மாஸ்க்: திரை விமர்சனம்
பதுக்கிவைக்கப்பட்ட பல கோடி ரூபாயை நேரடியாக கொள்ளையடிப்பதையும், அரசியல் கொள்ளையையும் இணைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் த்ரில்லர் மற்றும் அரசியல் திரைப்படம்.
ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 446 கோடி ரூபாய் பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறது. அதை, நடிகவேள் எம்.ஆர்.ராதா முகமூடியணிந்த ஒரு கூட்டம், கொள்ளையடிக்கிறது.
பண ஆசை பிடித்த டிடெக்டிவ் வேலு, நாட்டை விட்டே ஓடிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடிருக்கும் என்.ஜி.ஓ ஓனரான பூமி, எம்.எல்.ஏ. மணிவண்ணன் ஆகியோருக்கும் இந்தக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு என்பதுதான் கதை.
ஜாலியான இளைஞராக வலம் வருகிறார் ஹீரோ கவின். அசால்ட்டான உடல் மொழி, இயல் பான பேச்சு! அதோடு சீரியஸான காட்சிகளில் உணர்வுபூர்வமாக நடித்து அசத்துகிறார்.
ஹீரோயினா, வில்லியா என யூகிக்க சிரமப்படும் அளவுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ஆண்ட்ரியா ஜெரிமியா.
லஞ்சம், வஞ்சம் என வழக்கமான அரசியல்வாதியாக வருகிறார் பவன். (ஆனாலும் அந்த கடைசி காட்சி ரொம்ப ஓவர்!)
ருஹானி ஷர்மா, சார்லி, வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்து இருக்கிறார்கள்.
ஜாக்கி, எம். விஜய் அய்யப்பனின் கலை இயக்கக்கம் டபுள் அசத்தல். அந்தக்கால ஓட்டல், ரகசிய அறைகள் என ரசிக்க வைத்து இருக்கிறது இந்த டபுள் கூட்டணி.
காட்சிகளுக்கு ஏற்பட நேர்த்தியான ஒளியமைப்பையும், கேமரா கோணங்களையும் அளித்து அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர்.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில், ‘கண்ணுமுழி’ பாடலில் காதல் வழிகிறது. ‘வெற்றி வீரனே’ பாடல் அற்புதமாக, கதைக்கருவை சொல்கிறது. ஒவ்வொரு காட்சிக்கு ஏற்ப.. ஊஹூம்.. ஒவ்வொரு பிரேமுக்கும் ஏற்ப சிறப்பான பின்னணி இசையிலுமி் அசத்துகிற் ஜீ.வி.
கொள்ளை சம்பவத்துடன் துவங்கும் ஆரம்ப காட்சி, கவின், ஆண்ட்ரியா, பவன் ஆகியோரின் பின்னணியைச் சொல்லும் சுவராஸ்யம், கவின் சேட்டைகள், யோசிக்க வைக்கும் ஆண்ட்ரியாவின் கதை என முதல் படத்திலேயே கவனத்தை ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக்.
லாஜீக் மீறல்கள், அதீதமாக வரும் வாய்ஸ் ஓவர் ஆகியவற்றை குறைத்து இருக்கலாம். மற்றபடி சுவாரஸ்யமான த்ரில்லர்.
ரேட்டிங்: 3.2/5
