“கீர்த்தியை என் மகளைப் போலப் பார்க்கிறேன்; இன்னும் 25 ஆண்டுகள் அவர் நடிக்க வேண்டும்!” – ‘சத்தியவான் சாவித்திரி’ விழாவில் மிஷ்கின் நெகிழ்ச்சி!

“கீர்த்தியை என் மகளைப் போலப் பார்க்கிறேன்; இன்னும் 25 ஆண்டுகள் அவர் நடிக்க வேண்டும்!” – ‘சத்தியவான் சாவித்திரி’ விழாவில் மிஷ்கின் நெகிழ்ச்சி!

Drumsticks Productions மற்றும் Zee Studios இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், அவருக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர். நீதிமன்றப் பின்னணியில் குடும்ப உணர்வுகள், சஸ்பென்ஸ் மற்றும் கொலை மர்மம் நிறைந்த கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குநர் பிரவீன் S. விஜய், “14 ஆண்டுகால ஆசை மிஷ்கின் சாருடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் நிறைவேறியுள்ளது. கீர்த்தி சுரேஷை மனதில் வைத்தே இக்கதையை எழுதினேன். தயாரிப்பாளர்கள் சக்தி, விஜய், விவேக் ஆகியோர் மிகப்பெரிய பக்கபலமாக இருந்தனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய மிஷ்கின், “இயக்குநர் பிரவீன் குழந்தை போன்ற மனம் கொண்டவர்; எங்களுக்கு முழு நடிப்புச் சுதந்திரம் கொடுத்தார். கீர்த்தி சுரேஷை என் மகளைப் போலப் பார்க்கிறேன். சாவித்திரி என்ற பெயரில் உருவான படத்தில் அவர் நடித்திருப்பது மகிழ்ச்சி; இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “உடல்நலக் குறைவால் புரமோஷனுக்கு வரத் தாமதமாகிவிட்டது. மிஷ்கின் சாருடன் நடிக்க முதலில் பயந்தாலும், இரண்டு நாட்களிலேயே அவருடன் நெருக்கமாகிவிட்டேன். இயக்குநர் பிரவீன் எனக்கு ஒரு சகோதரரைப் போன்றவர். படத்தைப் பார்த்துவிட்டேன், எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றார்.

இசையமைப்பாளர் சாம் C.S., இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்திற்குக் ‘கிரே ஷேடுகள்’ இருப்பதாகவும், முதல் ரீலை இசை இல்லாமலேயே பார்த்தபோது கதை தன்னைக் கவர்ந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், நீதிமன்றக் காட்சிகளில் நடிகர்களின் நடிப்புக்கு இடையூறு ஏற்படாதவாறு தரையில் விளக்குகள் வைக்காமல் மேலே மட்டுமே விளக்குகளைப் பொருத்திப் படமாக்கிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

விழாவில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S. சக்திவேல், நிர்வாக இயக்குநர் விவேக், நடிகைகள் பிரிகிடா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் நடிகர் சாருகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு படத்திற்கு ஆதரவு கோரினர். இப்படத்தில் பாலசரவணன், R. சுந்தர்ராஜன், மாலா பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related Posts