“தமிழகத்துக்கு எதிராக பீதியை கிளப்பும் ‘எம்புரான்’ படத்தை தடை செய்க!”: தமிழ்நாடு விவசாய சங்கம் வலியுறுத்தல்!

“தமிழகத்துக்கு எதிராக பீதியை கிளப்பும் ‘எம்புரான்’ படத்தை தடை செய்க!”: தமிழ்நாடு விவசாய சங்கம் வலியுறுத்தல்!

மலையாளத்தில் எடுக்கப்பட்டு, பல மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் எம்புரான். பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார்  உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில், 2002ல் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் தீ விபத்தைத் தொடர்ந்து, இஸ்லாமியருக்கு எதிராக நடந்த கலவரக் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.  இந்தக் கலவரத்துக்குத் தலைமை வகிப்பவரின் பெயர் இந்து அமைப்பின் பெயரை நினைவுபடுத்தும்படியாக, பஜ்ரங் என்று வைக்கப்பட்டு உள்ளது.

“ஆகவே இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்” என்று இந்துத்துவ அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இதை ஏற்று, குறிப்பிட்ட காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக்கொண்டது. பட நாயகன் மோகன்லாலும் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் படம் குறித்த இன்னொரு சர்ச்சை எழுந்துள்ளது.

படத்தில், அணை ஒன்று பலமாக இருப்பதாகவும் அதனால் ஆபத்து என்றும் வருகிறது. இதுமுல்லைப்பெரியாறு குறித்து கேரள ஊடகங்கள், அரசுகள், அரசியல் தலைவர்கள் செய்துவரும் பொய்ப் பிரச்சாரத்தை வெளிப்படுத்துகிறது.

படம் வெளியானபோதே, விமர்சனத்தில் இதை tamilankural.com  இணைய இதழில் குறிப்பிட்டோம். அதன் லிங்க்:   https://tamilankural.com/l2-empuraan-movie-review-in-ll-tamil/ 

தற்போது இந்தக் காட்சிக்கு பல்வேறு தரப்பினர்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க றுவனர் ஈசன் முருகசாமி விடுத்துள்ள அறிக்கை:

“கேரளாவில் நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளையர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் பெற்றுள்ளது.

திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருப்பது போன்ற வசனங்கள் நேரடியாகவே இந்த திரைப்படத்தில் நான்கு இடங்களில் முல்லைப் பெரியாரை குறி வைத்து இடம்பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.இது போன்ற கருத்துக்களை கொண்ட படங்களை எப்படி மத்திய தணிக்கை வாரியம் அனுமதி கொடுத்தது என்பது அதைவிட பேரதிர்ச்சியாக உள்ளது.

கடந்த 2006, 2014 ஆகிய ஆண்டுகளில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது, 152 அடி தண்ணீர் தேக்கலாம் என உத்தரவிட்ட பின்பும், தீர்ப்புக்கு எதிரான கருத்துக்களை படத்தில் இடம்பெற மத்திய தணிக்கை வாரியம் அனுமதித்திருக்கக் கூடாது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1 கோடி மக்கள் முல்லைப் பெரியாறு அணையை கோவிலாகவும், அதை கட்டிய கர்னல் பென்னி குவிக் அவர்களை கடவுளாக வழிபட்டும் வருகின்றனர்.

தமிழ்நாட்டின் உரிமையின் சின்னமாக தமிழ்நாட்டு மக்கள் கருதும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்கிற கருத்து விஷமத்தனமானது. தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் பகையை ஊட்டக்கூடியது, பிரிவினை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் மத்திய தணிக்கை வாரியம் வழங்கியுள்ள தணிக்கை சான்றிதழை உடனடியாக ரத்து செய்வதே சரியானதாகும்.

இந்தப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும்” –  இவ்வாறு அந்த அறிக்கையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியுள்ளார்.

Related Posts