டாக்டர் மாறனின் ‘பச்சை விளக்கு’: அனைத்து திரையரங்குகளிலும்..!: தமிழக அரசு உத்தரவு!
டிஜிதிங்க் மீடியா மீடியா ஒர்க்ஸ் நிறுவன தயாரிப்பில், டாக்டர் மாறன் இயக்கி, நடித்த ‘பச்சை விளக்கு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 01-05-24 முதல் 15-06-24 வரை திரையிட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சிறந்த படம்!
டாக்டர் மாறன் இயக்கி நடித்த பச்சை விளக்கு திரைப்படம், சமூக விழிப்புணர்வை – குறிப்பாக – போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றது.
சாலை விதிகளை பற்றி சுவாரஸ்யமாகவும் காமெடி கலந்த அறிவுரைகளை மிகவும் எளிமையாக சொன்னதன் மூலம் இயக்குநர் & நாயகன் டாக்டர். மாறன் பாராட்டுகளை பெற்றார்.
சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வோடு, பெண்களை ஏமாற்றி காதலிப்பது போல நடித்து ஆபாச படம் எடுத்து அதை வைத்து பெற்றோர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்து காட்டும் விழிப்புணர்வு படமாகவும் பச்சை விளக்கு இருந்தது.
அங்கீகாரம்!
இந்த படத்துக்கு உலக அளவில் பல நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் கிடைத்தது. பூடான் நாட்டிலுள்ள பரோ என்ற இடத்தில் நடைபெற்ற ட்ராக் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றது,
இந்தியாவில் நடைபெற்ற ட்ரிப்ள் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதினை வென்றது.
நியூயார்க் மூவி அவார்ட்ஸ் மற்றும் அப்ரோனடட் திரைப்பட விழாவிலும் இறுதித் தேர்விலும், மேலும் லண்டன் சி.கே.எப். சர்வதேச திரைப்பட விழா, இத்தாலி ப்ளாரன்ஸ் திரைப்பட விழா, அமெரிக்காவில் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழா, சவுத் பிலிம் அண்ட் அர்ட்ஸ் அகடமி விழா மற்றும் பர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர்ஸ் விழாவிலும் அதிகாரப்பூர்வ தேர்வாக கலந்துகொண்டு பெருமை சேர்த்தது, ‘பச்சை விளக்கு’ திரைப்படம்.
மேலும் ஒரு அங்கீகாரம்!
இந்த நிலையில், சிறந்த விழிப்புணர்வு படமான பச்சை விளக்கு திரைப்படத்தை, தமிழகம் முழுதும் உள்ள திரையரங்குகளில் திரையிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசின் உள்(சினிமா) துறை அரசாணை (வாலாயம்) எண் 308 ல், “சாலைபாதுகாப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்ட பச்சை விளக்கு சமூக விழிப்புணர்வு திரைப்படத்தை காலை 09.00 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பு காட்சியாக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 01-05-24 முதல் 15-06-24 வரை திரையிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
சாலை விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விளக்கும் பச்சை விளக்கு திரைப்படத்துக்கு இது மேலும் ஒரு அங்கீகாரம் ஆகும்.
படத்தை இயக்கி நடித்த டாக்டர் மாறன் அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் நமது வாழ்த்துகள்.