வீட்டளவில் சுருங்கிவிட்டதா தமிழ்த்தேசியம்?: முனைவர் நளினிதேவி விரிவான நேர்காணல்

முனைவர் நளினிதேவி மதுரைக்காரர். ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியையான இவர் அகவை 75 கடந்தும்  தமிழுக்காக நாளும் உழைத்துக் கொண்டிருப்பவர்.  ‘ராஜம் கிருஷ்ணனின் புதினங்களில் சமுதாய மாற்றம்’ என்ற  தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 

‘புறநானூறு: தமிழர்களின் பேரிலக்கியம்’ எனும்  இவரது ஆய்வு நூல் சமீபத்தில் வெளியாகி தமிழ் இலக்கிய உலகில் பரவலாக கவனிக்கப்பட்டது.   பெரியாரின் நெறிமுறைகளைப் பின்பற்றும்  இவர் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் செயல்பாடுகளையும் கொப்பளிக்கும் தனது சிந்தனைகளால் சீறிப் பாய்ந்து எதிர்ப்பவர். 

 ‘காதல் வள்ளுவன்’, ‘என் விளக்கில் உன் இருள்’ , ‘ராஜம் கிருஷ்ணனின் புதினங்களில் சமுதாய மாற்றம்’  , ‘கோவை ஞானியின் கவிதை  இயல் கொள்கைகள்’, ‘எஸ்.பொன்னுதுரையின் படைப்பும் படைப்பாளுமையும்’, ‘நானும் என் தமிழும்’  உட்பட 12  நூல்களின் ஆசிரியர்.

அவருடனான நேர்க்காணல்…

உங்கள் 40 ஆண்டுக் கால கல்விப் பணியில் இன்றைய காலமாற்றம் குறித்து கூறுங்களேன்..

நான் படித்த, பணியாற்றிய காலம் வேறு! ஆசிரியப் பணி மேலும் மேலும் படிப்பதற்கே எனவும், அறிவார்ந்த நாளைய சமுதாயத்தைச் செதுக்கும் சிற்பியின் பணி என்றும் கருதப்பட்டது.  ஆனால்,  இன்று, கல்வி வணிகமாகவும், ஆசிரியப் பணி  எல்லையே இல்லாத தம் நுகர்வியல் தேவைகளைப் பெறுவதற்காகவும், ஒரு தொழிலாகவும் மாறிவிட்டது. ஆசிரியர்க்குரிய பண்புகள் பெரும்பாலரிடம் இல்லை. மாணவர் நலனிலும் அக்கறை இல்லை. எனவே, ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அதற்கு ஒத்து ஊதித் தனக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொண்டு, பலவகையிலும் முகவர்களாகவே செயல்பட்டுத் தமக்கும், தமக்கு வேண்டியவர்களுக்கும் விருதுகளைப் பெற்றுத் தருகின்றன. இன்றைய ஆசரியர்கள் பெரும்பாலும் கல்வியாளர்களே இல்லை என்று கூறலாம். மாணவர் பற்றிச் சிறிதும் அக்கறை இல்லை. கல்வி வணிகர், தொழில் தரகர் என்றே சொல்லலாம். உண்மையான ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அறிமுகம் இன்றிக் கைம்மாறு கருதாது விளம்பரம், விருது எதிர்பார்க்காமல் பணி ஆற்றுகின்றனர்.அவர்களால்தான் கல்வி முழுவதும் சாகாமல் உள்ளது.

 

பெரியார் கருத்துக்களை தாங்கள் பல தளங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவதன் காரணம் என்ன?

இன்றைய கல்வி, அரசியல், மொழி, சமயம், சமுதாயத்தில் நிலவும் மோசமான சூழலை அறிவீர்கள். இவை அனைத்துக்கும் காரணங்களும், தீர்வுகளும் பெரியாரிடம் மட்டுமே உள்ளன. ‘இந்துத்துவா’ மீண்டும், தமிழக அரசின் உறுதுணையுடன் பேருருக் கொண்டு, அரக்கத்தனமான வலிமையுடன் வேரூன்றி வருகின்றது. சாதியால், சமயத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. மனிதர்களின் ஏற்றத்தாழ்வு கடவுளின் பெயராலும், சாதியின் பெயராலும் நிலைநிறுத்தப்பட்டு மீண்டும் சாதிக்கொரு கல்வியாகிய குருகுல முறை மீண்டும் வருகின்றது. பெரியாருக்குப் பின் துணிச்சலாக, வலிமையுடன், ஆக்கமும் தயக்கமுமின்றிப் பேசும் தலைவர்கள் இல்லாமற் போனது ஈடுசெய்ய இயலாத இழப்பு. பெரியாரின் கொள்கைகள், கருத்துகள்,கடுமையாக, வெளிப்படையாக இருப்பினும், வேறு எந்தத் தலைவரின் கொள்கைகள், மக்களின் உரிமைக்கு வழி வகுத்துச் செல்கின்றன? என்பதை நான், ஆழமாகப் படித்து ஆராய்ந்து, சிந்தித்த பின்பே பெரியாரை வலியுறுத்துகின்றேன். நான் எந்தக் கட்சியும் சார்ந்தவள் அல்லள்.

