மைனா டூ மையல்!: மீண்டு(ம்) வந்த சேது!
திரையுலகில் போலீஸ் கதாபாத்திரம் என்பது மிக முக்கியமான ஒன்று. தங்கப்பதக்கம் சிவாஜி, ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர்., மூன்று முகம் ரஜினி, காக்கிச்சட்டை கமல், கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த், வால்டர் வெற்றிவேல் சத்யராஜ், தெறி விஜய், சிங்கம் சூர்யா, ஆறு விக்ரம்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த வரிசையில் முதல் படத்திலேயே சேர்ந்தவர், மைனா பட நாயகன் சேது. அதுவும் மற்ற நாயகர்கள் பல படங்களுக்குப் பிறகே போலீஸ் வேடத்தில் நடித்தனர்.
சேதுவோ முதல் படமான மைனாவிலேயே போலீஸாக நடித்து அசத்தி இருந்தார். சிறைத்துறை அதிகாரியாக வந்த அவர், அந்த பணிக்கே உரிய மிடுக்கினை பார்வையிலேயே வெளிப்படுத்தினார். பேச்சு மட்டுமின்றி உடல் மொழியிலும் அசத்தினார்.
தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏனோ மலையாளம் பக்கம் ஒதுங்கினார். அங்கு நன்றி, 100 டிகிரி செல்சியஸ் ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து தெலுங்கில் மனசுனு மாயா சேயகே படத்தில் நடித்தார்.
2015ல் கடவுள் பாதி மிருகம் பாதி படத்தில் தோன்றினார்.
இந்த நிலையில்தான் தற்போது, மையல் என்ற தமிழ்ப் படத்தில் நாயகனாக தோன்றி அசத்தி இருக்கிறார்.
முதல் படமான மைனாவில் போலீஸ் அதிகாரியாக கவர்ந்தவர், தற்போது மையல் படத்தில் திருடன் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
“இவர்தானா போலீஸ் வேடத்தில் நடித்தார்” என்று சொல்லும் அளவுக்கு இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார்.
ஆடு திருடுவது, பெற்றோர் இல்லாத சோகத்தை காதலியிடம் வேதனையுடன் சொல்வது, காதலிக்கு நேர்ந்த பிரச்சினையைக் கேள்விப்பட்டு ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவது என்று அதகளம் செய்திருக்கிறார் சேது.
மையல் திரைப்படம் பெரும் வெற்றி பெறட்டும்… மீண்டு(ம்) வந்திருக்கும் சேது, தமிழின் முக்கியமான நாயகனாக வரட்டும்.
சேதுவுக்கு நமது வாழ்த்துகள்.
– டி.வி.சோமு

