ஜின் தி பெட்: திரைப்பட விமர்சனம்
‘நல்ல பேய்’ கதை ஒன்றை சொல்லி இருக்கிறார்கள்.
மலேசியாவில் வேலை பார்த்து வரும் முகேன் ராவ், சொந்த ஊருக்குத் திரும்புகிறார். கையோடு, ‘ஜின்’ என்ற பேயை வாங்கி வருகிறார். இதை நாய், பூனை போல வீட்டில் வைத்து வளர்க்கலாம். ஜின்னை ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்து பால், பிஸ்கட் எல்லாம் கொடுத்து பாசமாக வளர்த்து வருகிறார்.
ஜின் வந்த நேரம் அவருக்கு சில பாசிடிவான சம்பவமங்கள் நடக்கின்றன. ஆகவே அதை அதிர்ஸ்டமாக நினைக்கிறார். ஆனால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சில நெகட்டிவ் விசயங்கள் நடக்க.. அவர்கள் ஜின்னை வெறுக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு நாள் வீட்டில் தனியே இருக்கும் அவரது மனைவி பவ்யா தரிக்கா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடக்கிறார். இதற்குக் காரணம் ஜின் தான் என நினைத்து, அதை வளர்க்கும் பெட்டியோடு தூக்கிக் கடாசுகிறார்.
மனைவியை மருத்துவமனையில் சேர்க்கிறார். அங்கும் அவரை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதை அறிகிறார்.
பிறகுதான், தனது மனைவியை கொல்ல முயன்றது வேறு யாரோ என்பதும், ஜின்தான் காப்பாற்றியது என்றும் தெரியவருகிறது.
அவரது மனைவியை கொல்ல நினைப்பவர்கள் யார், அவர்களை முகேன் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதிக்கதை.
நாயகன் முகேன் ராவ், வேலை பறிபோகும் இடத்தில் அனுதாபத்தை அள்ளிக்கொள்கிறார். அதே நேரம், ஜின்னோடு ஜாலியாக பழகும் காட்சிகளிலும், பவ்யாவுடன் காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார்.
நாயகி பவ்யா தரிக்காஅழகான புன்னகையுடன் அழகாக நடித்து இருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டுமின்றி, கிளைமாக்ஸ் காட்சியில் போராடும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து உள்ளார்.
பாலசரவணன் டைமிங் காமெடி ரசித்து சிரிக்கலாம். அதுவும் பேய்க்கு பயந்து சாமியார் போல காவி கட்டி அவர் வரும் காட்சிகள் கூடுதல் சிறப்பு.
இவர்களுடன் அண்ணாச்சி, வினோதினி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, ராதா ரவி, கயல் தேவராஜ் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்து உள்ளனர்.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை அபாரம்.
அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு சிறப்பு. மலேசியா மற்றும் சென்னை காட்சிகளை சிறப்பாக படம் பிடித்து அளித்து இருக்கிறார்.
பொதுவாக வீடுகளில் நாய், பூனையை செல்லப்பிராணிகளாக வளர்ப்பார்கள். சிலர் , வாஸ்து மீன், லக்கி மரம் போன்றவற்றை வளர்ப்பார்கள். அது போல மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் ஜின் என்ற பேயை வளர்ப்பார்களாம். இதை அடிப்படையாக வைத்து, படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டி.ஆர்.பாலா.
ஒரு பேய் படத்தை மிரட்டாமல் ஜாலியாக பார்க்க வைப்பதில் ஜெயித்து இருக்கிறார்.