அறிவியல் வளர்ச்சியும், மனித உரிமை குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறிப்பாக வன்புணர்வு அதிகரித்துள்ளதே…

உடல் முழுவதும் போர்த்திக் கொண்டிருக்கும் பெண்கள், சிறுமியர், குழந்தைகள் முதலியோரின் உடைகள்தாம் வன்புணர்வுக்கு காரணமா? உடை என்பது அவரவர் உரிமை. ஆண்களின் உடை குறித்துப் பெண்கள் பேசுவதில்லை. ஆண்களுக்கும் ஏன் சில பெண்களுக்கும் ஏன் இந்தக் கவலை? பெண்களின் இன்றைய உடை அரசியல் உளவியல் அடிப்படையிலானது. தோள் சேலை போடக் கூடாது என்று ஒரு காலத்தில் சொன்னார்கள். இன்று போடு என்கின்றனர். உடை வழியாக உடலையும், உள்ளம் சார்ந்த தகாத காமத்தையும் நோக்கும் ஆணின், ‘வக்ர’ உணர்வுக்குப் பொறுமை இன்றி உடைகளை மாற்றிப் பழிக்குப் பழி வாங்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் வன்மம் என்றே சொல்லலாம். ஆண்கள் நெறி தவறக் கூடாது என்று பெண், தம்மை அடக்கிக் கொள்ள வேண்டுமா என்ற பெண்களின் வினாவுக்கு என்ன சொல்வீர்கள்? கற்பு என்பது என்ன, உள்ளம் சார்ந்ததா, உடல் சார்ந்ததா?கற்பு என்ற ஒன்று உண்டா என்ற வினாக்கள் எழத் தொடங்கிய போதே உடை அரசியல் தோன்றிவிட்டது. புது வெள்ளம் பொங்கிப் பலவற்றை அடித்துச் சென்றபின்புதான் அடங்கும். அதுபோன்று பெண்கள் இன்று பெற்றுள்ள உரிமைகள் அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மயக்கம் தெளியும்போது எல்லாம் சரியாகும். அவரவர் எல்லை எது என்பது அவரவரே தீர்மானிக்கும் காலம் விரைவில் வரவே செய்யும். உடை மீதான ஒரு வகையான போதை என்றே கூறலாம். போதை தெளியாமல் போவதில்லை இல்லையா?

தமிழ்த்தேசியம் குறித்த உங்கள் பார்வை..

இந்தியா என்பது ஒரு தனி நாடு இல்லை. பல தனித்தன்மையுள்ள, பல மொழிகள் பேசுகின்ற மக்கள், பல வேறுபட்ட பண்பாடுகளையுடைய மாநிலங்களின் தொகுப்பே. ஆயிரக்கணக்கான தொன்மையைச் சிறப்பை அழித்துவிட்டு, அண்மையில் தோன்றிய ஒரு மொழியின்கீழ், முற்றிலும் வேறுபட்ட சிந்தனையும், பண்பாடும், வாழ்வியலும் கொண்ட மாநிலங்கள் அடங்குவது என்பது இயற்கைக்கு மாறானது! தமிழகத்தைப் பொருத்தவரை அதன் பண்பாடும், சிந்தனையும், வடவருக்கு முற்றிலும் மாறானது.தமிழ்த் தேசியம் (அந்தந்த மாநிலங்களின் தேசியம்) முதலான மாநிலத் தேசியங்களே இந்தியாவின் வலிமையைக் காக்கும். தமிழ்,தமிழர் என்பன வெறும் மொழியும், இனமும் மட்டும் அல்ல! உலகத்துக்கே மூத்த மொழியும், மூத்த இனமும், உலக ஒருமைப்பாட்டுக்கான மனித நலச் சிந்தனைகளையும் பழைமை வாய்ந்தவை. ஓருலகம் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு வலியுறுத்திய சிறப்புடையது தமிழ்த்தேசியம்.

