதில் என்றும் அவர் தவறியது இல்லை.
அப்படி எழுத்தாளர் பெ.மகேந்திரன் தன்னுடைய படைப்பிலும் சில கதாபாத்திரங்களின் வழியே கரிசல் நிலத்தெ பெண்களின் நீர்மைக் குணத்தை எடுத்துக்காட்டியுள்ளார் அதற்கு ஒரு சான்று:

செல்லம்மாள் என்கிற ஒரு கதாபாத்திரம் தள்ளு வண்டியில் ஆறேழு குடங்களை வரிசையாக வைத்து அவ்வூரின் ஊருணிக்
கிணற்றிலிருந்து அடிக்கடி தண்ணீர் சுமந்துச் செல்வாள்.

தனியொரு பெண்ணாய் இப்படி தண்ணீரைச் சுமந்துச் செல்லுகிற செல்லம்மாள் தனக்கு மட்டும் அதை செய்து கொள்வதில்லை.
அந்த ஊரில் தனியாகக் கிடக்கிற சில வயதான மனிதர்களுக்கும் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் உதவுவது அவளது வழக்கம் என்று அறிமுகப்படுத்துகிறார்.

ஓரிரு இடங்களில் மட்டும் வருகிற இந்தக் கதாபாத்திரத்தின் நீர்மைக் குணத்தை ‘பளீச்’ என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிற தன்மை நம்மை நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.

வறட்சியின் கொடூரம் :

கரிசல் நிலத்தின் வறட்சியை வெவ்வேறு எழுத்தாளர்கள் ஒவ்வொரு வகையில் பதிவு செய்திருக்கிறார்கள். நிறைகுளம் நாவலில் பெ.மகேந்திரனும் கூட அதை வெவ்வேறு காட்சிகளின் வழியாக பதிவு செய்திருந்தாலும் ஒரு காட்சி நம் மனதின் ஆழத்தில் அசைக்க முடியாத பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

நிறைகுளம் கிராமத்தின் வழியே பக்கத்தில் இருக்கிற டவுனுக்கு பைப் லைன் வழியாக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
அதைத்தொடர்ந்து எழுத்தாளரின் நடையிலேயே மிக முக்கியமான காட்சி ஒன்றை கீழே பார்க்கலாம்:

“டவுனுக்குப் போகிற பைப் லைனில் தண்ணீர் சப்ளை ஆரம்பமானது. பைப் லைனின் குழாய் சில இடங்களில் தரையில் தெரிந்தது. ஓடைகளைக் கடக்கிற இடைவெளிகளில் அந்தக் குழாய் முழுக்கவே தெரிந்தது. அதில் காதைவைத்துக் கேட்கும்போது ‘திபுதிபுவென தண்ணீர்போகிற சத்தம் கேட்டது.

வற்றாத நதி ஓடுகிற ஊரில் மக்கள் குடிக்கத் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது. குடிக்க, குளிக்க என்று சதா தண்ணீரிலேயே வாழ்வார்கள்.

அதுபோல, சமுத்திரத்தை ஒட்டி வாழுகிறவர்களுக்கு அந்த சமுத்திரத் தண்ணீர் குடிக்கவோ, குளிக்கவோ உதவாது. குறைந்த பட்சம் கண்ணால் பார்த்துக்கொள்ளலாம்.

ஆனால், இப்படி தண்ணீப் பஞ்சம் தலைவிரித்தாடுகிற மண்ணில், தண்ணீர்க் குழாய் ஊர் வழியாகப் போகும்போது இந்த ஊர் சனங்கள் குடிக்கவும் முடியாது. குளிக்கவும் முடியாது… என்பதுகூடச் சரிதான்.

கண்ணால் பார்க்கக்கூட முடியவில்லை என்பது பெருத்த சோகம்.

இப்படி தண்ணீர் பைப் லைன் அவர்களின் வழியாகப் போகும்போது ஒரே ஒரு ஆறுதல்… அதுபோகிற சத்தத்தைக் காது வைத்துக் கேட்டுக்கொள்ளலாம்.

