லெவன்: திரைப்பட விமர்சனம்
நகரத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள் எரிக்கப்படுகிறார்கள். யார் என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியும் விபத்துக்கு உள்ளாகிறார். பிறகு, இன்னொரு காவல்துறை அதிகாரியான நாயகனிடம் வழக்கு வருகிறது. அவர், ‘நேர்மையானவர், திறமையானர்’ என்று பெயர் எடுத்தவர்.
அவர் அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு முடிச்சாக அவிழ்கிறது.
கொல்லப்பட்டவர்கள் யார், கொன்றவர் யார், எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பதை எல்லாம் அதி பயங்கர ட்விஸ்டோடு சொல்கிறது மீதிக்கதை.
காவல்துறை அதிகாரியாக வருகிறார் நாயகன் நவீன். படத்தின் துவக்கக் காட்சியிலேயே அதிரடியான எண்ட்ரீ கொடுத்து மனதில் பதிந்துவிடுகிறார். கூர்மையன பார்வை, கெத்தான உடல் மொழி என ரியல் போலீஸாகவே கதாபாத்திரத்துடன் ஒன்றிவிட்டார் நவீன். அதோடு, தன்னை காதலிக்கும் பெண்ணை விட்டு கடுமையான முகத்துடன் விலகுவது, தனது வாழ்க்கை குறித்து காவல் அதிகாரியிடம் ஆவேசத்துடன் பேசுவது என அசத்துகிறார்.
அதுவும் துவக்கக் காட்சியில் வங்கியில் கொள்ளையடித்த கூட்டத்தை , தனது டெக்னாலஜி அறிவைக் கொண்டு மிக எளிதாக பிடிப்பது அபாரம்.
பிளாஷ்பேக் காட்சியில் வரும் அபிராமி, வழக்கமான தனது சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார்.
மற்றொரு போலீஸ் அதிகாரியான ஷாஷாங்கும் சிறப்பாக நடித்து உள்ளார். கொலை வழக்கை விசாரிக்கும்போது, அடுத்தகட்டத்துக்கு முன்னேறாத போது தவிக்கும் காட்சியில் முத்திரை பதிக்கிறார்.
சப் இன்ஸ்பெக்டராக வரும் திலீபனும் அருமையாக நடித்து உள்ளார். மனைவியை இழந்த அவரது நிலை பரிதாபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதால் மனதில் பதிகிறது.
இதர கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ரித்விகா, ரேயாஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜய் உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.
பிளாஷ்பேக் காட்சியில் வரும் சிறுவர் சிறுமியர் நடிப்பும் அபாரம். அதுவும் சகோதரனுக்காகவே வாழும் அந்த சிறுவன் நெகிழவைத்துவிட்டான்.
டி.இமானின் இசை படத்துக்கு பெரும் பலம்.
காரம், புளிப்பு என எந்த வகை உணவாக இருந்தாலும் சுவையாக இருக்க.. சுவையைக் கூட்ட உப்பு அவசியம். அது போல நெகிழ்ச்சியான காட்சிகள், திகிலான காட்சிகள், சேசிங் என எந்தக் காட்சியாக இருந்தாலும் அதை மேலும் சுவாரஸ்யப்டுத்துகிறது டி.இமானின் பின்னணி இசை. ‘விடியாத வானம்.’ உள்ளிட்ட பாடல்கள் அருமை.
கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவும் சிறப்பு. கொலை நடக்கும் காட்சிகளில் திகிலை அதிகரிக்கிறது. அதுவும் அந்த கல்லறை காட்சியில் ஒளிப்பதிவு அதி அற்பதம்.
ஸ்ரீகாந்த் என்.பி.யின் எடிட்டிங், ஒரு த்ரில்லர் படத்துக்கான அளவை சரியாக கணித்து வெட்டி ஒட்டி இருக்கிறது. அருமை.
சிறப்பான ஒரு த்ரில்லரை அளித்து இருக்கிறார் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய லோகேஷ் அஜில்ஸ். கொலைகள் நடப்பது, விசாரணை, கொலைக்கான முடிச்சுகள் அவிழ்வது ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ரசிக்க வைத்து இருக்கிறார். பிளாஷ்பேக் காட்சியில், கண்கலங்க வைத்துவிட்டார்.
மொத்தத்தில் பயந்து – ரசித்துப் பார்க்கலாம்.
ரேட்டிங்: 3.1/5
.