உங்களது நூல்கள் தனித்த பார்வையுடையன.. இது எப்படி நேர்ந்தது..? 

என் நூல்களை நான் பணத்துக்காகவோ புகழுக்காகவோ எழுதுவதில்லை. தமிழில் காலத்துக்கேற்றவாறு புதிய புதிய பார்வைகளும்,கருத்துகளும் இடம்பெற வேண்டும்; அவை தமிழை அடுத்த வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம். புதினங்கள், சமுதாய மாற்றங்களையும், சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வழிகளையும் கூறுகின்றன என்பதை முதல் நூலில் நிறுவினேன் (ரா.கி.யின் 15 புதினங்கள்). சிறுகதை எவ்வாறு ஓர் இயக்கமாகச் செயல்பட்டது என்பதை சு.சமுத்திரத்தின் சிறுகதை இயக்கத்தில் விளக்கினேன். 2,000 ஆண்டுகளாகத் தொல்காப்பிய மரபுகளே தொடர்வதைத் ‘தமிழ் இலக்கியம் மரபும், புதுமையும்’ நூலில் விளக்கியுள்ளேன். தமிழ் இலக்கியங்கள், தாம் எழுதப்பட்ட காலச் சமுதாய மக்கள் வாழ்வியலைத் தெரிவிக்கின்றன எனும் கருத்தைப் ‘படைப்பிலக்கியப் பார்வையில் தமிழ் இலக்கிய வரலாறு’ நூலில் அரண் செய்துள்ளேன்.ஈராயிரம் ஆண்டுத் தொன்மை உடைய தமிழருக்குத் தமிழின் மூல நூலாகிய புறநானூறே பேரிலக்கியமாகும் எனும் புதிய கோணத்தில் புதிய கருத்தை நிலைநாட்டியுள்ளேன்.

800 பக்கங்களில் கோவை ஞானி எழுதியுள்ள கவிதை பற்றிய நூற்கருத்துகளிலிருந்து கோவை ஞானியின் கவிதையியல் கோட்பாடுகள் வரையறை செய்யப்பெற்றுள்ளன. அவருடனான நட்புறவு குறித்து ‘நட்பிற் பெருந்தக்க யாவுள’ நூல் பேசுகின்றது.

எனது வாழ்க்கைப் போராட்த்தைத் தன் வரலாற்றுப் புதினமாக, உண்மையான நிகழ்வுகளுடன் ‘நெஞ்சக்கதவை மெல்லத் திறந்து’எனும் கதையாக்கி உள்ளேன்.

வள்ளுவனின் காமத்துப்பாலில் காணப்படும் அவனது நுண்மான் நுழைபுல நோக்கை உரை ஓவியங்களாகக் ‘காதல் வள்ளுவன்’ நூல் விரித்துரைக்கின்றது.

‘ஈழப் படைப்பாளர் எஸ்.பொ.வின் படைப்பாளுமையும், பன்முகப் பார்வையும்’ எனும் நூல் அவருடைய அனைத்துப் படைப்புகளையும் மதிப்பீடு செய்துள்ளது.

பெண்ணியக் கவிதைகள், புறக் கவிதைகள் நூற்றுக்கணக்கில் எழுதியிருந்தாலும் அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த 100 கவிதைகளை,’என் விளக்கில் உன் இருள்’ எனும் நூலாகி உள்ளது.

அக விடுதலைதான் பெண்ணுக்கு விடுதலை தரும் எனும் கருத்தை வலியுறுத்தி ‘அக விடுதலையே பெண் விடுதலை’ எனும் நூல் விரைவில் வெளிவர உள்ளது.

ஈராயிரமாண்டுக் கால இலக்கிய வரலாற்றை ‘நடந்தாய் வாழி தமிழே’ எனும் உரைக் கவிதை நூலும், என் பெற்றோர் பற்றிய சிறு நூலும் அச்சில் உள்ளன.

பழந்தமிழ்ப் பெண்பாற் புலவர்களின் அவர்கள் காலத்தை ஒட்டிய இருப்பும், வாழ்க்கை முனைப்பும் என்ற தேடலில் முனைந்துள்ளேன்.

இத்தனை நூல்களுக்கும் விளம்பரமும், சந்தைப்படுத்தலும் இல்லாமையால் பலரையும் சென்று சேரவில்லை. நூலாக்கத்துக்கான செலவும் மீளப்பெறவில்லை. இதுபற்றி நான் அவ்வளவாகக் கவலைப்படுவதும் இல்லை. என்னால் இயன்றவரை தமிழுக்குப் புதிய பணிகள் செய்ய வேண்டும் என்பதே எனது தணியாத அவா!

