“தெரு நாய்களைக் கொல்லுங்கள்!”: மகாத்மா காந்தி

கடந்த (2024ம்) ஆண்டில் இந்தியா முழுதும், 37 லட்சத்திற்கும் அதிகமான நாய் கடி சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது.
இந்த ஆபத்து குறித்து கடந்த டிசம்பர் மாதம், திமுகவைச் சேர்ந்த கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் கேள்வி எழுப்பினார். அதே போல கடந்த மார்ச் மாதம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான ஈ.ஆர்.ஈஸ்வரனும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “தெரு நாய்கள் பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிடலாம். ஆனால், சட்டத்தில் அதற்கு இடமில்லை. தெரு நாய்கள் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு தெரு நாயை பிடித்தால், அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து பிடித்த இடத்திலேயே அதனை விட வேண்டும். அந்த நாய் இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதனால் தெரு நாய்களை பிடிக்க அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர திமுக எம்.பி-க்களை வலியுறுத்தியுளேன். ” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 17ம் தேதி, “நோய் பாதித்த நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” என உத்தரவிட்டது கேரள அரசு.
நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசும் இதையே அறிவித்தது.
இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதமே இதைத் தெரிவித்தவர் பாமக தலைவர் அன்புமணி.
அவர், “நோய்வாய்ப்பட்ட நாய்களைக் கொல்ல சட்டத்தில் இடம் உள்ளது. நாய்கள் பெருக்கத்துக்கு அரசை மட்டும் குறை சொல்ல முடியாது. மக்களும் காரணம்” என வழக்கம்போல விரிவாக அறிக்கை வெளியிட்டார்.
அவர்,
தமிழகம் எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது தெருநாய்க்கடியால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் சிக்கல். சென்னையில் பல மருத்துவமனைகளுக்கு வெறிநாய் கடித்து சிகிச்சை பெறுவதற்கு தினமும் குறைந்தது 3 பேராவது வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிற பகுதிகளிலும் இதே நிலைதான். தமிழகத்தில் 2025-ம் ஆண்டு பிறந்த பிறகு கடந்த 3 மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் நாய்க்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் வெறிநாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி 47 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தியாவில் சாலை விபத்துகளில் நிகழும் உயிரிழப்புகளில் 21 சதவீதத்துக்கு காரணமான விபத்துகள் தெரு நாய்களால்தான் ஏற்படுகின்றன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இழப்புகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படாததற்கு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடின்மையும், அலட்சியமும் முதன்மை காரணம் என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் மாநில அரசையும், உள்ளாட்சி அமைப்புகளையும் மட்டுமே குறை கூறுவது பொருளற்ற செயல் ஆகும்.
அன்புமணி
தெருநாய்களால் மனிதர்கள், குறிப்பாக சிறுவர்களும், குழந்தைகளும் கடிக்கப்படுவதற்கு முதன்மைக் காரணம் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதுதான். இன்றைய நிலையில் இந்தியாவில் சுமார் 4 கோடி நாய்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாய்களின் எண்ணிக்கை வேகமாக பெருகுவதற்கு மக்கள் தான் காரணம் ஆவர். தெருநாய்களுக்கு தாராளமாக உணவு வழங்கப்படுவதும், உணவுக் கழிவுகளையும், மக்காத கழிவுகளையும் பல இடங்களில் கொட்டி அவற்றை நாய்களின் வாழிடமாக மாற்றுவதும் தான் அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்க காரணம்.
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது தான் நிரந்தரத் தீர்வு ஆகும். ஆனால், இது எளிதானதோ, உடனடியாக சாத்தியமாவதோ அல்ல. தெரு நாய்களில் 70 சதவீதத்துக்கும் கூடுதலாக கருத்தடை செய்தால் மட்டும் தான் நாய்களின் எண்ணிக்கைக் குறையும். அதற்கும் கூட குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும் என்று கடந்த கால அனுபவங்கள் கூறுகின்றன. அடுத்த தீர்வு, நாய்களுக்கு தடுப்பூசி போடுவது ஆகும். இது ஓரளவு குறைந்த காலத்தில் பயனளிக்கக்கூடும். ஆனால், இந்த இரு தீர்வுகளையும் செயல்படுத்துவதற்கு பெரும் நிதி, கட்டமைப்பு, மனிதவளம் ஆகியவை தேவை.
வெறிநாய்க் கடிக்கான உடனடி தீர்வுகளில் ஒன்று ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவதும், மிகவும் ஆபத்தான நாய்களை தவிர்க்க முடியாத சூழலில் கருணைக்கொலை செய்வதும்தான். நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றை கருணைக்கொலை செய்வதில் தவறு இல்லை என்று 2017-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவும் பெரும் செலவு பிடிப்பவை தான். தெரு நாய்க்கடி சிக்கலுக்கு அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது. புளுகிராஸ் உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய செயல்திட்டத்தை உருவாக்கி, அதன் மூலமாக தெருநாய்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இதை தொடர் இயக்கமாக அரசு நடத்த வேண்டும்” என்றார் அன்புமணி.
இந்த நிலையில்தான், தெரு நாய் பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளது.
உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் இந்த விசயத்தில் ஏற்கெனவே வேறு வேறு வகையான தீர்ப்புகளை அளித்துள்ளன.
“தெருநாய்களுக்கு உணவு அளிப்பது அவரவர் உரிமை.. உணவு உண்ண அந்த நாய்களுக்கும் உரிமை உண்டு!”
“தெரு நாய் கடித்தால், உணவளித்தவரே பொறுப்பு..” – என்பது ஓர் உதாரணம்.
அதே நேரம், 2015ம் ஆண்டே, “மனிதர்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை – மிருகவதை சட்டத்துக்கு உட்பட்டு – கொல்வதில் தவறில்லை” என்று ஒரு தீர்ப்பை அளித்தது உச்ச நீதிமன்றம்.
பல வருடங்களுக்கு முன்பு, தெருநாய்களை பாரபட்சம் இல்லாமல் பிடித்துச் சென்று கொல்வது நடந்தது. இதை அந்தந்த உள்ளூராட்சி நிர்வாகம் செய்யும்.
ஜனதாதள அரசில் மேனகா காந்தி ஒன்றிய அமைச்சராக இருந்தபோது, நாய்களைக் கொல்ல தடை விதித்தார். மிருகவதை என்றார்.
இதனால் அவ்வழக்கம் நின்றது. அதற்கு பதிலாக, “நாய்களுக்கு தடுப்பூசி போடலாம், கருத்தடை செய்யலாம், தனியாக பராமரிக்கலாம்” என்றெல்லாம் தெரிவித்தார்.

