மாயன்: திரைவிமர்சனம்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தென் அமெரிக்க பகுதியில், ‘மாயன்’ என்ற இனத்தவர் வாழ்ந்தனர். ‘இவர்கள் வானியல்,புவியியல், விஞ்ஞானம், சிற்பக்கலை, கட்டடக்கலை என பல கலைகளில் ஆற்றல் மிகுந்தவராக இருந்தனர்’ என்று சொல்லப்படுகிறது.
இவர்கள் உருவாக்கிய நாட்காட்டி கி.மு. 3113-ல் தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ம் தேதி முடிவுக்கு வந்தது.
ஆகவே, அன்று உலகம் அழியப்போகிறது என்று ஒரு யூகம் ஏற்பட்டு 2012ம் ஆண்டு, உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அப்படி ஏதும் ஏற்படவில்லை.இருந்தாலும், மாயன் நாட்காட்டியை மையமாக வைத்து, ‘உலகம் அழியப்போகிறது’ என்று திகிலைக் கூட்டும் கட்டுரைகளும், கதைகளும், திரைப்படங்களும் வந்துகொண்டே இருக்கின்றன.
ஹாலிவுட் ஆங்கிலப் படங்கள் பலவும் வந்திருக்கின்றன. கடந்த 2009ம் ஆண்டு, 200 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகி 800 மில்லியன் டாலர்கள் வசூல் செய்த ‘2012’ என்கிற படமும் அதில் ஒன்று.அதாவது இப்படி எதிர்மறை – திகில் செய்திகளை விரும்பி அறிந்துகொள்பவர்கள் அதிகம்.
இந்த ‘மாயன் நாட்காட்டியை’ அடிப்படையாக வைத்து உலகம் அழியப்போகிறது என்கிற கதைக்கருவில் வெளியாகி உள்ள படம் தான் மாயன்.
சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ‘டீம் லீட’ராகப் பணிபுரிகிறார் ஆதி என்கிற இளைஞர். (வினோத் மோகன்)
அவருக்கு, ‘இன்னும் 13 நாள்களில் உலகம் அழியப் போகிறது, நீ வாழ நினைத்த தருணங்களை வாழ்ந்துகொள்’ என்று ஒரு மின்னஞ்சல் வருகிறது. முதலில் நம்பாத ஆதி, தன்னைச் சுற்றி அடுத்தடுத்து நடக்கும் சில மாய சம்பவங்கள் நடக்க… ‘உலக அழிவை’ நம்ப ஆரம்பிக்கிறார்.
அதனால் காதல், திருமணம், சொந்த வீடு என தனது கனவுகளை அதிரடியாக அவசர அவசரமாக நிறைவேற்றுகிறார்.
ஆனால், அவரது தேடல் முடிவடையவில்லை.அதன் பிறகு என்ன நடந்தது… உலகம் அழிந்ததா.. என்பதைச் சொல்கிறது மாயன் திரைப்படம்.
உலகம் அழியப் போகிறது என்கிற நம்பிக்கையை கிராஃபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மூலம் சொல்லி இருக்கிறார்கள்.நடிப்பைப் பொறுத்தவரை, ஆதியாக வரும் வினோத் மோகன், சக்ரவர்த்தியாக வரும் ஜான் விஜய், தேவியாக வரும் பிந்து மாதவி ஆகியோர் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.
பாடல், பின்னணி இசை இரண்டும் சிறப்பு. இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டுக்கு பாராட்டு.
அருண் பிரசாந்த்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
புராணம், மாயன் நாட்காட்டி, தற்போதைய காலம் மூன்றையும் இணைத்து கதையை உருவாக்கி இயக்கி வித்தியாசமான படத்தை அளித்து இருக்கிறார் ஜெ.ராஜேஷ் கண்ணா.