செவித் திறன், பேச்சுத் திறன் இழப்புக்குப் பிறகும் தொடர்ந்து அதே உற்சாகத்துடன் செயல்படுகிறீர்கள். இந்த மன உறுதி எப்படி வந்தது?

படிப்படியாகவும், ஒரே நேரத்தில் செய்யப்பெற்ற இரண்டு அறுவைச் சிகிச்சைகளாலும் இவற்றை இழந்து நிற்கின்றேன். பாடல் கேட்பதில் பெருவிருப்பும் அதைக் கேட்டவாறே காலையில் வாசலில் கோலம் போடும் அதிகாலை முதல் இரவு வரை, எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தவள்! விரைவாக எழுதுவதற்கு வானொலியின் முன் நின்று அக்காலத் திரைப்பாடல்கள் இசைக்கும்போது அவற்றை எழுதிப் பழகியவள். இன்னும் வெகுவிரைவாக எழுதவும் படிக்கவும் செய்வேன். பணி செய்யும் காலத்தில் முதல்வர்களால் பாராட்டப்பெற்று, விரும்பப்பட்ட என் கையெழுத்தும் இப்போது சிதைந்து விட்டது.

கேட்பதையும், பேசுவதையும் இழந்ததை குறையாகக் கருதாமல், ஆழமாகப் படித்தலிலும், எழுதுவதிலும் ஈடுபட வாய்ப்பு இது எனக் கருதிக் கொண்டாலும் என் சிந்தனையை, கருத்துகளைப் பிறரிடம் பகிர முடியாமலும் மூத்த தலைமுறையினர் என்ற முறையில் எனக்குத் தெரிந்தவற்றை மேடைகளில் பேச முடியாமல், பிறர் பேசுவதைக் கேட்க முடியாமற் போகும்போதும், பாடல்களை முன்புபோல் கேட்டுச் சுவைத்து மகிழ முடியாத போதும் பேரிழப்பாகப் பெரும் வலியை உணர்கின்றேன். இதனால் மன அழுத்தம்,மன உளைச்சல், வெறுமை சூழ்ந்து கொள்ள அவற்றுடன் போரட வேண்டி உள்ளது. என் மாணவியர் பலரும் என்னைப் புரிந்துகொண்டு பேரன்பு செலுத்தினர்.

பித்தோவான், ஹெலன் கெல்லர், தாமஸ் ஆல்வா எடிசன் (முகத்துக்குக் கீழே எந்த உறுப்பும் செயல்படாமல், அரிய செயல் ஆற்றியவர், பெயர் நினைவில்லை) முதலியோரை எண்ணி மனதை எனக்கு நானே தேற்றிக் கொள்வேன். பேச்சு பெருமளவு மீண்டு விட்டது. இருக்கப்போவது இன்னும் சில நாட்கள்தானே என்ற ஆறுதலும் உண்டு. சென்னை வந்த பின்பு பல பொது இடங்களுக்கு அழைத்துச்சென்றும், பலருக்கும என்னை அறிமுகப்படுத்தியும் எனது முடங்கிய நிலையிலிருந்து படிப்படியே மீட்டுக் கொண்டு வருவதில் உடன்பிறவா இளவல் ஆரூர் தமிழ்நாடனுக்குப் பெரும்பங்கு உண்டு. இந்த நன்றியை என்றும் நான் மறவேன். என்னை முழுமையாகப் புரிந்துகொண்ட அரியவர்.

நீங்கள் எழுதியவற்றில் பிடித்த தொடர் வாக்கியங்கள் சிலவற்றைக் கூறுங்களேன்..

வானம் பொது பறப்பது என் உரிமை.

ஒற்றைச் சிறகு நான் மற்றைச் சிறகு நீ காண்போம் வேறொரு வானம்.

இணைந்தபின் பிரிந்தால் வருந்துவோம் என்றுதானே பிரிவால் இணைந்தோம்.

பெண்ணுக்கு இல்லை சமநிலை எனின் அது மண்ணுக்கும் இல்லை.

எழுதுகிறேன் அதனால்தான் இருக்கின்றேன். இருக்கின்றேன் அதனால்தான் எழுதுகின்றேன்.

புதிய கல்விக் கொள்கை – இதற்கு பிரபல நடிகர் சூர்யாவின் எதிர்வினை.. உங்கள் பார்வை என்ன?