அப்போதே பலரும், “இதெல்லாம் வேலைக்கு ஆகாது… இது, நாய் தலையில் சிக்கன் குமாவை வைத்து அது வழிந்து நாயின் கண்ணை மறைக்கும்போது அதை பிடித்துவிடலாம் என்பதைப்போன்றது..” என்றனர்.
ஆனால் மேனகா கேட்கவில்லை.
விளைவு.. நாய்கள் பெருகின.
இப்போது, பெங்களூரு கெம்பகவுடா இன்ஸ்டிடியூட், “இந்தியாவில் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் நாய் கடியால் பலியாகிறார்கள்.. கடிபட்டு உயிர் பிழைப்போர் பல லட்சம் பேர்” என்கிறது.
தவிர அமைச்சர் நேரு சொல்வதைப்போல, “நாயைப் பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அந்த இடத்தில் விட வேண்டும். இல்லாவிட்டால்.. அல்லது கருத்தடையின்போது நாய் இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு சிறை”..
இந்த நிலையில்தான் மனித நல ஆர்வலர்கள் சொல்கிறார்கள்..
“தெரு நாய்களை பாரபட்சமின்றி கொலை செய்தவே தீர்வு. வலி இன்றி இது நடக்க வேண்டும். ஸ்ட்ரைச்நைன் என்கிற மலிவான ஊசியே சிறந்தது” என்கிறார்கள்.
“நாய்களைக் கொல்வதா.. மிருகவதையா” என்று விலங்கு நல ஆர்வலர்கள் சொல்லக்கூடும். ஏன்.. இது குறித்து வழக்குகளும் தொடுத்து இருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு தகவல்..
1926ம் ஆண்டு.. மகாத்மா காந்தியிடம் ஒரு தொழிலதிபர், “என் ஆலை இருக்கும் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தொழிலாளிகள் பலரை கடித்துவிட்டன. அவர்கள் பயப்படுகிறார்கள். என்ன செய்வது..” என்றார்.

அதற்கு காந்தி, “என்ன செய்ய முடியும்.. அந்த நாய்களை கொன்றுவிடுங்கள்” என்றார்.
இந்தத் தகவல் வெளியே வர, விலங்கு நல ஆர்வலர்கள் காந்தியை நேரடியாக சந்தித்து ஆவேசமானார்கள். “அகிம்சை வழி என சொல்லிக்கொண்டு இப்படி செய்யலாமா” என வெகுண்டனர்.
இதையடுத்து, தனது கருத்தின் நியாயத்தை வெளிப்படுத்தி யங் இந்தியா இதழில் தொடர் கட்டுரையே எழுதினார் காந்தி.
அந்த கட்டுரையில் இருந்து சில பகுதிகள்..
பராமரிப்பாளர் இன்றி தெருக்களில் திரியும் நாய்கள் சமூகத்துக்கு ஆபத்தானவை (28.10.26)
“ஒவ்வொரு நாயிடமும் விசம் உள்ளது. வெறி நாயை மட்டுமல்ல.. அனைத்து நாய்களையும் கொல்ல வேண்டும்” ( 11.11.26)
மேனகா காந்தியின் பேச்சுக்களை மட்டுமின்றி, மகாத்மா காந்தியின் கருத்துக்களையும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, இந்த விசயத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதாலேயே இவ்வளவு பெரிய கட்டுரை.
– டி.வி.சோமு