மழையில் நனைகிறேன்: திரைப்பட விமர்சனம்
கல்லூரி படிப்பை முடிக்காமல் வெட்டியாக ஊர் சுற்றி வரும் இளைஞர் அன்சன் பால், அமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சியில் இருக்கும் ரெபா ஜான்.
ரெபா ஜானை பார்த்ததும் மயங்கி, காதல் கொண்டு அலைகிறார், அன்சன். ரெபா மறுக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இரு வீட்டிலும் கடுமையான எதிர்ப்பு. அதை மீறி திருமணம் செய்துகொள்கிறார்கள். பணம் இல்லாத நிலை.
அதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.
சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அன்சல் பால், நாயகனாக நடித்து உள்ளார். வசதியான குடும்பத்து இளைஞனாக ஜாலியான ஊர்சுற்றுவது… அதே நேரம் காதல் திருமணம் முடிந்தவுடன் பொறுப்பான மனிதனாக வாழ்வது என சிறப்பாக நடித்து உள்ளார்.நாயகியாக நடித்திருக்கும் ரெபா ஜான், அழகு மற்றும் நடிப்பு என இரண்டையும் அளவாக வெளிப்படுத்தி உள்ளார்.
நாயகனின் பெற்றோராக நடித்திருக்கும் மேத்தீவ் வர்கீஸ் -அனுபமா குமார், நாயகியின் பெற்றோராக நடித்திருக்கும் சங்கர் குரு ராஜா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கிஷோர் ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்து உள்ளனர்.
விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் சிறப்பு.ஜெ.கல்யாணின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.
விஜி மற்றும் கவின் பாண்டியன் ஆகியோரது வசனங்கள் ஈர்க்கினறன. “நீ நினச்சா பல கார்களை வாங்கலாம், ஆனால் ஐயங்கார் மட்டும் போதும்னு முடிவு பண்ணிட்ட..” என்ற வசனம் ஓர் உதாரணம்.
காதல்மட்டும் வாழ்க்கை அல்ல… அதன் பிறகான திருமண வாழ்க்கையே முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக படம் எடுத்துள்ள இயக்குநர் டி.சுரேஷ் குமாரை பாராட்டலாம்.