புதிய கல்விக் கொள்கை வரைவு சுருக்கத்தை ஓராண்டுக்கு முன்னரே கல்வியாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்று இது பழைய குருகுலக் கல்வி முறையின் மீட்டுருவாக்கமே என விளக்கித் தேன் தடவிய நச்சு மிட்டாய் எனப் புதுப்புனல் இதழில் மதிப்புரை எழுதியிருந்தேன். இப்போதுதான் பலரும் அதன் மையக்கருத்தையும், பரிந்துரைகளையும் அறிந்துள்ளார்கள். இன்னும் வலிமையான,எதிர்ப்பலை தோன்றவில்லை. சூரியா, நடிகர் என்பதை விட, திரையுலகுக்கு அப்பாற்பட்டு உலகியல் தெரிந்தவர். அவருடைய கருத்துகள் உண்மையே. இதுவரை கல்விக் கொள்கை வரைவின் விரிவை முழுமையாக வெளியிடாமல் வைத்திருந்து,பெரும்பான்மை வலிமை கிடைத்ததும், எதிர்ப்பின்றி அதைச் சட்டமாக்கத் துடிக்கின்றது நடுவணரசு. பெரியார் இருந்து இருப்பின் 10விழுக்காடு முற்பட்ட வகுப்புக்கான இட ஒதுக்கீடு சட்டமாகியிருக்க முடியுமா? பள்ளிகளைப் பெரும்பாலும் எல்லாக் கட்சியினரும் நடத்துவதால் கல்வி தொடர்பான எதையும் அவர்கள் உண்மையாகவும் வலிமையாகவும் எதிர்ப்பதில்லை என்பதே உண்மை!ஆசிரியர்கள் வேலைநீக்கம், ஊதிய மறுப்பு போன்றவற்றுக்கு அஞ்சிப் போராட மறுக்கின்றனர். மக்களோ இராவணன் ஆண்டால் என்ன இராமன் ஆண்டால் என்ன என்று இருக்கின்றனர். இந்தச் சூழலில் சூரியாவின் கருத்துகள் விழிப்புணர்வைத் தட்டி எழுப்பியுள்ளது என்றே கூறலாம். சட்டமாகும் முன்பு ஒன்றுபட்டுப் போராடவேண்டும். இல்லையெனில் தமிழ், தமிழகத்துக்குக் கல்வி மறுப்புதான்.

சாகித்திய அகாதமி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. உங்கள் பார்வை?

இது இப்பொழுது அரசின் ஒரு துறை ஆகிவிட்டது. மொழி உணர்வு இல்லாத தன்னலப் பற்றாளர் பரிந்துரையின் பேரில் உறுப்பினர் பதவி பெற்றுத் தமக்கு வேண்டியவர்களைக் கையூட்டு பெற்றோ, பெறாமலோ பரிந்துரைக்கின்றனர். எனவே இந்தப் பரிசுக்கு இப்போது மதிப்பு இல்லை. அது ஒரு கனாக்காலம். கல்வி உலகிலும் இலக்கிய உலகிலும் கழிவு நீர் கலந்த பின்பு எதுவும் சொல்வதற்கு இல்லை! இன்று இது நடுவண் அரசின் கையில் உள்ளது. எதிர்த்து நிற்க இயலாதவரே, விரும்பாதவரும், அரசுடன் இணைந்து செயல்படுபவருமே உறுப்பினர்கள் ஆக முடியும் என்றபோது தகுதியான பரிசும், விருதும் கானல் நீர்தான்.

பெண் படைப்பாளர்- வகைமை குறித்து?

படைப்புலகம் ஆண்கள் கையிலிருந்து பெண்கள் கைக்கும் மாறியுள்ளது. புனைகதையைப் பொருத்தவரை பெண் படைப்பாளர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிக் கொடிகட்டிப் பறக்கின்றனர். எனினும், மூத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் காணப்படும் படைப்பாற்றல் இன்னும் கைவரவில்லை எனலாம். பெண்ணியம், தலித்தியம், தொழிலியம், அரசியல் குறித்து நிறைய எழுதுகின்றனர். வியப்பாக உள்ளது.

கவிதைகளை நோக்கினால் இன்று ஏறத்தாழ எல்லாருமே எழுதுகின்றனர். மன உணர்வுகளைக் கொட்டிக் குவிக்கின்றனர். ‘கவித்துவம்’ எனப்படும் படைப்பாற்றல் வெகு சிலரிடம் மட்டுமே காணப்படுகின்றது. இரண்டு துறையிலும் பெண் படைப்பாளரை வெகு எளிதாகப் பிரித்துவிடலாம்.

