லிஜொமோல் நடிக்கும் ‘காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம்: ஏப்ரல் 14 முதல் ஓ.டி.டி.யில்!

பால்புதுமையினர் (லெஸ்பியன் உள்ளிட்டோர்) குறித்து போதிய புரிதல் இல்லாத சூழலே சமூகத்தில் நிலவி வருகிறது. இந்த நிலையில், அவர்களது உணர்வுகள் இயற்கையானவையே என்பதை சிறந்த கதையாடலுடன் கூறிய திரைப்படம், காதல் என்பது பொதுவுடைமை.
கடந்த பிப்ரவரி காதலர் தினம் – பிப்ரவரி 14 – அன்று வெளியான இப்படத்தை ஜெயபிரகாஷ் இயக்கினார். லிஜொமோல் ஜோஸ், அனுஷா பிரபு, கலேஷ், வினீத் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு, கண்ணன் நாராயணனின் இசை, டேனி சார்லஸின் எடிட்டிங் ஆகியவையும் பேசப்பட்டன.
இப்படம், ‘இது இயற்கைக்கு அப்பாற்பட்டதா?’, ‘குழந்தை இல்லாமல் எப்படி?’, ‘இருவரில் யார் மனைவி?’ என்று பால்புதுமையினர் குறித்து பொதுச்சமூகம் வைத்திருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் – சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கிறது.
அதைப் பிரசாரமாகக் கொடுக்காமல் யதார்த்தமான – சுவாரஸ்யமான கதைக்குள் அளித்திருப்பது சிறப்பு.
இப்படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்டார்.
இப்படம் வரும் 14ம் தேதி முதல், சன் நெக்ஸ்ட் (Sunnxt ) ஓ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
திரையரங்கில் தவறவிட்டவர்கள், அவசியம் பார்க்க வேண்டிய படம்.