மீண்டும் ‘ஜோசப்’ ஆகிறார் விஜய்! ஏன் தெரியுமா?

மீண்டும் ‘ஜோசப்’ ஆகிறார் விஜய்! ஏன் தெரியுமா?

நம்மைப் பொறுத்தவரை மதம் – மத அடையாளத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், பொதுவாக திரைத்துறையில், இஸ்லாமிய – கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் பெயரை ‘இந்து’ மத அடையாளத்துடன் குறிப்பிடுவது வழக்கம்.

உதாரணமாக, மொஹைதீன் அப்துல் காதர்தான், ராஜ்கிரண் ஆனார். கென்னி ஜான் விக்டர், விக்ரம் ஆனார்.

குஷ்பு,ஜோதிகா, ஆர்யா என பல உதாரணங்கள் உண்டு.

சிலர்.. நாசர், ஏ.ஆர்.ரஹ்மான், அமீர், ஷகீலா போன்ற சிலர் தங்களது மதப் பெயரை அப்படியே வைத்துக்கொண்டதும் உண்டு. இது போன்றவர்கள் குறைவு.

நடிகர் விஜயும், தனது ஜோசப் விஜய் என்கிற முழுப்பெயரில் ஜோசப்பை எடுத்துவிட்டே திரைத்துறையில் கால் பதித்தார். அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் தனது (கிறிஸ்துவ) மத அடையாளத்தை வெளிப்படுத்தியது இல்லை. இவர்கள் இந்து கோயில்களுக்கு சென்று வந்த விசயங்கள் செய்திகளாக அளிக்கப்படுமே தவிர, கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்று வந்தது குறித்த தகவல்கள் அளிக்கப்படமாட்டாது. திருநீறு, குங்குமம் பூசி வெளிப்படுவார்களே தவிர,  சிலுவை செயின் போன்ற கிறிஸ்துவ அடையாளங்களுடன் பொது வெளியில் வந்ததில்லை.  (அது அவர்கள் விருப்பம்.)

2003ம் ஆண்டில்தான், இதை ஒரு பிரச்சினையாக வேண்டுமென்றே இந்துத்துவ அமைப்புகள் உருவாக்கின. அப்போது, கீதை என்ற படத்தில் விஜய் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.உடனே இந்துத்துவ அமைப்புகள் சில, “ஜோசப் விஜய் என்கிற கிறிஸ்துவர், இந்து மத புனித நூலான கீதை பெயரில் நடிப்பதா” என்று எதிர்ப்பு குரல் கொடுத்தன.

இதற்கு விஜய் பதில் ஏதும் சொல்லவில்லை. தனது படத்தின் பெயரை, “புதிய கீதை” என மாற்றிவிட்டார்.

பிறகு, 2017ல் அவரது மெர்சல் திரைப்படம் வெளியானபோதும் இதே பெயர் சர்ச்சையை கிளப்பினர் இந்துத்துவவாதிகள்.

அந்தப் படத்தில் விஜய், ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா திட்டங்களை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

உடனே பாஜகவின் எச்.ராஜா, “அவர் ஒரு கிறிஸ்துவர்… அவரது உண்மையான பெயர் ஜோசப் விஜய்” என்று சமூகவலைதளத்தில்,, விஜயின் வாக்காளர் அட்டையை வெளியிட்டார்.

“ஒன்றிய அரசின் திட்டங்களை விமர்சித்தால் இதுதான் பதிலா” என எச்.ராஜா மீது விமர்சனங்கள் குவிந்தன. (நமக்கும் அதே கருத்துதான். எச்.ராஜாவின் செயல் ஏற்கத்தக்கது அல்ல.)

அந்தப் படத்தின் வெற்றி குறித்து நன்றி தெரிவித்த விஜய், அதற்கான அறிக்கையில் “ஜோசப் விஜய்” என தன்னை குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு முன், 2014ம் ஆண்டு, திரைத்துறைக்கு சலுகை அளித்த ஒன்றிய தலைமை அமைச்சர் மோடிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட போதும், ஜோசப் விஜய் என்று தன்னை குறிப்பிட்டு இருந்தார்.

இந்த இரண்டு சந்தர்ப்பங்கள் தவிர, ஜோசப் என பொதுவெளியில் தன்னை விஜய் குறிப்பிட்டதாக சொல்ல முடியாது.

பிறகு கட்சி துவங்கிய பிறகும் அறிக்கைகளில் விஜய் என்றே குறிப்பிட்டு வருகிறார்.

இந்த நிலையில், த.வெ.க. நிகழ்ச்சி ஒன்றில் விஜயை, அக்கட்சியின் பொ.செ. ஆனந்த், “ஜே.வி” என்று அழைத்தது பேசுபொருள் ஆகி இருக்கிறது.

கடந்த (ஜூலை) 21ம் தேதி, சேலத்தில் நடந்த தவெக கொள்கை விளக்கக் கூட்டத்தில்தான் இது நடந்திருக்கிறது.

அதாவது, “ஜோசப் விஜய்” என்பதை சுருக்கி, “ஜேவி” என விஜயை விளித்திருக்கிறார் ஆனந்த்.

இது ஒரு விசயமா என்று தோன்றலாம்.

இதுவும் ஒரு விசயம்தான்.காரணம், புதுக்கோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஆனந்த். அங்கு ஒரு ரசிகரின் பெயர் விஜய். உடனே ஆனந்த், “மதிப்புக்குரிய தளபதியின் பெயர் கொண்டரவே” என்றுதான் பொதுவெளியில் அழைத்தார்.

அந்த அளவுக்கு பெயருக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ஆனந்த்.

அவரே, “ஜே.பி.” என விஜயை ஜோசப் விஜய் என குறிப்பிடுவது கவனிக்க வைக்கிறது.

ஏன் இந்த மாற்றம்..

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறுபான்மையினர் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகியவற்றுக்கே வாக்களிப்பார்கள். அதிமுகவுக்கும் கணிசமானோர் வாக்களிப்பது உண்டு என்றாலும், பாஜகவுடன் அக்கட்சி கூட்டணி வைத்திருப்பதால் அவர்களது வாக்குகள் முழுமையாக திமுக கூட்டணி பக்கம் திரும்பும்.

“கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததே அதிமுகவின் தோல்விக்குக் காரணம்” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே குறிப்பிட்டது பலருக்கும் நினைவிருக்கும்.

நிர்ப்பந்தம் காரணமாக மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார். ஆகவே தங்களது ( பாஜக – அதிமுக) கூட்டணிக்கு சிறுபான்மையினர் ஆதரவு அளிக்கமாட்டார்கள் என்பது அந்த இரு கட்சிகளுக்குமே தெரியும்.

இந்த நிலையில்தான் திடுமென, (மீண்டும்) ஜே.வி. – ஜோசப் விஜய் என தவெகவினர் அவர்களது தளபதியை குறிப்பிட ஆரம்பித்து இருக்கின்றனர்.

ஆக, தி.மு.க.வுக்குச் செல்லும் சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பதே தவெக நோக்கம் என புரிந்துகொள்ள முடிகிறது.

இதற்காகவே சிறுபான்மையினர் வாக்களித்துவிடுவார்கள் என்று நாம் சொல்லவில்லை. அதற்கான முயற்சியாக இருக்கும் என்றே சொல்கிறோம்.

“பெயரில் என்ன இருக்கிறது…” என்று சிலர் கேட்கலாம்.

“பெயரில் எல்லாம் இருக்கிறது!”

– டி.வி.சோமு

Related Posts