கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்: திரைப்பட விமர்சனம்

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்: திரைப்பட விமர்சனம்

“காசு பணத்தைவிட, காதல்தான் முக்கியம்” என்பதை, காமெடியுடன் சொல்லி ரசிக்க வைத்து இருக்கிறார்கள்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனுக்கு, வசதியான பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதே லட்சியம். அதன்படியே ஒரு வசதியான பெண்ணை காதலிக்கிறார்.

பிறகுதான் தெரிகிறது, அந்தப் பெண்ணும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கும், வசதியான ஆணை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவதே லட்சியம் என்று!

இதனால் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட, பிரிகிறார்கள்.

அதன் பிறகு நாயகனுக்கு ஒரு வசதியான காதலியும், நாயகிக்கு ஒரு வசதியான காதலனும் கிடைக்க… என்ன ஆகிறது என்பதே கதை.

நாயகனாக, ஸ்ரீகாந்த். எப்படியாவது பணக்காரராகிவிட வேண்டும் என்று துடிப்பதும், அதற்காக வசதியான பெண்ணை காதலிப்பதும் என இந்தக்கால இளைஞர்கள் பலரின் பிரதிநிதியாக சிறப்பாக நடித்து இருக்கிறார். காதலியிடம் சவால் விடுவது, பிறகு உண்மை உணர்ந்து நெகிழ்வது என ரசிக்க வைக்கிறார்.

நாயகியாக புஜிதா பொன்னாடாவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். குறிப்பாக நகையைக் காணவில்லை என தன் மீது குற்றச்சாட்டு வந்து தவிக்கும் காட்சியிலும், பெற்றோருக்கு அவமானம் என்றவுடன் குமையும் காட்சியிலும் மனதில் நிற்கிறார்.இரண்டாவது நாயகனாக வரும் பரதன், இரண்டாவது நாயகியாக வரும் நிமி இமானுவேல் மற்றும் பார்கவ் ஆகியோரும் இயல்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா என ஒரு பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறது.

இவர்களுடன், தயாரிப்பாளர் “மை இண்டியா” மாணிக்கமும்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து ரசிக்க வைக்கின்றனர்.

பி.என்.சி.கிருஷ்ணாவின் வசனம் படத்துக்கு ப்ளஸ்.

தாமோதரன்.டி.யின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. அதுவும் பாடல் காட்சிகளில் கூடுதலாக ஈர்க்கிறது.ஆர்.கே.சுந்தரின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு.

கே.கே.வின் எடிட்டிங் கச்சிதம்.

கதை, திரைக்கதையமைத்து இயக்கியுள்ளார் கே.ரங்கராஜ். ஆபாசம், வன்முறை இல்லாத படம் என்பதற்காகவே முதல் பாராட்டு அவருக்கு. அதோடு, படம் நெடுக, தொடரும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

ரேட்டிங்: 3.5/5

Related Posts