லெக்பீஸ்: விமர்சனம்: ரசித்துச் சுவைக்கலாம்!
ஒருவருக்கு ஒருவர் தொடர்பே இல்லாத நான்கு இளைஞர்கள், ஒரே இடத்தில் உயிருக்கு உத்தரவில்லாமல் நடுங்கிக் கிடக்கின்றனர். அதன் பிறகு என்ன ஆனது என்கிற சுவாரஸ்ய முடிச்சுகளை கதையாக பின்னி ரசிக்கவைக்கிறார்கள்.
சவுரி முடியை வாங்கி விற்கும் வியாபாரி மணிகண்டன், பேயோட்டும் ஸ்ரீநாத், கிளி ஜோசியம் பார்க்கும் கருணாகரன், மிமிக்ரி செய்து சம்பாதிக்கும், ரமேஷ் திலக் ஆகியோர் ஆளுக்கொருபக்கமாக வாழ்கிறார்கள்.
ஒரு நாள் எதிர்பாராமல் அவர்கள் நால்வரும் ஒரு சாலை முக்கத்துக்கு வர… அங்கு கீழே இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்று கிடக்கிறது.
சமமாக பிரித்துக்கொள்ள முடிவெடுத்து, “தண்ணி” அடித்து கொண்டாட முடிவு செய்கிறார்கள்.
அங்கு போன பிறகுதான் தெரிகிறது.. அது செல்லாத நோட்டு.
இதனால் டென்சன் ஆகும் பார் ஓனர் மொட்டை ராஜேந்திரன், இந்த நால்வரையும் கொல்ல முடிவு செய்கிறார். அங்கு அவரை கொல்ல ஒரு கேங் வருகிறது.
அதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.
விட்டேத்தி இளைஞர்களாக மணிகண்டன், ஸ்ரீநாத், கருணாகரன், ரமேஷ் திலக் ஆகியோர் இயல்பாக – ரசிக்கும்படி நடித்து இருக்கிறார்கள்.
மதுக்கடையில் காதல் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது, உயிருக்கு ஆபத்து என்றவுடன் புலம்புவது, தப்பிக்க எடுக்கும் நடவடிக்கைகள்… என படம் நெடுகிலும் சுவாரஸ்யப்படுத்துகிறார்கள்.
பார் ஓனராக வரும் மொட்டை ராஜேந்திரன், அவரிடம் வேலை பார்க்கும் நபராக வரும் யோகிபாபு ஆகியோரும் தங்கள் பங்கிற்கு சிரிக்க வைக்கின்றனர்.
இவர்களோடு ரவி மரியா, மைம் கோபி, மதுசூதன ராவ் ஆகியோர் முக்கிய வில்லன்களாக மிரட்டுகின்றனர்.
கூடுதலாக வி.டி.வி. கணேஷ், ஜி.மாரிமுத்து உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
பிஜோர்ன் சுராவ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம்.
மசானியின் ஒளிப்பதிவு சிறப்பு. மதுக்கடையின் பார், அதன் பின்புறம் இருக்கும் குடோன் என்று ஒவ்வொரு இடத்தையும் ரசிக்கும்படி ஒளிப்பதிவாக்கி காண்பித்து இருக்கிறது.
த்ரில், அமானுஷ்யம், காமெடி, மசாலா என அளவு பார்த்து கொடுத்து ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத்.