  1. பொழுதுபோக்குக்காக எழுதுபவர்
  2. சமுதாய கவலையுடன் எழுதுபவர்
  3. பெண் மொழியுடன் எழுதுபவர்

பெண் மொழிக் கவிஞர்கள் பல்கி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. மொழித்திறமையைப் பொருத்தவரை இன்றைய புனைகதை,கவிதைப் படைப்பாளரிடம் அடிப்படை மொழிப்பிழைகள் இல்லாத படைப்புகளே இல்ல எனலாம். தமிழ், ஆங்கிலம், வடசொல் கலந்த கலவையாகவே அனைத்தும் உள்ளன என்பது வருந்தத்தக்கது. எது கவிதை என்பதற்கு இலக்கணம் இல்லை என்றாலும் கவிதை இல்லாத கவிதைகளே பெரும்பான்மையும் உள்ளன என்பது என் கருத்து. இது தவறாகவும் இருக்கலாம்.

இன்றைய சூழலில் பேசக்கூடாத கருத்து?

இன்றைய சூழல் என்பதன் பொருள் புரியவில்லை. குழப்பமான சூழலா? மாற்றம் நோக்கிய சூழலா? மாற்றம் நோக்கிய சூழல் என்றால், சாதி உயர்வு, தாழ்வு, சமய வழிபாடுகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகள், மனிதத்தை மாய்க்கும் நுகர்வியல் வெறி,தெலுங்கர், கன்னடர், தமிழர் என்ற வேறுபாடு, திராவிடர் – தமிழர் என்ற அவற்றின் வரலாறு தெரியாத பிதற்றல்கள், ஊழல்,கையூட்டு, பதவிசுகம், தன்னலம், சொத்துக்குவிப்பு முதலியவற்றால் மடியும் மக்களாட்சி மீட்பு, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் நடுவணரசைப்போற்றுதல் முதலான எண்ணற்றவை பேசுவதற்கே தகுதியும் தேவையும் அற்றவை.

பேச வேண்டிய கருத்து

தமிழ்த் தேசியம், மாநிலங்களின் தனி உரிமை, தமிழர் என்ற பிரிவுகளற்ற ஒற்றுமை, நடுவணரசின் வல்லாண்மை, இந்துத்துவா,ஒரே நாடு ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை என்ற சூழ்ச்சி, இந்தித் திணிப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, தனி மனித உரிமை, பெண்ணின் அகவிடுதலை, தாய்மொழி வழிக் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர்ச் சேகரிப்பு, மணல், நிலத்தடி நீர்க் கொள்கை, மேலைநாட்டுப் பண்பாடு என வரிசை கட்டி நிற்கின்றனவே.

மொழி மீதான பண்பாட்டுப் படையெடுப்பு குறித்து  என்ன நினைக்கிறீர்கள்?

தொன்மை வாய்ந்த தமிழை அழிப்பதற்கு நீண்டகாலப் படையெடுப்பு தொடர்ந்து நடக்கின்றது. தமிழ்மொழியைத் தமிழரே அழிக்கும் வகையில் பன்னாட்டுப் பொருளியல், மேலைநாட்டு நாகரிகம், ஆங்கிலப் பற்று, ஓருலகம் என்ற தவறான புரிதல்,நுகர்வியல் வாழ்க்கை முதலான வலிமையான கூறுகள், தமிழ்ப் பாண்பாட்டுப் பகைவருக்கு பெருந் துணை செய்கின்றன. மொழி உணர்வை, வெறி என்று கருதும் போக்கு தோன்றியுள்ளது. படைப்பாளர்கள், கவிஞர்கள் உட்பட ஊடகங்கள் இப் பண்பாட்டுப் படையெடுப்புக்குத் தம்மையும அறியாமலோ, அறிந்தோ இடரற்ற எளிய வழி அமைத்துக் கொடுத்து வருகின்றனர்.

மொழியை அழித்தால் அந்த இனமும், பண்பாடும் அழியும். தமிழ்ப் பண்பாடு அறிவார்ந்த உலக மக்களுக்குப் பொதுவானது என்பதை மேலைநாட்டு அறிஞர்கள் அறிந்த அளவுக்கு இன்றைய தலைமுறை அறியவில்லை. அதனாலும், இப்படையெடுப்பு கடுமையான எதிர்ப்பின்றி எல்லாக் கூறுகளிலும் ஒவ்வொரு நொடியிலும் நடந்துகொண்டே உள்ளது.

வீட்டளவில் சுருங்கிவிட்டது தமிழ்த்தேசியம் என்ற ஒரு கருத்து குறித்து?

