‘முத்து என்கிற காட்டான்’ விமர்சனம்: மன உணர்வுகளின் மர்ம வேட்டை!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் கூட்டணியில் உருவான ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, டிஜிட்டல் தளத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இணையத் தொடர் ‘முத்து என்கிற காட்டான்’.
இது ஒரு அழுத்தமான கிரைம் மிஸ்டரி திரில்லர். எளிய மனிதர்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு மர்மப் பயணம்.
கதை:
அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாறை மீது துண்டிக்கப்பட்ட நிலையில் கிடக்கும் விஜய் சேதுபதியின் (முத்து) தலை, அதனருகே சிதறிக் கிடக்கும் பணம் மற்றும் ஒரு கடிதம் — “என் தலையை அடக்கம் செய்துவிட்டு, இந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்ற அந்த வாசகத்துடன் அதிரடியாகத் தொடங்குகிறது கதை. முத்து யார்? அவரைக் கொன்றது யார்? அவரது உடல் எங்கே? என்ற தேடலில் இறங்கும் காவல்துறைக்கு, முத்துவைப் பற்றி அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அவர் ஒரு கொலையாளியா அல்லது ரட்சகனா? என்ற மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதே இந்த ‘காட்டான்’
நடிப்பு: விஜய் சேதுபதியின் விஸ்வரூபம்!
இந்தத் தொடரின் அச்சாணியே விஜய் சேதுபதி தான். தொடரின் முதல் காட்சியிலேயே வெட்டப்பட்ட தலையாகத் தோன்றி அதிர்ச்சி கொடுத்தாலும், அடுத்தடுத்த அத்தியாயங்களில் அவர் காட்டும் பன்முகத்தன்மை வியக்க வைக்கிறது. யானை பாகன், வாட்ச் மெக்கானிக், லாரி டிரைவர் என ஒவ்வொரு ‘அவதாரத்திலும்’ அந்தந்தத் தொழிலுக்கே உரிய உடல்மொழியையும், மேனரிசங்களையும் கச்சிதமாகப் பிடித்துள்ளார். குறிப்பாக, எமோஷனல் காட்சிகளில் அவர் காட்டும் அந்த நிதானமும், கண்களாலேயே பேசும் நுணுக்கமான நடிப்பும் ‘மக்கள் செல்வன்’ ஏன் ஸ்பெஷல் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
சப்-இன்ஸ்பெக்டராக வரும் முத்துக்குமார், ஆங்கிலம் கலந்த நக்கலான பேச்சால் அசத்தியுள்ளார். இவருடன் சிங்கம்புலி மற்றும் வடிவேல் முருகன் ஆகியோரின் ‘போலீஸ் டீம்’ கெமிஸ்ட்ரி செம ஜாலி! மிலிந்த் சோமன், அபி நட்சத்திரா, ரிஷா ஜேக்கப் எனப் படத்தில் வரும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் கதையின் கனத்தை உணர்ந்து மிக நேர்த்தியாக நடித்துள்ளனர்.
இசை: கதையின் ஆன்மா!
ராஜேஷ் முருகேசன் தனது பின்னணி இசை மூலம் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியுள்ளார். இது ஒரு மர்மத் தொடர் என்பதால், தேவையற்ற இரைச்சல் இன்றி காட்சிகளுக்குத் தேவையான அமைதியையும், பதற்றத்தையும் சரிவிகிதத்தில் கலந்துள்ளார். முத்துவின் ஒவ்வொரு பிளாஷ்பேக் காட்சிகளுக்கும் அவர் கொடுத்துள்ள தனித்துவமான பி.ஜி.எம் (BGM), பார்வையாளர்களை அந்தந்தக் காலக்கட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. சில மென்மையான மெலடி இசைத் துணுக்குகள் முத்துவின் மனிதாபிமானத்தை இன்னும் ஆழமாகப் புரிய வைக்கின்றன.
ஒளிப்பதிவு: காட்சிகளின் பிரம்மாண்டம்!
ஒளிப்பதிவாளர்கள் மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரம் ஆகியோரின் உழைப்பு திரையில் பளிச்சிடுகிறது. தமிழகத்தின் கிராமப்புற அழகையும், கேரளா மற்றும் மும்பையின் நிலப்பரப்புகளையும் நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளனர். குறிப்பாக, முத்துவின் தலை கிடக்கும் அந்தப் பாறை மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் மலைகளின் ‘வைட் ஆங்கிள்’ காட்சிகள் ஒருவித மர்மமான அழகைத் தருகின்றன. இரவு நேரக் காட்சிகள் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளைப் படமாக்கிய விதம், தொடருக்கு ஒரு சர்வதேசத் தரத்தைக் கொடுத்துள்ளது.
எடிட்டிங்: சஸ்பென்ஸ் முடிச்சுகள்!
பி.அஜித் குமார் எடிட்டிங்கில் மிகச் சிறந்த வேலையைச் செய்துள்ளார். ஒரு நான்-லீனியர் (Non-linear) பாணியில் கதையை நகர்த்துவது சவாலானது; ஆனால் அதைச் சிதைக்காமல் நேர்த்தியாகக் கோர்த்துள்ளார். ஒவ்வொரு எபிசோடின் இறுதியிலும் முத்துவின் உண்மையான முகம் என்ன? என்ற கேள்வியோடு அவர் போடும் ‘கட்’கள் நம்மை அடுத்த எபிசோடிற்குத் தானாக இழுத்துச் செல்கின்றன. சில இடங்களில் கதையின் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்றாலும், ஒட்டுமொத்தப் ஓட்டம் ரசிக்கும்படியே உள்ளது.
இயக்கம்: மணிகண்டனின் ‘மாஸ்டர் கிளாஸ்’!
இயக்குநர் எம். மணிகண்டன், தனது வழக்கமான ‘யதார்த்தம்’ என்ற ஆயுதத்தையே இதிலும் பயன்படுத்தியுள்ளார். ஒரு மனிதனை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அவனது உண்மை முகம் என்ன? என்ற தத்துவார்த்தமான விஷயத்தைச் சுவாரஸ்யமான திரில்லர் வடிவத்தில் கொடுத்திருக்கிறார். ரத்தம் தெறிக்கும் வன்முறைத் தொடராக இல்லாமல், மனித மனங்களின் ஈரம் பேசும் படைப்பாக மாற்றியதே இவரது இயக்கத்தின் வெற்றி. மணிகண்டன் – அஜித்குமார் கூட்டணியின் இந்தப் புதிய முயற்சி தமிழ் இணையத் தொடர் உலகில் ஒரு புதிய மைல்கல்!
முத்து என்கிற காட்டான் — பார்க்கத் தவறவிடக்கூடாத ஒரு தரமான படைப்பு!
ரேட்டிங்: 3.75 / 5