நமக்குத்தான் தண்ணீரைக் கண்ணில் பார்க்கிறயோகம் இல்லை. காதிலயாச்சும் கேட்போம்.” என்று அந்த வழியாகப் போகிறவர்கள்கூட வருகிறவர்களைக் கூப்பிட்டு, காது வைத்துக் கேட்கச் சொல்லி ‘விளை யாட்டு’க் காட்டிக் கொண்டார்கள்.

எல்லாம். வானத்தில் அண்ணார்ந்துபார்க்கிற குழந்தைகள் எங்க ஊர் வழியாத்தான் ஏரோ பிளேன் ‘போகுது’ என்கிற கதைதான்!”

(பக்.188.189)

தங்களால் அனுபவிக்க முடியாத நீரின் சுகத்தினை காதுகள் வைத்து கேட்டு தீர்த்துக் கொள்ளும் இந்த ஏக்கம் கொண்ட மனிதர்களை வேறு எந்த ஒரு எழுத்தாளரும் படைத்து விடவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அழகர் அணைத் திட்டம்:
கடந்த மாதம் ஏப்ரல்16 அன்று செய்தி ஊடகங்களில் மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கொன்று குறித்த செய்தி வெளியானது.

அதாவது , 1969 ல் தென் மாவட்டங்களில் குறிப்பாக கரிசல் பகுதியில் நீர் பற்றாக்குறையையும் வறட்சியையும் சமன் செய்வதற்கு அழகர் அணைதி திட்டம் என்கிற திட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால் , பல அரசியல் காரணங்களாலும் நிர்வாக சிக்கல்களாலும் அத்திட்டம் கைவிடப்பட்டது.

இதை மீண்டும் செயல்படுத்தக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று கடந்த மாதம் தொடரப்பட்டது. இதை விசாரித்து அந்த அழகர் அணைத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த அழகர் அணைத் திட்டத்தைதான் தன்னுடைய நாவலின் முக்கிய அம்சமாக வைத்து புனைந்து உள்ளார் எழுத்தாளர் பெ.மகேந்திரன்.
மலைமறைவுப் பிரதேசத்தில் அமைந்துபோன இந்தக் கரிசல் காட்டில் பேய்ந்தும் காய்ந்தும் கெடுக்கிற மழையை சரியான முறையில் பயன்படுத்துவதில் இந்த அழகர் அணைத் திட்டம் முக்கிய பங்கு வகிப்பதைத் தன்னுடைய கதையின் காத்திரமான கதாபாத்திரங்கள் மூலம் தெளிவுற எடுத்துக்காட்டுகிறார் எழுத்தாளர். கற்பனையோடு கலந்து கரிசல் நிலத்தின் கடினமான காலங்களையும் அதற்கான தீர்வுகளையும்  ஆவணப்படுத்துகிற மிகச்சிறந்த பணியை எழுத்தாளர் பெ.மகேந்திரன் இந்நாவலின் வழியே செய்திருக்கிறார் எனப் பாராட்டுவது சதம் அளவுத் தகும்.

ஒருபோதும் நிறைந்த குளத்தை நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் காண முடியாத அந்தக் கிராமத்திற்கு “நிறைகுளம்” என்கிற பெயர் மட்டுமே பெரும் “வெகுமதி”!

கரிசல் நிலத்தின் வறட்சியின் கோரத்தையும் அதற்கான நிகழ்காலத் தீர்வினையும் அனாயசமாக பதிவு செய்கிற இப்படைப்பு, தண்ணீரை நினைத்த மாத்திரத்தில் வீணடித்து பயன்படுத்துகிற சமூகத்தின் முன்னும் தாங்கள் வாழ்கிற மண்ணை அதன் தன்மையை அலட்சியமாய் என்னும் அதிவேக இணையத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேகமாய் ஓடுகின்ற சமூகத்தின் முன்னும் நிறுத்தப்பட வேண்டிய தலையாய படைப்பு –  ” நிறைகுளம் “!

– சீ.தீபக். இளநிலை இரண்டாமாண்டு விலங்கியல்
ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர்.

@@@@@@@@@@@@@@@@

பெ.மகேந்திரன் அவர்களின் நிறைகுளம், வெள்ளாமை ஆகிய நாவல்களைப் பெற…

வெள்ளாமை – கௌரா பதிப்பகம் ( 97907 06549)

நிறைகுளம்- மின்னங்காடி பதிப்பகம்  ( 78240 49160)

Related Posts