இந்த வினாவே தவறு! இப்போது எந்த வீட்டில் யார் தமிழ் பேசுகின்றனர்? பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதையே பெற்றோர் விரும்புகின்றனர். வீட்டில் பயன்படுத்தும் தொலைக்காட்சி, கணினி, அலைபேசி முதலானவற்றில் தமிழ் எங்கே உள்ளது? ஆங்கிலம் இல்லாத தமிழ் எங்கே உள்ளது? தாம் பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்பதே அறியாத பிள்ளைகளே மிகுதி. தமிழ் என்பதை எத்துனைப் பேர் சரியாக ஒலிக்கின்றனர். எனவே தமிழ் வீட்டிலும் இல்லை; வெளியிலும் இல்லை. பள்ளி, கல்லூரிகளிலும் இல்லை.தாய்மொழி என்ற அளவிலும் ஆங்கிலம் தெரியாத போதும் தமிழ் இடைச்செருகலாகவே இடம்பெற்றுள்ளது. தூய தமிழ் வேறு, நல்ல தமிழ் வேறு. இரண்டுக்கும் வேறுபாடு இன்றித் தூயதமிழ் பேச வேண்டும் என்பது தமிழ் வெறி, முட்டாள்தனம் என்றெல்லாம் ஊடகங்கள், பலரையும் பேசவைத்து வெளியிடுகின்றன. தமிழ் சிறப்பான மொழியாம். உயரிய மொழியாம். ஆனால், தமிழில் பேசவேண்டும் என்பது முட்டாள்தனமாம்!

எழுதாமல், பேசாமல் ஒரு மொழி எப்படி வளரும்? அதன் சிறப்பு காக்கப்படும்? என்பது புரியவில்லை. யூதர்கள் அழிக்கப்பட்டபோது,ஈப்ரூ மொழியும் அழிந்தது. பின்னர், அவர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டபோது உலகெங்கிலும் புலம்பெயர்ந்து வாழ்ந்த யூதர்களான பேராசிரியர்கள், அறிஞர்கள் நாடு திரும்பித் தம் மொழியை மீண்டும் உயிர்ப்பித்தார்கள். தமிழ் அழிந்தால் இப்படி மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா என்பது அய்யமே! யூதர்களுக்குப் போன்ற மொழிப்பற்றும், மொழி அறிவும் எதிர்காலத் தமிழருக்கு இருக்குமா என்பது அய்யமே!

திருமணம், குடும்பம் பற்றிய பெண்ணுரிமைக் கருத்துகள் வலுவிலந்து வருகின்றனவா?

பெண்கள் இப்போது பேசுவதில் தவறு இல்லை. திருமணம், குடும்பம் என்ற இரண்டுமே அவளது இருப்புக்கும் (சுயம்) தடையாக இருப்பதை இப்போது உணர்ந்துள்ளனர். திருமணம் என்ற பெயரில் முன்பின் தெரியாத ஆணும், பெண்ணும் இணைகின்றனர்.மணநாளில், பெண்ணுக்கு ஒப்பனை, மந்திரம் என்ற வகையில் பல இழிவுகள்! பெண் விருப்பத்துக்கு முற்றிலும இடமில்லை.படித்துப் பணியில் இருந்தாலும் வீட்டு வேலைகள், குழந்தை பேணல், ஆணுக்கு காலை முதல் இரவு வரை பணிவிடை செய்தல் என்ற கட்டாய மரபுகள். தாய்மை, பெண்மை, இல்லத்தரசி போன்ற பெயரில், உள்நோக்கமுடையனவே. திருமணம் புனிதமாகக் கருதப்படுவது ஏன்? கணவனின் விருப்பங்களும், தேவைகளுமே குடும்பத்தில் முதன்மையாகக் கருதப்படுகின்றன. பெண்ணின் விருப்பம், தேவை, உணர்ச்சி மதிக்கப்படுவதில்லை, மிதிக்கப்படுகின்றன. எதிர்த்துப் போராடினால் வீட்டில் அமைதி இல்லை;மறைமுக எதிர்ப்பு! வெளியே வந்துவிட்டால் பாதுகாப்பு இல்லை. எனவே, பெண் தன் உணர்வுகளைக் கொன்றுவிட்டு உள்ளே குமுறி வெளியே அமைதியாக இருக்க வேண்டிய நிலை!

