‘காதல் ரீசெட் ரிப்பீட்’ : லாஜிக் இல்லாத காதல்… மேஜிக் இல்லாத திரைக்கதை!

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ : லாஜிக் இல்லாத காதல்… மேஜிக் இல்லாத திரைக்கதை!

இயக்குநர் ஏ.எல். விஜய் என்றாலே ஒரு மென்மையான காதல் கதையும், அழகான லொகேஷன்களும் நிச்சயம் இருக்கும். அந்த வரிசையில், மதும்கேஷ், ஜியா ஷங்கர் மற்றும் அர்ஜுன் அசோகன் நடிப்பில் ஸ்காட்லாந்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? பார்ப்போம்.

 கதை:

படத்தின் தொடக்கத்திலேயே நாயகி ஜியா ஷங்கர் காதல் தோல்வியால் மலையிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயல்கிறார். அவரைப் போராடிப் பிழைக்க வைக்கிறார் நாயகன் மதும்கேஷ். ஆனால், அந்த விபத்தில் ஜியாவிற்கு கடந்த இரண்டு வருட நினைவுகள் மறைந்துவிடுகிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாள் தூங்கி எழுந்தாலும் முந்தைய நாள் நினைவுகள் அவருக்கு மறந்துவிடும் ஒரு விசித்திரமான பாதிப்பு ஏற்படுகிறது.

ஜியாவை ஒருதலையாகக் காதலிக்கும் மதும்கேஷ், அவர் மனமுடைந்து போகக்கூடாது என்பதற்காக “நான்தான் உன் காதலன்” என்று பொய் சொல்லி அவரைத் தன் பராமரிப்பில் வைத்துக்கொள்கிறார். இவர்களுக்கு அடைக்கலம் தருகிறார் எம்.எஸ். பாஸ்கர். இதற்கிடையில், ஜியாவின் உண்மையான காதலன் யார்? மதும்கேஷின் தியாகக் காதல் வென்றதா அல்லது ஜியாவின் நினைவுகள் திரும்பியதா? என்பதே மீதிக்கதை.


 ப்ளஸ்:

ஜியா ஷங்கர்: ஏ.எல். விஜய் பட நாயகிகளுக்கே உரிய அந்த அமைதி மற்றும் எமோஷனல் நடிப்பில் ஜியா ஸ்கோர் செய்கிறார். படம் முழுவதையும் தன் தோளில் சுமந்து செல்கிறார்.

  • அர்ஜுன் அசோகன்: முதல் பாதியில் இவரை வீணடித்துவிட்டார்களோ என்று தோன்றினாலும், இரண்டாம் பாதியில் இவர் வரும் இடங்கள் அனைத்தும் கலகலப்பு. குறிப்பாக, ஆங்கிலம் தெரியாத பவுன்சர்களுடன் இவர் செய்யும் கலாட்டா செம ஜாலி!

  • தொழில்நுட்பம்: அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஸ்காட்லாந்தின் அழகை கண்களுக்கு விருந்தாகப் படைத்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் இசை ஒரு மெல்லிய உணர்வைத் தருகிறது.

  • எம்.எஸ். பாஸ்கர்: வழக்கம் போல தனது அனுபவ நடிப்பால் படத்தின் கனத்தைக் கூட்டுகிறார்.

மைனஸ்:

  • மெதுவான திரைக்கதை: படத்தின் முதல் பாதி மிகவும் பொறுமையைச் சோதிக்கிறது. எமோஷனல் காட்சிகள் வலுவாக இல்லாததால் திரைக்கதை ஓட்டத்தில் ஒரு தொய்வு ஏற்படுகிறது.

  • மதும்கேஷின் நடிப்பு: அறிமுக நடிகர் என்பதால் சில இடங்களில் பதட்டம் தெரிகிறது. கதாபாத்திரத்திற்குத் தேவையான எக்ஸ்பிரஷன்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

  • லாஜிக் மீறல்கள்: ஒரு பெரிய விபத்து மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்ற தீவிரமான விஷயத்தை நாயகி மிக எளிதாகக் கையாள்வது நம்பும்படியாக இல்லை.

  • இசை: ஹாரிஸின் இசை ரசிக்கும்படி இருந்தாலும், பல இடங்களில் நாம் ஏற்கனவே கேட்ட பழைய மெட்டுகளை நினைவுபடுத்துகிறது.


ஃபைனல் பஞ்ச்:

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – ஒரு நல்ல கருப்பொருள் (Concept). ஆனால், அந்த கருப்பொருளில் இருந்த சுவாரஸ்யம் திரைக்கதையில் மிஸ்ஸிங். இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் மற்றும் அழகான லொகேஷன்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

ரேட்டிங்: 2.9 / 5

Related Posts