“விஜயை டார்ச்சர் செய்தேன்!”: சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன்!
2005ம் ஆண்டு, விஜய் – ஜெனிலியா ஜோடியாக நடித்த சச்சின் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜான் மகேந்திரன். இவர், மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன்.
அதன் பிறகு ஜான், நந்தாவை வைத்து 2007ல் ஆணிவேர் எனும் திரைப்படத்தை இயக்கினார். ஈழத்தில் நடைபெறும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட அழகான காதல் கதை இது.
தொடர்ந்து படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் இந்தி படங்களை தமிழ் மொழிக்கு டப் செய்யும் பணிகளையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சச்சின் திரைப்படத்தை தயாரிப்பாளர் தாணு, 20 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் செய்தார். இப்போது படம் பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
இதையடுத்து சென்னையில் சக்ஸஸ் மீட் நடந்தது. நிகழ்வில் இயக்குநர் ஜான் மகேந்திரன், கலைப்புலி தாணு, இசையமைப்பாளர் டி.எஸ்.பி., நடன இயக்குநர் ஷோபி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் ஜான் பேசும்போது, “ஆகியுள்ள சச்சின் படத்தை தியேட்டர்களில் திருவிழா போல கொண்டாடி வரும் தளபதி ரசிகர்களுக்கு ரொம்பவே நன்றி. இந்த அளவுக்கு மீண்டும் பெரியளவில் ரீ ரிலீஸ் பண்ணுவார் தாணு சார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. முதல் நாளில் மட்டுமின்றி தொடர்ந்து ஒரு வாரமாக ரசிகர்கள் திரையரங்குகளில் வரவேற்பு கொடுத்து வருவதை ரீல்ஸ்களில் பார்த்து ஆடிப்போய்விட்டேன்.
சச்சின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜீவா இன்று நம்மிடையே இல்லை என்பது தான் எனக்கு ரொம்பவே வருத்தமான விஷயம். படத்தை அந்தளவுக்கு அழகாக எடுத்திருப்பார்.
அதில் வரும் மிஸ்ட் எஃபெக்ட் எல்லாம் மெஷின் வைத்து போட்டு ஷாட் எடுப்போம். விஜய் சாரை போட்டு டார்ச்சர் பண்ணுவோம். ஆனால், அதெல்லாம் ஏன் பண்றீங்க என ஒருபோதும் அவர் எரிச்சலானதே கிடையாது. கதையை கேட்கும் போதே இந்த படத்தை நாம பண்ணலாம் என்றார். அவரை இதற்குமேல் இப்படி ஜாலியாக படங்களில் பார்க்க முடியாது என்பது வருத்தமாக இருந்தாலும், அவர் இன்னொரு பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டார். அவருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்” என்றார் ஜான் மகேந்திரன்.