பழைய காலத்தில் பெண்ணுக்குக் கல்வி, வேலை, பொருளியல் விடுதலை இல்லை. அதனால் ஆணைச் சார்ந்தே வாழ வேண்டிய இருந்தது. அதனால் திருமணம் கட்டாயமாகவும், தன் சொத்துரிமையைக் காக்க வேண்டிக் குழந்தைக்காகவும், திருமணம் என்ற ஒன்று தேவையாக இருந்தது. இப்போது அப்படியான நிலை இல்லை. ஒருபுறம் மக்கட்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல கோடிகள் அரசால் செலவு செய்யப்படுகின்றன. பெண், தனித்து நிற்கக் கல்வி முதலிய அனைத்தும் கிட்டியுள்ளன. பெண்ணுக்கு உரிமையும், முதன்மையும் தராது, பாலுணர்வு உட்பட அனைத்தையும் அடக்கி அடிமைகள் போல் வாழ வேண்டிய குடும்ப அமைப்பைத் தகர்க்க முயல்கின்றனர். ஆண் ஓர் அலகு, பெண் ஓர் அலகு (unit) எனக் கொள்ளப்பட்டால் ஒழிய, குடும்பமும்,திருமணமும் பெண்ணின் மீது திணிக்கப்படும் வன்முறைகளே! நல்ல நீரில் கலந்துவிட்ட கழிவுநீரை வெளியேற்றத் தொட்டியை உடைத்து, இடித்துவிட்டுப் புதிதாகத்தான் கட்ட வேண்டும். அமைதியான ஆனால் கடுமையான வன்முறை நிலவும் குடும்பம் தொடரும்வரை இது பெண்களால் மீறப்படும் புரையோடிச் சீழ்பிடித்து நாறும் புண்ணைப் புனுகு, சவ்வாதும், சந்தனமும் பூசி மறைத்தால் ஆறுமா? உடல் தேறுமா? அறுத்தெறிந்தால் மட்டுமே உடலையும், உயிரையும் காப்பாற்ற முடியும். இவ்வாறான செயல்தான் திருமணம், குடும்பம் பற்றிய பெண்ணுரிமைக் கருத்து எனக் கொள்வதே அறிவு சார்ந்தது.

இந்தி திணிப்பு குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்கிறீர்களே..?

காங்கிரஸ், பாரதிய ஜனதா தளக் கட்சிகள் இரண்டுமே இந்தியை ஆட்சி மொழியாக்கத் துடிப்பவர்கள். இந்தியை ஆட்சி மொழியாக்கி, இந்துத்துவாவை நிலைநிறுத்துவதே குறிக்கோள். மாணவர் நலன், மக்கள் நலன் என மும்மொழிக கொள்கையைப் பரப்பி, இடைவிடாது பரப்புரை செய்கின்றனர். இதன் உள்நோக்கம் புரியாது இங்குள்ளவர்களும் மும்மொழிக் கொள்கை நல்லது தானே என்று ஒத்து ஊதுகின்றனர். இந்தியைத் தடுக்க ஆங்கிலத்தைக் கொண்டுவந்து தமிழ் மறைந்து வருகின்றது.

பிற மாநிலங்களுக்கு இந்தியால் சிக்கல் இல்லை. அந்த மாநில மொழிகள் சமஸ்கிருதக் கலப்புடையவை. ஆனால் தமிழ் அப்படி இல்லை! தொன்மையான வளமான அறிவார்ந்த இலக்கணம், இலக்கியங்கள் கொண்ட மொழி, உலகின் முதல் மொழி. இந்தப் பெருமையை அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் தீராத ஆவல்! பெரும்பாலோர் பேசும் மொழி எனக் கூறப்படுகின்றது வளமற்ற மொழி. இந்தி வெறியர்கள் தம் மொழியைப் பரப்பும் முயற்சிக்கு ஏற்ப, நம்மவர்கள் முயற்சி இல்லை. அரசே நடுவண் அரசுக்கு அடிமையாக இருக்கும்போது இந்தி நுழைவதற்கு எந்தத் தடையும் இல்லை!

இளந்தலைமுறையினருக்குத் தமிழின் வளம் அருமை தெரியவில்லை. கற்றுக் கொடுப்பாரும் இல்லை. பிறமாநிலங்களில் வேலைவாய்ப்பு என்ற ஆசை காட்டப்படுகின்றது. பலமொழிகள் பேசும் நாட்டில், ஒரு மொழியை ஆட்சி மொழியாக்குவது எவ்வகையிலும் ஏற்க முடியாத ஒன்று! அரசும், அரசின் வழி மக்களும் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும். ஆனால் இவை இரண்டுமே மரத்துப்போய்விட்ட நிலை! காலம்தான் இதற்குத் தீர்வு காண வேண்டும்.

 நேர்காணல்:  திருவாளர் திருவாரூரான்