லவ் டுடே படத்தைவிட பெரிய வெற்றி பெறும் லவ்வர்! 

லவ் டுடே படத்தைவிட பெரிய வெற்றி பெறும் லவ்வர்! 

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘லவ்வர்’. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்ய, படத்தொகுப்பினை செய்கிறார் பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார்.காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.

பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ரஞ்சித் ஜெயக்கொடி, விநாயக், விநியோகஸ்தர் சக்திவேலன் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.நிகழ்வில் விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், “லவ்வர் படக்குழுவினர் இதற்கு முன் குட் நைட் எனும் வெற்றிப்படத்தினை வழங்கியவர்கள். அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடவில்லையா? என கேட்ட போது, அவர்கள் அடுத்த படத்தின் படபிடிப்பில் இருந்தனர். அந்தளவிற்கு நம்பிக்கையுடன் இந்த படக்குழுவினர் பணியாற்றினர்.

இந்த படத்தைப் பற்றிய செய்திகள் வெளியானவுடன் ஏராளமான விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வெளியீடுவதற்கு முன்பணத்துடன் படக்குழுவினரை அணுகினார்கள். நான் கூட இந்த அளவிற்கு ‘லவ்வர்’ படம் வெளியாகும் முன்பே வணிகம் நடைபெற்றால்.. அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அவர்களோ இந்த படத்தினை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மூலமாக வெளியிடவே திட்டமிட்டிருக்கிறோம் என்று தயாரிப்பாளர்கள் உறுதியுடன் தெரிவித்தனர். இதற்காக தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த வாரம் இந்த படத்தைப் பார்த்தேன். எக்ஸலாண்ட்டான மூவி. இப்படத்தின் பின்னணியிசையை ஷான் ரோல்டன் மிகச்சிறப்பாக இசையமைத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் பேசப்படும்.

இந்த படத்தின் டிரைலரில் மணிகண்டன் பேசும் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. அவருடைய நடிப்பை விட அவருடைய குரல் மூன்று மடங்கு கூடுதலாக நடித்திருக்கிறது. மணிகண்டன் தமிழ் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்கு செல்லும் தகுதியும், திறமையும் பெற்ற நடிகர். ஒரு சாதாரண காட்சியைக் கூட தன்னுடைய நடிப்பால் உயிர்ப்புள்ளதாக்கும் வலிமைக் கொண்டவர்.

‘லவ் டுடே’ எப்படி வெற்றியைப் பெற்று வரலாறு படைத்ததோ.. அதை விட கூடுதலாக வசூலித்து இந்த படம் சாதனை படைக்கும். இந்த படம் ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கான படம். இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு விசயமும் ரசிகர்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கும்.” என்றார்.நடிகர் மணிகண்டன் பேசுகையில்,“ சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன். இந்த படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்படுகிறேன். நாங்கள் நினைத்த மாதிரி இந்த படத்தை உருவாக்கியதற்கு நிம்மதியாக இருக்கிறேன். 2019 ஆம் ஆண்டில் இந்த கதையை பிரபு சொன்னபோது அவரிடம், ‘நீங்கள் என்னை வைத்து இயக்காவிட்டாலும், வேறு யாரையாவது வைத்து இயக்குங்கள். ஏனெனில் இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை.’ என்றேன்.

இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பிரபுராம் வியாஸை பாராட்டுகிறேன். அதனையடுத்து தயாரிப்பாளர்களைப் பாராட்டுகிறேன். ஏனெனில் இந்த படத்தின் திரைக்கதையில் எந்த இடத்திலும் கமர்சியல் எலிமெண்ட் வேண்டும் என சொல்லாமல், கதையோட்டத்தின் இயல்பை ஏற்றுக்கொண்டு தயாரித்தனர்.படபிடிப்புத்தளத்தில் நாயகி கௌரி ப்ரியாவின் மனோபலம் எங்கள் அனைவரையும் வியக்கவைத்தது. கண்ணா ரவி தற்போது தனி கதாநாயகனாக நடித்து வருகிறார். இருந்தாலும் இந்த படத்தில் இயக்குநர் சொன்னதற்காக நல்லதொரு கேரக்டரில் கொஞ்சம் கூட முகச்சுழிப்பு இல்லாமல் நடித்து முழு ஒத்துழைப்பை அளித்தார். இவர்கள் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அனைவரும் தாங்கள் ஒரு வெற்றிப்படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணத்திலேயே நடித்தனர்.

நான் எப்போதும் ஒரு விசயத்தை மட்டும் உறுதியாக சொல்லிக்கொண்டேயிருப்பேன். அதேப்போல்  இப்போதும் சொல்கிறேன். ‘இந்த படம் உங்களை ஒருபோதும் டிஸ்ஸாப்பாயின்ட்மென்ட் பண்ணாது.” என்றார்.

Related Posts